மேன்மையான குணம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, 13.2.19 முதல் 31.8.20 வரை உங்கள் ராசிக்கு ராகு, கேதுவின் சஞ்சாரம் பல நன்மைகளை வாரி வழங்கப்போகிறது.
ராசிக்கு 3-ல் இருந்தபடி புதிய திருப்பங் களுடன், பணவரவு, பிரபலங்களின் நட்பு என்று பலன்களைத் தந்த ராகு, தற்போது 2-ல் அமர்ந்து பலன் தரவிருக்கிறார்.
ஆகவே, தடைப்பட்டு வந்த பல காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனால் அவர், வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால், பேச்சினால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். சமயோசிதமாகச் சிந்தித்துப் பேசவேண்டியது அவசியம். நீங்கள் நல்லதைச் சொல்லப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சூழல் ஏற்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம்.
குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். எதிர்பாராதச் செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து போனாலும், மகிழ்ச்சிக்குக் குறையிருக் காது. தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் சிறப்பான முறையில் நடைபெறும்.
பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில், உங்களின் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வீர்கள். சகோதர சகோதரிகளுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபங்கள் நீங்கி, அவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்கள், இப்போது திருப்பித் தருவார்கள். வெகுநாள் களாகச் சந்திக்காமலிருந்த நண்பர்கள் இப்போது தேடி வருவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளிடம் இருந்த முரட்டு குணமும் பிடிவாதப் போக்கும் மாறும்.
மகளுக்கு நீங்கள் விரும்பியபடியே வெளி நாட்டில் வேலை பார்க்கும் வரன் அமையும். மகனுக்கு உயர்கல்வியைத் தொடர்வதில் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும். அடிக்கடி வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதால், சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட நேரிடலாம்; கவனம் தேவை.
வெளியிடங்களில் எவரையும் விமர்சித்துப் பேசவேண்டாம். ஆவணங்களில் கையெழுத் திடும்போது ஒன்றுக்கு இரண்டு முறை படித்துப் பார்த்து கையெழுத்துப் போடுவதன் மூலம் வில்லங்கம் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள், இதுவரை இருந்துவந்த சோம்பலும் தயக்கமும் மாறி, சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பொருள் சார்ந்து சிற்சில இழப்புகளும் நஷ்டங்களும் உண்டாகலாம். ஆகவே, விலையுயர்ந்த பொருள்களை மற்றவர்களுக்குக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
வியாபாரத்தில் பழைய பிரச்னைகளைத் தீர்க்க புது வழி கிடைக்கும். முன்பு போல் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, புதுப் புது யுக்தி களைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை அழகு படுத்துவீர்கள். பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தி, அவர்கள் ஊக்கத்துடன் செயல்படும் படிச் செய்வீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில், உங்களுக்குத் தொல்லை தந்து வந்த மேலதிகாரி, இனி உங்களிடம் இணக்கமாக நடந்துகொள்வார். அவர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உங்களது பொறுப்பு உணர்ச்சியைக் கண்டு, சலுகைகளுடன் பதவி உயர்வும் தருவார்.
ஆனால், சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணினித் துறையில் இருப்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்தாலும், யோசித்து முடிவெடுப்பது நல்லது.
கலைத்துறையினருக்குத் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வருவதுடன், புதிய வாய்ப்பு களும் கிடைக்கும். பழைய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். நீங்கள் எதிர்பார்த்தபடி வசதி வாய்ப்புகள் கிடைக்கும்; முன்னேற்றம் உண்டாகும்.
இதுவரை ராசிக்கு 9-ல் இருந்த கேது, தந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பைத் தந்த துடன், அவருடன் தேவையற்ற மனஸ்தாபங் களையும் ஏற்படுத்தினார். தற்போது கேது 8-ல் இருப்பதால் கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மன நிம்மதிக்குக் குறைவிருக்காது.
நீங்களாக ஒரு முடிவுக்கு வராமல், எந்த விஷயத்திலும் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். வெளிவட்டாரத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். மற்றவர்களுடன் கனிவாகப் பேசுவது அவசியம்.
கணவன் – மனைவிக்கிடையே போட்டி மனப்பான்மை இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். உறவினர்கள் உங்களிடம் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.
திடீர்ப் பயணங்களால் கையிருப்பு கரையும். அவ்வப்போது மனதில் இனம் தெரியாத அச்சம் ஏற்பட்டு நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். யோகா, தியானம் ஆகியவற்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக் கும். வேலையாள்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். நேரம் தவறி வீட்டுக்குச் செல்வதால், குடும்பத்தில் சின்னச் சின்ன கருத்துமோதல்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துச் செய்யவேண்டி வரும். எனினும் சமாளிப்பீர்கள்.
மொத்தத்தில் இந்த ராகு – கேது பெயர்ச்சி, அலைச்சலையும் வீண் அச்சத்தை ஏற்படுத்துவது போல் இருந்தாலும், அதீத ஆதாயத்தையும் செல்வாக்கையும் பெற்றுத் தருவதாக அமையும்.
தினமும் விநாயகப்பெருமானை தவறாமல் வழிபடுங்கள். அருகிலுள்ள ஆலயம் சென்று பிள்ளையாருக்கு அருகம்புல் சமர்ப்பித்து வழிபடுங்கள்; வாழ்க்கைச் செழிக்கும்.