சீரடி சாய்பாபாவை வேண்டிக் கொண்டு, வியாழக்கிழமை தோறும் 9 வாரங்கள் விரதம் இருந்தால்… நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை சாய் பக்தர்களிடையே சமீபகாலமாக மிக வேகமாக பரவி வருகிறது.
சாய்பாபாவை நினைத்து மேற்கொள்ளும் இந்த விரதம் மிக, மிக எளிதானது. சுலபமாக கடை பிடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இதனால் 9 வாரம் வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.
இந்த விரதத்தை ஆண்-பெண் இரு பாலரும் கடை பிடிக்கலாம். விரதம் இருக்கும் 9 வியாழக்கிழமைகளில் காலை- மாலை இரு நேரமும் ஆலயத்துக்குச் சென்று பாபாவை வழிபடுவது நல்லது. வெளியூர் பயணம் செய்ய நேரிட்டாலும் இந்த விரதத்தை தொடரலாம்.
பெண்களுக்கு விலக்கு தொடர்பான உபாதைகள் ஏற்பட்டால் அந்த வாரம் விட்டு விட்டு, அடுத்த வாரம் விரதத்தை தொடரலாம். பெண்கள் இடையில் ஒரு வாரம் விரதம் இருக்க இயலாமல் போனாலும் பிரச்சினை இல்லை. இப்படி 9 வார விரதத்துக்கு சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
9-வது வாரம் விரதம் நிறைவு பெறும் போது, 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று ஒரு விதி உள்ளது. ஆனால் நிறைய பேரால் நேரடியாக உணவு அளிக்க முடிவதில்லை.
அத்தகைய நிலையில் இருப்பவர்கள் வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்படும் பாபா ஆலயங்களில், அதற்கான பணத்தை வழங்கலாம் என்று விரத விதிமுறைகளில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விரத முறைகளின் படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக நினைத்தது நடக்கும் என்பது சாய் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
சில பக்தர்கள், வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால், நாள் முழுக்க பாபா நினைவுடன் இருக்க முடிகிறது. எனவே பாபாவை நெருங்குவதற்கு இந்த விரதம் உதவியாக இருக்கிறது என்கிறார்கள்.