மேஷம் முதல் மீனம் வரை ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்!

மேஷம்

முற்போக்கு சிந்தனை கொண்ட மேஷ ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை உங்கள் ராசிக்கு ராகு, கேதுவின் சஞ்சாரத்தால் உற்சாகம் பொங்கும். மங்கல காரியங்கள் ஸித்திக்கும். வீடு கட்டும் கனவு நிறைவேறும்; பெண்களின் எண்ணம் பூர்த்தியாகும்.

உங்களைப் பல வழிகளிலும் அலைக்கழித்துக் கொண்டிருந்த ராகு, தற்போது 3-ம் இடத்துக்கு வருகிறார். புதிய முயற்சிகள் பலிதமாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகளையும், அவருடன் மனஸ்தாபத்தையும் ஏற்படுத்திய நிலை மாறும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சோம்பல், அலட்சியம் ஆகியவை நீங்கி உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

சவாலான விஷயங்களையும் சர்வ சாதாரண மாகச் செய்து முடிப்பீர்கள். வீட்டில் இதுவரை ஏற்பட்ட டென்ஷன், மன உளைச்சல் ஆகியவை நீங்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

கணவன்-மனைவிக்கிடையே குழப்பம் ஏற்படுத்தி, கலகம் விளைவித்த நபர்களை அடையாளம் கண்டு, ஒதுக்கித் தள்ளுவீர்கள். அரைகுறையாக நின்றுவிட்ட பல வேலைகளை எளிதாகச் செய்து முடிப்பீர்கள். பணம் வாங்கிக் கொண்டு திருப்பித் தராதவர்கள் இப்போது தானாக முன்வந்து திருப்பித் தருவார்கள். அதேபோல், நீங்கள் வாங்கிய கடன்களையும் தந்து, கம்பீரமாக வலம் வருவீர்கள். உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு உறவினர்கள் வியப்பார்கள்.

பிள்ளைகளின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அவர்களை மேற்படிப்பு, வேலை காரணமாக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். கல்யாணம் தடைப்பட்டுக் கொண் டிருந்த மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். மகளின் திருமணத்தை விமர்சை யாக நடத்தி முடிப்பீர்கள். திருமணம் ஆகி, குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்ட வர்களுக்கு, இந்த காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பி-கள், கல்வியாளர்கள், ஆன்மிகவாதிகள் என உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். இளைய சகோதரர் வகையில் மனஸ்தாபம் வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்.

தாய்வழி உறவினர் மத்தியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வீட்டில் பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். நீங்கள் வெகுநாள்களாக மனதுக்குள்ளேயே கட்டிவைத்திருந்த கனவு வீட்டை, இப்போது நிஜமாகக் கட்டும் வாய்ப்பு அமையும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். சிலர், இருக்கும் வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.

பெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அவர்களுக்குப் பெற்றோரின் ஆதரவு உண்டு. தடைப்பட்ட கல்வி தொடரும். உடல் ஆரோக் கியம் மேம்படும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நஷ்டங்களை இனி ஈடுகட்டும் அளவுக்கு உங்களின் அணுகுமுறை மாறும். போட்டியா ளர்களே திகைக்கும் அளவுக்குப் புது யுக்தி களைக் கையாளுவீர்கள். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள். ஷேர் மூலம் ஆதாயம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.

உத்தியோகத்தில், அலட்சியப்படுத்திய மேலதிகாரி, இனி உங்களுக்கு இணக்கமாக இருந்து, ஆதரவு தருவார். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கும்.

கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வீர்கள். உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள்.

இதுவரை, உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்தில் அமர்ந்து எந்தப் பணிகளையும் செய்யவிடாமல், தடுமாற்றத்தையும், தயக்கத்தையும், வீண் குழப்பத்தையும், பழியையும் தந்த கேதுபகவான், இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் அமர்கிறார்.

ஆகவே, சமயோசித புத்தியுடன் செயல்பட வைப்பார். குடும்பத்தில் நிலவி வந்த குழப்ப நிலை மாறும். வாழ்க்கைத்துணையின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். பணப்பற்றாக்குறை நீங்கும். வருங்காலத்துக் காகச் சேமிக்கவும் செய்வீர்கள். உடன் பிறந்தோரின் ஆதரவு உண்டு.

உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. அவருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து, அனுசரித்துச் செல்லுங்கள். தந்தை வழி சொத்துகளால் அலைச்சல்களும், செலவு களும் ஏற்படும். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் உங்களின் நிலைமை யைப் புரிந்துகொள்வார்கள். வேலையின்றி தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாள்களின் ஒத்துழைப்பு மிக நன்றாக இருக்கும். உத்தியோகத்தில், தேங்கிக்கிடக்கும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டியது அவசியம். பணி சார்ந்து நிலுவையில் இருக்கும் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை குறையும். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். சலுகைகளுடன் கூடிய நல்ல வாய்ப்புகள் ஏற்படும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, ஒரு தீர்வு கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்த உங்களுக்கு நல்ல தீர்வை தருவதாகவும், உங் களைச் சாதிக்க வைப்பதாகவும் அமையும். ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கலும் செவ்வரளி மாலையும் சமர்ப்பித்து வழிபடுங்கள்; சகலமும் நன்மையாகவே அமையும்.

ரிஷபம்

மேன்மையான குணம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, 13.2.19 முதல் 31.8.20 வரை உங்கள் ராசிக்கு ராகு, கேதுவின் சஞ்சாரம் பல நன்மைகளை வாரி வழங்கப்போகிறது.

ராசிக்கு 3-ல் இருந்தபடி புதிய திருப்பங் களுடன், பணவரவு, பிரபலங்களின் நட்பு என்று பலன்களைத் தந்த ராகு, தற்போது 2-ல் அமர்ந்து பலன் தரவிருக்கிறார்.

ஆகவே, தடைப்பட்டு வந்த பல காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனால் அவர், வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால், பேச்சினால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். சமயோசிதமாகச் சிந்தித்துப் பேசவேண்டியது அவசியம். நீங்கள் நல்லதைச் சொல்லப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சூழல் ஏற்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம்.

குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். எதிர்பாராதச் செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து போனாலும், மகிழ்ச்சிக்குக் குறையிருக் காது. தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் சிறப்பான முறையில் நடைபெறும்.

பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில், உங்களின் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வீர்கள். சகோதர சகோதரிகளுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபங்கள் நீங்கி, அவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்கள், இப்போது திருப்பித் தருவார்கள். வெகுநாள் களாகச் சந்திக்காமலிருந்த நண்பர்கள் இப்போது தேடி வருவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளிடம் இருந்த முரட்டு குணமும் பிடிவாதப் போக்கும் மாறும்.

மகளுக்கு நீங்கள் விரும்பியபடியே வெளி நாட்டில் வேலை பார்க்கும் வரன் அமையும். மகனுக்கு உயர்கல்வியைத் தொடர்வதில் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும். அடிக்கடி வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதால், சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட நேரிடலாம்; கவனம் தேவை.

வெளியிடங்களில் எவரையும் விமர்சித்துப் பேசவேண்டாம். ஆவணங்களில் கையெழுத் திடும்போது ஒன்றுக்கு இரண்டு முறை படித்துப் பார்த்து கையெழுத்துப் போடுவதன் மூலம் வில்லங்கம் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள், இதுவரை இருந்துவந்த சோம்பலும் தயக்கமும் மாறி, சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பொருள் சார்ந்து சிற்சில இழப்புகளும் நஷ்டங்களும் உண்டாகலாம். ஆகவே, விலையுயர்ந்த பொருள்களை மற்றவர்களுக்குக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் பழைய பிரச்னைகளைத் தீர்க்க புது வழி கிடைக்கும். முன்பு போல் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, புதுப் புது யுக்தி களைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை அழகு படுத்துவீர்கள். பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தி, அவர்கள் ஊக்கத்துடன் செயல்படும் படிச் செய்வீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில், உங்களுக்குத் தொல்லை தந்து வந்த மேலதிகாரி, இனி உங்களிடம் இணக்கமாக நடந்துகொள்வார். அவர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உங்களது பொறுப்பு உணர்ச்சியைக் கண்டு, சலுகைகளுடன் பதவி உயர்வும் தருவார்.

ஆனால், சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணினித் துறையில் இருப்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்தாலும், யோசித்து முடிவெடுப்பது நல்லது.

கலைத்துறையினருக்குத் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வருவதுடன், புதிய வாய்ப்பு களும் கிடைக்கும். பழைய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். நீங்கள் எதிர்பார்த்தபடி வசதி வாய்ப்புகள் கிடைக்கும்; முன்னேற்றம் உண்டாகும்.

இதுவரை ராசிக்கு 9-ல் இருந்த கேது, தந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பைத் தந்த துடன், அவருடன் தேவையற்ற மனஸ்தாபங் களையும் ஏற்படுத்தினார். தற்போது கேது 8-ல் இருப்பதால் கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மன நிம்மதிக்குக் குறைவிருக்காது.

நீங்களாக ஒரு முடிவுக்கு வராமல், எந்த விஷயத்திலும் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். வெளிவட்டாரத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். மற்றவர்களுடன் கனிவாகப் பேசுவது அவசியம்.

கணவன் – மனைவிக்கிடையே போட்டி மனப்பான்மை இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். உறவினர்கள் உங்களிடம் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.

திடீர்ப் பயணங்களால் கையிருப்பு கரையும். அவ்வப்போது மனதில் இனம் தெரியாத அச்சம் ஏற்பட்டு நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். யோகா, தியானம் ஆகியவற்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக் கும். வேலையாள்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். நேரம் தவறி வீட்டுக்குச் செல்வதால், குடும்பத்தில் சின்னச் சின்ன கருத்துமோதல்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துச் செய்யவேண்டி வரும். எனினும் சமாளிப்பீர்கள்.

மொத்தத்தில் இந்த ராகு – கேது பெயர்ச்சி, அலைச்சலையும் வீண் அச்சத்தை ஏற்படுத்துவது போல் இருந்தாலும், அதீத ஆதாயத்தையும் செல்வாக்கையும் பெற்றுத் தருவதாக அமையும்.

தினமும் விநாயகப்பெருமானை தவறாமல் வழிபடுங்கள். அருகிலுள்ள ஆலயம் சென்று பிள்ளையாருக்கு அருகம்புல் சமர்ப்பித்து வழிபடுங்கள்; வாழ்க்கைச் செழிக்கும்.

மிதுனம்

கலகலப்பான பேச்சும் துடிப்பும் மிகுந்த மிதுன ராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த ராகு, கேது சஞ்சாரம் 13.2.19 முதல் 31.8.20 வரையிலும் மாறுபட்ட பலன்களை அருளப் போகிறார்கள். தெய்வப்பலம் கைகூடும்.

ராகு பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் உட்கார்ந்துகொண்டு மனப் போராட்டங் களையும், வீண் அலைச்சலையும், காரியத் தடைகளையும் கொடுத்து வந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்கிறார். ஆகவே, உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். உங்களை சிலர் அவமதித்து பேசினாலும் அதற்குத் தக்கபதிலடி தருவீர்கள்.

குடும்பத்தில் அவ்வப்போது வாக்குவாதங்கள் வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது. பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அவர்களின் வருங் காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். படிப்பின் மீது இருந்த அலட்சியம் மாறும். இருந்தாலும் பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். அவரின் கல்யாணத்தை உறவினர்கள், நண்பர்கள் மெச்சும்படி நடத்துவீர்கள்.

பண வரவு அதிகரிக்கும் என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்கள் வரும். வீண் கெளரவத்துக்காகப் பணத்தை வாரி இறைக்காதீர்கள். தலைச்சுற்றல், முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்கவேண்டாம். உடன்பிறந்தவர்கள் இனி தேடி வந்து உதவுவார்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தெய்வ பலத்தால் பிரச்னைகளைச் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும்.

சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்தை கவனமாகக் கையாளுங்கள். பங்காளிப் பிரச்னைகள் தலைதூக்கலாம்.

உறவினர்களில் சிலர், உங்களின் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் உதவி கேட்டு வந்து நிற்பார்கள். வீண் பகை, மனக் கசப்புகள் வரும். வெளி உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். நேரம் கடந்து சாப்பிடும் வழக்கத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள்.

கன்னிப்பெண்களே! மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்காதீர்கள். பெற்றோரின் பேச்சிக்குச் செவிசாயுங்கள். தடைபட்ட கல்யா ணம் கூடி வரும். இசை, நடனத்தில் சிறந்து விளங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் தலைமையை விமர்சித்துப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. உட்கட்சி பூசலில் தலையிடவேண்டாம்.

வியாபாரத்தில் மற்றவர்கள் சொல்கிறார்கள் என நம்பி, எந்தவொரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். அதேபோல், பெரிய முதலீடுகளையும் இந்த காலகட்டத்தில் தவிர்க்கவும். இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். போட்டி யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங் கள். வேலையாள்கள் அடிக்கடி விடுப்பில் சென்று உங்களை டென்ஷாக்குவார்கள். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல், நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.

கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் கெடுபிடி காட்டினாலும் அவர்களுடன் சச்சரவில் ஈடுபட வேண்டாம். அவர்களை விட்டுப்பிடிக்கவும். புது ஆர்டர்கள், ஏஜென்சிகள் எடுப்பதில் தடையும் தாமதமும் ஏற்படும். எனினும் அவற்றைப் போராடி பெறுவீர்கள்.

அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை, உடனுக்குடன் செலுத்திவிடுவது நல்லது. அந்த விஷயத்தில் தாமதம் வேண்டாம்.

உத்தியோகத்தில், உங்களின் திறமையை அனைவரும் உணர்வார்கள். தடைப்பட்ட உரிமைகளும் சலுகைகளும் இனி தாமதமின்றி கிடைக்கும். கணினித் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர் களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பரிசு, பாராட்டுகள் குவியும்.

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்துகொண்டு நிம்மதி இல்லாமலும், சரியான தூக்கமில்லாமலும் துரத்தியடித்த கேது பகவான் இப்போது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார்.

உங்கள் ஆழ்மனதில் இருந்த பயம் விலகும். எதிர்ப்புகள் அடங்கும். உங்களைக் குறை கூறியவர்கள் இனி புகழ்ந்து பேசுவார்கள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலனுக்காக முக்கிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரியின் திருமணத்தைல் கோலாகலமாக நடத்துவீர்கள். 7-ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன், மனைவிக்குள் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். எனினும், ஒருவருக்கொருவர் சந்தேகப்படுவதை தவிர்க்கவும். அந்தரங்க விஷயங்களை யாரிட மும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

சொத்துப் பிரச்னை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்லவேண்டாம். நன்றி மறந்த வர்களை நினைத்து அவ்வப்போது வருத்தப் படுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும்.குலதெய்வத்துக்கான நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் போட்ட முதலை எடுப்பதற்கே பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டி வரும். பங்குதாரர்களுடன் கருத்துமோதல்கள் வந்து நீங்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். வேலையாள்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிடவேண்டாம். உத்தி யோகத்தில் பதவி உயரும். மேலதிகாரியை பகைக்கவேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் நேர்ப்பாதையில் செல்வது நல்லது.

மொத்தத்தில் இந்த ராகு, கேதுப் பெயர்ச்சி, கவலைகளிலிருந்து உங்களை விடுவிப்பதுடன், எதார்த்தமான முடிவுகளால் முன்னேற வைப்ப தாக அமையும்.

உங்களுக்குப் பெருமாள் வழிபாடு துணை சேர்க்கும். எதிர்காலம் சிறக்க, திருவோண விரதம் இருந்து பலன் பெறுங்கள்.

கடகம்

எதையும் துல்லியமாகச் செய்துமுடிக்கும் கடகராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரையிலான காலகட்டத்தில், ராகு-கேது சஞ்சாரம், பல நல்ல தீர்வுகளை உங்களுக்கு அளிக்கப்போகிறார்கள்.

இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு திக்கு திசையறியாது திண்டாடவைத்ததுடன், காரணகாரியமே இல்லாமல் பிரச்னைகளில் சிக்கவைத்த ராகு, இப்போது ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார்.

ஆகவே, நிம்மதி பிறக்கும். அடிக்கடி தலை வலி, முதுகுவலி, கால் வலி என முடங்கிய நீங்கள், இனி நோயிலிருந்து விடுபட்டு முக மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தைரியம் கூடும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். இனி நிம்மதியாக உறக்கம் வரும்.

மற்றவர்களுக்கு உதவப் போய் நீங்கள் பிரச்னைகளில் சிக்கித் தவித்தீர்களே! அந்த நிலை இனி மெள்ள மெள்ள மாறும். குடும்பத்தில் பிரச்னைகள் அனைத்தும் விலகி, சந்தோஷம் குடிகொள்ளும்.

சந்தேகத்தாலும், வாக்குவாதத்தாலும் பிரிந் திருந்த கணவன், மனைவி ஒன்று சேர்வீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில் அடுத்தடுத்து கல்யாணம், கிரகப் பிரவேசம் என நல்லதெல்லாம் நடந்துக் கொண்டேயிருக்கும். தூரத்து உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள்.

தாயாருக்கு இருந்து வந்த மூட்டுவலி விலகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். பிள்ளை களிடம் பாசமாக நடந்துகொள்வீர்கள். அவர் களின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய் வீர்கள்.

உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை அயல்நாட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். உடன்பிறந்தோர் இனி ஒத்தாசை யாக நடந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். இயக்கம், சங்கம், டிரஸ்ட் ஆகியவை சார்ந்த கெளரவ பதவிகள் தேடி வரும்.

கன்னிப்பெண்களுக்கு உடல்நலன் சீராகும். சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். சகலத்திலும் மனம் ஈடுபாடு கொள்ளும். தூக்கமின்மை நீங்கும். கல்யாணம் நடக்கும். அரசியல்வாதிகள் தன் பலத்தை நிரூபித்துக் காட்டி தலைமையிடத்தில் நல்ல பெயர் எடுப்பார்கள். உங்களில் சிலர், வாகனத்தை மாற்றுவீர்கள். சகாக்களுக்கு மத்தியில் உங் களின் தகுதி உயரும்.

வியாபாரத்தைத் தொடர முடியாமல் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளானீர்களே… இனி, புது முதலீடுகள் செய்ய பணம் வரும். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். மிகச் சாமர்த்தியமாக செயல்பட்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். சிலர், வேலையாள்களை மாற்றிவிட்டு புதிய பணியாளர்களை அமர்த்துவீர்கள்.

ஏற்றுமதி, இறக்குமதி வகையால் அதிக லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் புது முதலீடுகளைச் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் நெடுங்காலமாக நீங்கள் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இப்போது கிடைக்கும். இதுவரையிலும் உங்களுக்கு இடைஞ்சல்கள் விளைவித்துவந்த சக ஊழியர்கள் இனி நட்புக்கரம் நீட்டுவார்கள்.

கணினித் துறையினருக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும்; அதன்மூலம் ஒளிமயமான எதிர்காலம் வாய்க்கும்.

கலைஞர்களுக்குக் கவலைகள் நீங்கும். இனி கிடைக்கும் புதிய வாய்ப்புகள் உங்களைச் சுறுசுறுப்புடன் செயலாற்றவைக்கும். அத்துடன், பெரும்புகழையும் பொருளாதார உயர்வையும் அளிப்பதாக அமையும். ஆகவே, வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்துகொண்டு, உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே ஏகப்பட்ட வாக்குவாதங்களையும், சண்டை சச்சரவுகளை யும், உடல் நலக்குறைவையும் அடுக்கடுக்காக தந்து உங்களை வாட்டிவதைத்த கேது பகவான், இப்போது ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார்.

ஆகவே, பிரச்னைகளின் அடிப்படை காரணங்களைக் கண்டறிந்து அகற்றும் சக்தியைக் கொடுப்பார். குடும்பத்தில் இனிய சூழல் உருவாகும். சந்தேகத்தாலும், ஈகோ பிரச்னையாலும் பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். விலகிச் சென்றவர்கள், இனி வலிய வந்து பேசுவார்கள்.

எதிரிகள் பலவீனமடைவார்கள். வழக்கு சாதகமாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இழுபறியான பணிகள் முழுமையடையும். புத்தி சாதுர்யத்துடன் பேசி, சில வேலைகளை முடிப்பீர்கள். கையில் பணம் தங்கும். பழைய கடனைப் பைசல் செய்யுமளவுக்கு வருமானம் கூடும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் உங்களின் தகுதி உயரும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

வியாபாரத்தில் போராட்டங்கள் நீங்கும். கடையை வேறிடத்துக்கு மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து பொருள்களைக் கொள்முதல் செய்வீர்கள்.

உத்தியோகத்தில், உங்களை வெறுத்த மேலதிகாரி இனி வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்புக்காகப் பதவியுயர்வு, சம்பள உயர்வெல்லாம் உண்டு.

மொத்தத்தில் இந்த ராகு – கேதுப் பெயர்ச்சி, உன்னதமான நிலைக்கு உங்களை உயர்த்தி செல்வதாக அமையும்.

உங்களுக்குச் சிவ தரிசனமும் பிரதோஷ வழிபாடும் பலம் சேர்க்கும். பிரதோஷ தினத்தில் காப்பரிசி சமர்ப்பித்து, நந்தியெம்பெருமானை வழிபடுங்கள்; வாழ்க்கை வளமாகும்.

சிம்மம்

தலைமைப் பண்பால் சிறந்த சிம்ம ராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, 13.2.19 முதல் 31.8.20 வரையிலும் எண்ணற்ற மாற்றங்களை அருளப்போகிறது.

இதுவரை உங்களின் ராசிக்குப் பன்னிரண்டில் அமர்ந்து காரியத்தடைகள், மன உளைச்சல், சொன்னச் சொல்லை நிறைவேற்ற முடியாமை… என அடுக்கடுக்காகப் பல சிக்கல்களையும் நெருக்கடிகளையும் கொடுத்து வந்த ராகு, இப்போது ராசிக்கு லாப வீட்டுக்கு வருகிறார்.

ஆகவே, புத்துணர்ச்சியும் புதிய முயற்சிகளில் வெற்றியையும் தருவார். இனி, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு பணவரவு அதிகரிக்கும்.

குடும்பத்தில் அமைதி, சந்தோஷம் இருக்கும். உங்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். எதிரும் புதிருமாக சண்டை போட்டுக்கொண்டிருந்த கணவன், மனைவி உறவு இனி நகமும் சதையுமாக மாறும். வீண் செலவுகளைக் குறைத்து அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்வீர்கள். வாரிசு இல்லாத தம்பதியருக்கு வாரிசு உண்டாகும். கடனையெல்லாம் அடைத்து முடிப்பீர்கள்.

பிள்ளைகள், கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். மகனின் தனித்திறமைகளைக் கண்டுபிடித்து உற்சாகப்படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

குலதெய்வப் பிராத்தனையை நிறைவேற்ற குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். பல காரணங்களால் இதுவரையிலும் தடைப்பட்டிருந்த வேலைகளை இனி முழு மூச்சுடன் செய்து முடிப்பீர்கள். வேற்று மதத்தினர், மொழியினரால் ஆதாயம் உண்டு.

அயல்நாட்டுப் பயணங்கள் வந்தமையும். அவற்றால் ஆதாயமும் உண்டு. சொத்து சம்பந்தபட்ட வழக்குகள் அனைத்தும் உங்களுக் குச் சாதகமாக முடியும். வீட்டுக்குத் தேவை யானப் பொருள்களை வாங்குவீர்கள். பெற்றோ ருடனும் உடன் பிறந்தவர்களுடனும் இருந்து வந்த கருத்துமோதல்கள், மனக் கசப்புகள் ஆகியவை நீங்கும்; உறவுகள் இனிக்கும்.

கன்னிப்பெண்களுக்கு, இதுவரை இருந்து வந்த அலட்சியப்போக்குகள் மாறும். தோஷங்கள் மற்றும் தடைகள் நீங்கி கல்யாணம் நடக்கும். சகல விஷயங்களிலும் பெற்றோரின் ஆதரவு உண்டு. தடைப்பட்ட கல்வியை முடிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் இழந்த பதவியைப் பெறு வார்கள். அடிக்கடி தொந்தரவு தந்த வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனத்தில் வலம் வருவீர்கள். அண்டை அயலாருடன் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி, அவர்களுடனான உறவு சுமுகமாகும்.

வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறினீர்களே! அந்த அவலநிலை மாறும். இனி, போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்குப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அனுபவம் மிகுந்த நல்ல வேலையாள்கள் வருவார்கள்.

கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்கு தாரர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்குகள் விலகும். வெகுநாள் களாக எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வு இப்போது கிடைக்கும். சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் எல்லாம் மாறும். உங்களின் திறமைகள் வெளிப்படும்.

கணினித் துறையினருக்கு வேலைச்சுமை குறையும். அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை கிடைக்கும்.

கலைத்துறையினர்களுக்கு வேற்று மொழி வாய்ப்புகளும் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பண வரவையும், வி.ஐ.பி-களின் நட்பையும், கொஞ்சம் அலைச்சல், டென்ஷனையும் கொடுத்து வந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்குப் பூர்வ புண்ணிய வீடான ஐந்தாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார்.

ஆகவே, பிள்ளைகளால் உங்கள் புகழ் கூடும். ஆனால் அவர்களால் வீண் அலைச்சலும், செலவும் உண்டு. அவர்களின் நட்புச் சூழலை கண்காணிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு உட்கொள்வது நல்லது. அதேபோல், தொலை தூரப் பயணங்களையும் தவிர்க்கவும்.

உங்களில் சிலர், சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மகான்கள் தரிசனமும் ஆசியும் கிடைக்கும். வீண் வதந்தி, பழிச்சொல்களிலிருந்து விடுபடுவீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்.

ஆனால் தாய்வழி உறவினர்களுடன் மோதல் வரும். அவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். இந்த ராசியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் எந்த விஷயத்தின் பொருட்டு, உணர்ச்சிவசப்படாமல் சாதாரண மாக இருங்கள்.

வியாபாரத்தில் பற்று-வரவு உயரும். வேலையாள்களைக் கனிவுடன் நடத்துவீர்கள். அவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். தொழில்ரீதியாக பிரபலங்களின் நட்பு கிட்டும்.

கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த பனிப்போர் நீங்கும். புரோக்கரேஜ், கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இனி உங்களைத் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, சில குழப்பங்களை அளித்தாலும், திடீர் யோகத்தை அளிப்பதாகவும் அமையும்.

அனுதினமும் துர்கைக்கு விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். துன்பங்களும் தடைகளும் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

கன்னி

கலகலப்பான பேச்சால் கவலையை மறக்கடிக்கும் கன்னி ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை, ராகுவும் கேதுவும் உங்கள் வாழ்க்கையில் புதுப்பயணத்தை வழங்கப் போகிறார்கள்.

இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீடான லாப வீட்டில் அமர்ந்துகொண்டு பிரபலங்களின் நட்பு, திடீர் பணவரவு, வாகன வசதிகள் என பல வகையிலும் முன்னேற்றம் தந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் வந்து அமர்கிறார்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறவைப்பார். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள், இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பணவரவு உண்டு.

இந்த ராகு சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாக தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார். உங்களிடமிருந்த பய உணர்வு, தடுமாற்றம் எல்லாம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும்.

உங்களின் நல்ல மனசைப் புரிந்துகொண்டு சிலர் உங்களுக்கு உதவுவார்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வக் கோயிலுக்குச் சென்றுவாருங்கள். குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். வீண் அலைச்சல்கள் நீங்கும். இனி திட்டமிட்டு எதையும் செய்வீர்கள்.

ராசிக்கு 10-ல் ராகு வருவதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். நண்பர்களுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

கன்னிப்பெண்களுக்குப் பெற்றோரின் ஆதரவு கிட்டும். தடைபட்ட கல்வியைத் தொடரு வார்கள். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். படபடப்பு, டென்ஷன் விலகும்.

அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித் துப் போவது நல்லது. அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லைகள் நீங்கும்.

வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பற்று-வரவை உயர்த்துவீர்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வராமலிருந்த பாக்கிகளும் வசூலாகும். கடையை அழகுபடுத்தி அதிக வேலையாள்களைப் பணியில் அமர்த்து வீர்கள். வாடிக்கையாளர்களைக் கவரும்விதமாக புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள்.

ஷேர், ஸ்பெகுலேஷன், ஹோட்டல் மூலம் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதைத் தவிர்க் கவும். தகுந்த அறிஞர்களிடம் ஆலோசனை செய்து, அவர்களின் அறிவுரைப்படி செயல் படுவதால் முன்னேற்றம் காணலாம். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும் என்றாலும் உங்களைப் பற்றிய வீண் வதந்திகளும் பழியும் வரக்கூடும். ஆகவே, எந்த விஷயத்திலும் கவனமாகப் பணியாற்றவும்.

சிலருக்கு திடீர் இடமாற்றம் கிடைக்கலாம். அதற்காக வருந்தவேண்டாம். புதிய அனுபவங் களைக் கற்றுக்கொள்வீர்கள். சிலருக்கு, மறை முக எதிர்ப்புகள் இருக்கும். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள்.

கணினித்துறையினருக்கு வேலை தொடர்பான நெருக்கடிகள் அதிகரிக்கும். எனினும் மனம் தளராமல் பணியாற்றுங்கள்; முன்னேற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

கலைஞர்களின் திறமைக்குப் பரிசு, பாராட்டுகள் கிட்டும். அவர்கள் வெகுநாள்களாக மிக ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பெரிய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு வந்து கதவைத் தட்டும்!

இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்துகொண்டு, முன்கோபத்தால் பிரிவு, உறவினர்கள் மத்தியில் கருத்துவேறுபாடு, பல கசப்பான அனுபவங்கள் ஆகியவற்றை அளித்து வந்தார் கேது. இப்போது ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்கிறார்.

ஆகவே, பதற்றத்திலிருந்து விடுபடுவீர்கள். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள். எந்த விஷயத்திலும் தெள்ளத் தெளிவாக முடிவுகள் எடுப்பீர்கள்.

மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு அனுபவ அறிவு கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனி நடக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். உங்களில் சிலர், வீட்டுக்குத் தேவையானதை வாங்குவீர்கள். சொந்தவீடு கனவு நனவாகும்.

வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது அமர்வதால், முக்கிய ஆவணங் களில் கையெழுத்திடும்போது ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. தாயாருக்கு மருத்துவச் செலவுகள், வந்துபோகும். வீடு கட்ட தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு, வீடு கட்ட தொடங்குவது நல்லது. வழக்குகளில் வழக்கறிஞரை மாற்றவேண்டி வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் மற்றும் பயணச்செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில், உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். வேலையாள்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் வேலைச் சுமை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாராட்டு, பதவி உயர்வுகளும் வாய்க்கும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, உங்களுக்கு வேலைச்சுமையை தந்தாலும், விடாமுயற்சி, கடின உழைப்பால் உங்களை முன்னேறவைப்பதாக அமையும்.

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வணங்கி வழிபடுங்கள்; அன்னதானம் செய்யுங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்

விஷய ஞானம் மிகுந்த துலாம் ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை உங்களுக்கு ராகுவும் கேதுவும் புது மலர்ச்சியை அளிக்கப்போகிறார்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 10 – ல் இருந்து உங்களை ஒரு வேலையையும் செய்யவிடாமல் முடக்கிப்போட்ட ராகு பகவான் இப்போது 9 -ல் அமர்வதால், சோம்பல் நீங்கும்.

இதுவரை முடிக்கப்படாமல் கிடப்பில் கிடந்த பல காரியங்களை இனி முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். வாழ்க்கை இனி பிரகாசிக்கும். குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் ஒருவித குழப்பங்களும், சண்டை சச்சரவுகளும் நிலவியிருந்ததே! இனி அவை நீங்கி, சந்தோஷம் குடிகொள்ளும். உங்களின் ஆலோசனையின்றி குடும்பத்தினர் எதுவும் செய்யமாட்டார்கள்.

வீட்டில் ஒரு சுபநிகழ்ச்சிகள் தடைபட்டுக் கொண்டிருந்தனவே… இனி, சுப காரியங்களால் வீடு களைகட்டும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய வழி காண்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுக்கு எதிராகக் கலகமூட்டியவர்களை ஒதுக்குவீர்கள். குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் போய் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள்.

பிள்ளைகளின் பிடிவாதக் குணமும் எதிர்த் துப் பேசும் பழக்கமும் மாறும். பொறுப்பாக நடந்துகொள்வார்கள். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாட்டில் படிக்கும் வாய்ப்பு தேடி வரும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். அவர்களின் துணையுடன் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும். தடைப்பட்ட கல்வியைத் தொடர்வீர்கள்.

தாயாருடன் இருந்துவந்த மனஸ்தாபங்கள் நீங்கும். நீண்டகாலமாக எண்ணியிருந்த தெய்வக் கடன்களை இப்போது நிறைவேற்று வீர்கள். குடும்பத்துடன் வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் உண்டாகும். கன்னிப்பெண்கள் படிப்பிலும் விளையாட்டிலும் சாதிப்பார்கள். அவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும்; பெற்றோர்களால் ஆதாயம் உண்டு.

வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். தொழில் நுணுக்கங்களை அறிந்து அதன்படி செயல்படுவீர்கள். எதிர்பாராத உதவியால் தொழில் லாபம் பெருகும். புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். அனுபவம் மிகுந்த வேலையாள்கள் வந்துசேருவார்கள்.

ஏற்றுமதி இறக்குமதி வகைகள், உணவு, இரும்பு, கணினி உதிரி பாகங்கள், மருந்துப் பொருள்களால் லாபம் அதிகரிக்கும். கடையை விரிவாக்கி அழகுப்படுத்துவீர்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.

இதுவரை 10 – ல் இருந்த ராகு, உத்தியோகத் தில் வேலைச்சுமையையும், வீண்பழியையும் கொடுத்தாரே, இனி 9 – ல் நுழைவதால் அந்த நிலை மாறும். உங்களின் நிர்வாகத்திறனை மேலதிகாரி பாராட்டுவார். தள்ளிப்போன பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தடையின்றி கிடைக்கும். வேலைச்சுமை குறையும். சிலருக்கு தகுதி, திறமைக்கேற்ற உத்தியோகம் புகழ் பெற்ற நிறுவனத்திலிருந்து கிடைக்கும்.

கலைத்துறையினருக்குத் தடைகள் யாவும் நீங்கி வாய்ப்புகள் அதிகரிக்கும். அவற்றைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பேசப்படும். அதேபோல், பழைய நிறுவனத் திலிருந்து வராமலிருந்த சம்பளபாக்கி, இப்போது உங்களின் கைக்கு வந்து சேரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி வாருங்கள்.

இதுவரை உங்களின் ராசிக்கு 4 – ல் இருந்து கொண்டு, பதற்றத்தை அளித்துக்கொண்டிருந்த கேது, இப்போது மூன்றாவது வீட்டில் வந்தமர்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் கரை புரளும்; சங்கடங்கள் தீரும்.

எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவிக்கு அவர் ஆசைப்பட்ட டிசைனில் தங்க நகைகள் வாங்கிக் கொடுப்பீர்கள். சோம்பலாக இருந்த பிள்ளைகள் இனி சுறுசுறுப்படைவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள்.

சகோதரர்களிடம் வீண் பிரச்னைகள் வேண்டாம். அவர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சொத்துச் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் கவனமாகக் கையாளுங்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாக முடியும்.

உங்களில் சிலர், வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர் கூடுதலாக அறை கட்டுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. நீங்களும் அயல்நாடு சென்று வருவீர்கள். உதாசினப்படுத்திய உறவினர்கள், நண்பர்கள் இனி தேடி வருவார்கள். தங்க நகை, ரத்தினங்கள் சேரும்.

வியாபாரத்தில் முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையாள்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும், புதிய வாய்ப்புகள் வந்தமையும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பகை நீங்கி நட்பு உருவாகும். கணினித் துறையினருக்கு அதிக ஊதியம் மற்றும் சலுகையுடன் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த ராகு கேதுப் பெயர்ச்சி, மனத்தாங்கலுடன் திகழ்ந்த உங்களை மகிழவைப்பதாக அமையும். அனுமன் வழிபாடு உங்களுக்கு உற்றத்துணையாகும். அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுங்கள் வெற்றி உண்டாகும்.

விருச்சிகம்

முயற்சியால் முன்னேற்றம் காணும் விருச்சிக ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை, ராகுவும் கேதுவும் உங்களுக்குச் சவாலையும் சந்தோஷத்தையும் ஒருங்கே வழங்கப்போகிறார்கள்.

உங்கள் ராசிக்கு 9 – ல் இருந்துகொண்டு, கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாதபடி செய்த துடன், வருமானத்துக்கு வழியே இல்லாமல் தடுமாற வைத்த ராகு பகவான், இப்போது 8- ல் சென்று மறைகிறார்.

ஆகவே, இதுவரையிலும் பலவிதங்களிலும் சிரமப்பட்ட நீங்கள், இனி ஓரளவு நிம்மதி அடைவீர்கள். சிலரின் ஆலோசனையைக் கேட்டு தவறான பாதையில் சென்று பலவிதங் களிலும் சிக்கித் தவித்தீர்களே, இனி சரியான பாதையில் பயணிப்பீர்கள். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

பாதியிலேயே தடைப்பட்டுப் போன வேலைகளை இனி பரபரப்புடன் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் முகம் பளிச்சிடும். வீட்டில் தள்ளிப்போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் இனி சிறப்பாக நடக்கும். தந்தையுடன் நிலவிய மனக்கசப்புகள் நீங்கும். இனி அவரின் உடல்நலமும் மேம்படும். தந்தைவழி சொத்திலிருந்த சிக்கல்களெல்லாம் விலகி உங்களுக்கு வரவேண்டியவை முறையாகக் கைக்கு வந்து சேரும்.

எதிர்பாராத வகையில் திடீர் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். குடும்பத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. உங்களின் குடும்ப விஷயங்களில் மூன்றாம் நபர்களின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். உறவினர்கள், நண்பர்களிடம் குடும்பப் பிரச்னைகளைச் சொல்லி ஆறுதல் அடைய நினைப்பதைத் தவிர்த்துவிடவும். அதனால் பிரச்னைகள் மேலும் வளரும்.

குடும்பத்தினரிடம் கண்டிப்பும் கறார் நடவடிக்கைகளும் வேண்டாம்; அவர்களிடம் கனிவுடனும் பாசமாகவும் நடந்துகொள்ளுங்கள். பிள்ளைகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலை நீங்கும். அவர்களின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். உங்கள் மகனுக்கு எதிர்பார்த்த கல்விப் பிரிவில் இடம் கிடைக்கும். உயர்கல்வி யில் வெற்றிபெறுவார்.

இட வசதியில்லாமல் தவித்துக்கொண்டிருந்த வீட்டை விற்றுவிட்டு, வேறு வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர், இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டு வீர்கள். உங்களில் சிலர், வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

கன்னிப்பெண்களுக்கு சிற்சில விஷயங்களில் தடுமாற்றம் இருந்தாலும், தகுந்த வழிகாட்டலால் வெற்றிபெறுவார்கள். அரசியல்வாதிகள் யதார்த்தத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

வியாபாரத்தில், எதையும் யோசித்து முடிவெடுக்கவேண்டும். மற்றவர்கள் சொல்கிறார்களே என்று பெரிய முதலீடுகளை இப்போது செய்யவேண்டாம். இருப்பதை வைத்துப் பெருக்கப் பாருங்கள்.

பழைய பாக்கிகளைக்கூட கொஞ்சம் போராடித்தான் வசூலிக்க நேரிடும். கமிஷன், ஷேர் மார்க்கெட் வகைகளால் முன்னேற்றம் உண்டு. வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பு வேண்டாம்; கனிவாகப் பேசுங்கள். வேலையாள்களின் ஆதரவு உண்டு.

கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள், உங்களின் நிர்வாகத்திறனை அறிந்து அனுசரணையாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரியே உங்களை நம்பி இனி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள்.

கணினித் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.கலைத்துறையினரின் கவலைகள் நீங்கும். கற்பனைத்திறன் மிகுந்த அவர்களுடைய படைப்புகளுக்குப் பரிசும் பணமும் உண்டு. பழைய நிறுவனங்கள் மீண்டும் வாய்ப்பளிக்கும். மூத்த கலைஞர்களின் ஆதரவும் பெருகும். ஆகவே, வீண் குழப்பங்களை மனதில் ஏற்றாமல் செம்மையாகச் செயல்படுங்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 3 – ல் இருந்து கொண்டு தைரியத்தையும், தன்னம்பிக்கையை யும், விடாமுயற்சியையும் கொடுத்து வந்த கேது பகவான், இப்போது ராசிக்கு 2 – ல் நுழைகிறார்.

சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். ஆனால், சில நேரங்களில் அந்தப் பேச்சாலேயே பிரச்னைகளிலும், வீண் வம்புகளிலும் சிக்கிக் கொள்வீர்கள். ஆகவே, கவனம் தேவை. வெளியிடங்களில் முடிந்தவரை வெளிப் படையாகப் பேசுவதைத் தவிர்க்கப் பாருங்கள். பல் வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும். சேமிப்புகள் கரையும் அளவுக்கு அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். ஆனாலும் உங்களுக் குச் சாதகமான நட்சத்திரங்களில் கேது செல்வ தால் இடையிடையே பண வரவும், யோகமான பலன்களும் உண்டாகும்.

மகனுக்கு எதிர்பார்த்தபடி வேலை கிடைக் கும். கல்யாணப் பேச்சுவார்த்தையிலிருந்த சிக்கல்கள் நீங்கி, திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உங்களைக் குறைத்து மதிப்பிட்டவர்களே ஆச்சரியப்படும்படி பல சாதனைகளைச் செய்வீர்கள்.

உங்களில் சிலருக்கு அயல்நாட்டுப் பயணங்கள் தேடிவரும். அதனால் ஆதாயமும் உண்டாகும். வாகன பயணத்தில் சிறு சிறு விபத்துகள் நிகழலாம் என்பதல், வாகனத்தைக் கவனமாக இயக்குங்கள். தூக்கமின்மை, மன உளைச்சல் வந்து போகும்.

வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்து நஷ்டப்படாதீர்கள். சந்தை நிலவரம் அறிந்து செயல்படுங்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும், உடன் பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள்.

மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, சிலநேரம் உங்களை உணர்ச்சிவசப்பட வைத்தாலும், ஓரளவு பணவரவையும், மகிழ்ச்சி யையும் தருவதாக அமையும்.

முருக வழிபாடு உங்களுக்குத் துணை நிற்கும். விசாகத்தன்று நெய்தீபம் ஏற்றிவைத்து வேலவனை வழிபட்டால், வெற்றிகள் கைகூடும்.

தனுசு

அதர்மத்துக்குத் தலை வணங்காத தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு 13.2.19 முதல் 31.8.20 வரை ராகுவும் கேதுவும் நல்லபல அனுபவங்களைத் தரப்போகிறார்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களைப் படாதபாடு படுத்திக்கொண்டிருந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமருவதால் தெளிவு பெறுவீர்கள்.

உங்களின் அறிவாற்றலை மழுங்கவைத்த ராகு இப்போது உங்களுக்கே தெரியாமல் உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரப்போகிறார். வீண் விவாதங்கள், மன உளைச்சல், டென்ஷன், காரியத்தடைகள் எனப் பலவிதங்களில் சிக்கிக் கொண்டிருந்த நீங்கள், இனி உற்சாகத்துடன் வலம்வருவீர்கள்.

குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே சந்தோஷம் நிலைக்கும். என்றாலும் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் அமர்வதால் மனைவியுடன் சின்னச் சின்ன விவாதங்கள் இருக்கத்தான் செய்யும். அதைப் பெரிது படுத்தாதீர்கள். மனைவிக்குக் கர்ப்பப்பை கோளாறு, ரத்த அழுத்தம் வந்து போகும்.

உங்களின் தீய பழக்கவழக்கங்களை சுட்டிக் காட்டுவார். அவற்றையெல்லாம் திருத்திக் கொள்ளப் பாருங்கள். அவர்வழி உறவினர்களால் கருத்து மோதல், பகைமை வந்து போகும்.

எந்த விஷயமாக இருந்தாலும் மற்றவர்களின் ஆலோசனையின்றிச் சுயமாகச் சிந்தித்து முடிவெடுங்கள். அழகும் அறிவும் மிகுந்த குழந்தை பிறக்கும். குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சிறப்பாக முடிப்பீர்கள். அரசாங்கக் காரியங்களில் இருந்து வந்த தடுமாற்றங்கள் விலகும். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள், உயர்கல்வி யில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவார்கள்.

வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந் தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தாழ்வுமனப்பான்மை, குழப்பங் களிலிருந்து விடுபடுவீர்கள். பாதியிலேயே நின்றுபோன பல வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள். நமக்கு ரொம்ப வேண்டியவர்தானே என்று மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் படிவங்களில் கையெழுத் திடாதீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, மன இறுக்கம் விலகும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். அரசியல்வாதிகள் சிற்சில தடைகளைச் சந்தித்தாலும் ஏற்றம் காண்பார்கள்.

வியாபாரத்தில் போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகளைப் பற்றி யோசிப்பீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். ஷேர், கமிஷன், அரிசி குடோன், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள்.

எவ்வித காரணத்துக்காகவும், வேலையாள் களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். சில வேலைகளை நீங்களே முன்னின்று நடத்துவது நல்லது. பழைய பாக்கிகளை வசூலிக்கும்போது கனிவு தேவை; கண்டிப்பு வேண்டாம்.

உத்தியோகத்தில், எதற்கெடுத்தாலும் உங்களை குறைசொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி நேசக்கரம் நீட்டுவார். அவரால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். பதவி-சம்பள உயர்வுகளும் உண்டு. சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். கணினித் துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும்.

கலைத்துறையினர் போட்டி, பொறாமை களுக்கு நடுவில் வெற்றி பெறுவார்கள். அவர் களின் படைப்புகளை அரசு கௌரவிக்கும்.

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்று கொண்டு உங்களைப் பக்குவமில்லாமல் பேசவைத்துப் பல பிரச்னைகளில் சிக்க வைத்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்தமர்கிறார்.

இனி, சூழலுக்கு ஏற்றார்போன்று பேச வைப்பார். எப்போதும் ஒருவித தடுமாற்றத் திலேயே இருந்த நீங்கள் இனி தன்னம்பிக்கை யுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு பெரிய இடைவெளி இருந்ததே, இனி அவர்களுக்காக அதிக நேரம் ஒதுக்கி, அவர்களின் இன்பதுன்பங்களைப் பகிர்ந்துகொள்வீர்கள்.

பிள்ளைகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து போகும். மகளுக்காக வரன் தேடி அலைவீர்கள். மகனின் வேலை மற்றும் படிப்பு விஷயத்துக்காக அதிகம் போராட வேண்டியது வரும்.

ராசிக்குள் கேது அமர்வதால் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்; பருகு பானங்களிலும் கவனம் தேவை. தினமும் யோகா அல்லது தியானம் செய்வது நல்லது. வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். பழைய கடனை எப்படி அடைக்கப் போகிறோமோ என நினைத்து அச்சப்படுவீர்கள். சகோதரர் களிடம் வீண் விவாதங்கள் வேண்டாம், கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். திடீர்ப் பயணங்களுக்குக் குறையிருக்காது. நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள்.

வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் காரசார மான விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அரசு வரிகளை முறை யாகச் செலுத்திவிடுவது நல்லது. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எனினும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.

மொத்தத்தில் இந்த ராகு – கேதுப் பெயர்ச்சி புது அனுபவங்களையும் அதன் மூலம் முன்னேற் றத்தையும் தருவதாக அமையும். ராம நாம பாராயணமும் ஸ்ரீராம வழிபாடும் நன்மைகளை அளிக்கும்.

மகரம்

எதிலும் திடமான முடிவெடுக்கும் மகர ராசி அன்பர்களே! உங்களுக்கு 13.2.19 முதல் 31.8.20 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும் கேதுவும் அதிர்ஷ்டங்களையும் திடீர் திருப்பங் களையும் வழங்கப்போகிறார்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்றுகொண்டு, எதிலும் ஈடுபாடு இல்லாமல் உங்களை எந்த ஒரு வேலையையும் செய்ய விடாமல் முடக்கிவைத்திருந்தார் ராகு. தாழ்வு மனப்பான்மையையும், மன உளைச்சலையும், வீண் கவலைகளையும் தந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் வந்து அமர்கிறார்.

ஆகவே, இனி எதிலும் எல்லாவற்றிலும் முன்னேற்றம்தான். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்றுசேர்வீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி நிம்மதியும் அமையும் பிறக்கும். ஒருநாள்கூட நிம்மதியாக இருக்கமுடியவில்லையே என்று நினைத்துப் புழுங்கினீர்களே! கவலை வேண்டாம். இனி, குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். மனைவி பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். அவர்கள், உங்கள் பேச்சுக்கு மதிப்புக்கொடுப்பார்கள். மனைவி அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டாரே, இனி அவரின் ஆரோக்கியம் கூடும்.

மறுமணத்துக்கு முயற்சி செய்தவர்களுக்குத் திருமணம் உடனே கூடி வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். கடன் பிரச்னை களில் ஒரு பகுதியைத் தீர்ப்பீர்கள். பழைய நகைகளை மாற்றிவிட்டு புதிய டிசைனில் ஆபரணங்களை வாங்குவீர்கள்.

தந்தைவழி சொந்தங்களிடையே மனஸ்தாபம் வெடித்ததே! அந்த நிலை இனி மாறும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

உறவினர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். உங்களைப் பற்றித் தவறாக நினைத்தவர்களின் மனம் மாறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு, கோபம் எல்லாம் நீங்கும். இனி உங்களின் அன்புக்கு கட்டுப்படுவார்கள்.

வேலை தேடி அலைந்த உங்கள் மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் திருமணம் ஏதோ ஒரு வகையில் தடைப்பட்டுக் கொண்டிருந்ததே… இனி தடைகள் நீங்கி, நல்ல இடத்திலிருந்து வரன் அமையும். கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

கன்னிப்பெண்களுக்கு மறதி, மந்தம் விலகும். தடைப்பட்டக் கல்வியை மீண்டும் தொடருவீர்கள். நல்லவேலை கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். அரசியலில் தடைகள் நீங்கும்; வெற்றிப்பாதை புலப்படும்.

வியாபாரத்தில், மற்றவர்களின் ஆலோசனை யால் நீங்கள் இழந்தது கொஞ்சநஞ்சமில்லை. இனி பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்வீர்கள். புது அணுகுமுறையால், விளம்பர யுக்தியால் லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மருந்து வகைகள், எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி – இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

உத்தியோகத்தில், உங்களுக்குத் தொந்தரவு கொடுத்து வந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புப் பாராட்டுவர். உங்களின் யோசனைகளும், திட்டமிடலும் பாராட்டு பெறும். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். கணினித் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்; விடாமல் பற்றிக்கொள்ளுங்கள்.

கலைத்துறையினருக்கு, இதுவரை இருந்துவந்த வீண் கிசுகிசுத் தொல்லைகள், வதந்திகள் ஆகியவை மறையும். வரவேண்டிய சம்பளப் பாக்கி கைக்கு வரும். பெரிய நிறுவனங் கள் அழைத்துப் பேசும்; அவற்றால் ஆதாயம் உண்டு.

இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து உடல் சோர்வு, காரியத்தடைகள், மன உளைச்சல், விரக்தி, சோம்பல் என அடுக்கடுக்காக பிரச்னைகளைக் கொடுத்து வந்த கேது இப்போது பன்னிரண்டில் சென்று அமர்கிறார்.

உங்கள் பேச்சில் இனி தெளிவு பிறக்கும். மருந்து, மாத்திரையுடன் குடித்தனம் நடத்தினீர் களே! இனி உடல் ஆரோக்கியம் மேம்படும். அடிக்கடிக் கோபப்பட்டு வீண் வம்பில் சிக்கிக் கொண்டீர்களே, இனி சாந்தமாகப் பேசும் அளவுக்குப் பக்குவப்படுவீர்கள்.

கல்யாணம் காட்சியில் கலந்து கொள்ளா மலும் எதிலும் பிடிப்பில்லாமலும் விரக்தியுடன் இருந்தீர்களே! இனி எல்லாவற்றிலும் ஆர்வம் பிறக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளின் கூடா பழக்கவழக்கங்கள் விலகும். மகனுக்குத் தடைப்பட்ட திருமணம் முடியும்.

சகோதர – சகோதரி வகையில் அலைச்சல் இருந்தாலும் மகிழ்ச்சி குறையாது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். போதிய உறக்கம் இல்லாமல் தவித்த நீங்கள் இனி ஆழ்ந்து உறங்குவீர்கள். உடலில் சேர்ந்த கெட்ட நீரெல்லாம் வடிந்து, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

வியாபாரத்தில், பற்றுவரவு உயரும். வேலையாள்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப் படுவீர்கள். அலுவலகப் பிரச்னைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்துக்கே இடமாற்றம் உண்டு. வெகுநாள்களாக இழுபறியில் இருந்த சம்பள உயர்வும், பதவி உயர்வும் இனி தேடி வரும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, உங்களின் அடிப்படை வசதிகளைப் பெருக்கித் தருவதாக அமையும். மாலவனை மனதால் பிரார்த்தித்துத் தொழ, வாழ்க்கை மலரும். சனிக் கிழமைகளில் பெருமாளுக்குத் துளசி அணிவித்து வழிபட்டு வாருங்கள்; வெற்றிகள் குவியும்.

கும்பம்

கொள்கைப்பிடிப்பு கொண்ட கும்பராசி அன்பர்களே! உங்களுக்கு 13.2.19 முதல் 31.8.20 வரை ராகுவும் கேதுவும் பல மாற்றங் களையும் மகத்துவங்களையும் அருளப் போகிறார்கள்.

ராகு பகவான் அருளும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துகொண்டு பணவரவையும், பிரபலங்களின் நட்பையும் ஒருபுறம் தந்தாலும் மறுபுறம் வீண் அலைச்சல், மன உளைச்சல், பகை, கடன் தொந்தரவு என்று கலங்கடித்தார் ராகுபகவான்.

இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி, குதூகலம் பிறக்கும். கணவன் – மனைவிக்கு இடையே இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும்.

ஆனாலும் புத்தி ஸ்தானமான 5 -ம் வீட்டில் ராகு அமர்வதால், சந்தேகக் கண்ணுடன் எல்லோரையும் பார்ப்பீர்கள். வீண் அலைச்சல், டென்ஷன், முன்கோபம் குறையும். குடும்ப வருமானத்தை உயர்த்த அதிரடியான திட்டங் களைத் தீட்டுவீர்கள். மனைவி நெடுநாள்களாகக் கேட்டுக்கொண்டிருந்த தங்க ஆபரணம், ரத்தினங்களை வாங்கித் தருவீர்கள்.

பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் ஆசைகளைக் கேட்டறிந்து, அவற்றைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆனால், பிள்ளைகளுடன் அடிக்கடி சண்டை – சச்சரவுகள் ஏற்படலாம். இயன்றவரையிலும் பிள்ளைகளிடம் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள். உங்களின் தனிப்பட்ட கருத்துகளை அவர்களிடம் திணிக்க வேண்டாம்.

இதுவரையிலும் உங்களை எதிர்த்து வந்தவர்கள், இனி அடங்குவார்கள்; வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். சொந்தபந்தங்களின் அன்புத் தொல்லைகள் குறையும். என்றாலும் அவ்வப்போது பணம் கேட்டு நச்சரிப்பார்கள். நெடுநாளாகக் குலதெய்வக் கோயிலுக்குப் போகவேண்டும் என சொல்லிக்கொண்டுதானே இருந்தீர்கள். இனி, குடும்பத்துடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி உணவுப் பழக்கத்தை அமைத்துக்கொள்ளவும்.

கன்னிப்பெண்களே! தள்ளிப்போன திருமணம் கூடி வரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. மனம் மகிழும் சம்பவங்கள் நிகழும்.

வியாபாரத்தில், என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தீர்களே! இனி, அனுபவ அறிவால் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பாக்கிகளைக் கொஞ்சம் கனிவாகப் பேசி வசூலியுங்கள்.
வாடிக்கையாளரை அதிகப் படுத்தும்விதமாகக் கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள்.

வேலையாள்கள் பொறுப்பு உணர்ந்து நடந்துகொள்வார்கள். அவர்களால் ஆதாயம் உண்டு. ஹோட்டல், இரும்பு, கமிஷன், எண்ணெய் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில், இதுவரையிலும் உயரதிகாரியுடன் இருந்துவந்த மோதல்போக்கு நீங்கும். அவர் உங்களுக்கு உதவியாகச் செயல்படுவார். நீங்களும் உங்களின் திறமை களை முழுமையாக வெளிப்படுத்தி சாதிப்பீர்கள்.சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். நீங்கள், வெகுநாள்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்போது கைக்கு வரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களிலிருந்து புது வேலை கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு நழுவிப்போன புதிய வாய்ப்புகள் தேடி வரும்; கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அதேபோல், வீண் வதந்திகளிலிருந்தும் விடுபடுவீர்கள். உங்களின் கற்பனைத்திறனுக்கு பாராட்டுகள் குவியும். அதேநேரம் புகழின் காரணமாக கர்வம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதுவரை உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து ஆடம்பரச் செலவுகளையும், வீண் அலைச்சலையும், கடன் பிரச்னைகளையும் கொடுத்து உங்களைத் தூக்கமின்றித் தவிக்க வைத்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார்.

ஆகவே திடீர் யோகம் உண்டாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும். மூத்த சகோதரர் உதவுவார். பிரபலங்களைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள்.

பணப்பற்றாக்குறையால் கட்டட வேலை பாதியிலேயே நின்றுபோனதே, இனி வங்கியில் லோன் போட்டு வீட்டை முழுமையாகக் கட்டி முடிப்பீர்கள். ஆழ்ந்த உறக்கம் வரும். வெளி வட்டாரத்தில் சாதாரணமாகப் பேசினாலே சண்டைக்கு வந்த நிலை மாறும். இனி உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும்.

அடிக்கடி செலவுகள் வைத்த வாகனத்தை மாற்றிவிட்டுப் புதுரக வாகனத்தில் வலம் வருவீர்கள். வேற்று மொழிக்காரர்களால் பயன் அடைவீர்கள். வெகுநாள்களாகப் போக நினைத்த வெளிமாநிலப் புண்ணிய தலங் களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளி நாட்டினரால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு களிலிருந்து விடுபடுவீர்கள். மேலதிகாரி நேசக் கரம் நீட்டுவார். சக ஊழியர்களிடம் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. கணினித் துறையிலிருப்பவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சி காலத்தில், ராகுவால் கொஞ்சம் டென்ஷன் ஏற்பட்டாலும், கேதுவால் உங்கள் வாழ்வில் நிம்மதியும், பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும்.

அம்பாள் வழிபாடு அல்லல்களைப் போக்கும். வெள்ளி-செவ்வாய்க்கிழமைகளில் அம்மனை வழிபடுவதால் சுபிட்சங்கள் பெருகும்.

மீனம்

லட்சியவாதிகளான மீன ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை, ராகுவும் கேதுவும் உங்களுக்கு, நீங்கள் எதிர்பாராத பலன்களை வாரி வழங்கப் போகிறார்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து இழப்பு, ஏமாற்றம், விரக்தி என நான்கு புறமும் வாட்டி வதைத்த ராகுபகவான், இப்போது ராசிக்கு நான்காவது வீட்டில் வந்து அமர்வதால், இனி மன நிம்மதியைத் தருவார்.

பாதியிலேயே நின்றுபோன வேலைகளை இனி பக்குவமாய்ப் பேசி முடிப்பீர்கள். இதுவரை நண்பர்கள், உறவினர்கள் என்று மாறி மாறி உங்களை ஏமாற்றினார்கள். இனி அவர்க ளெல்லாம் உங்களிடம் மன்னிப்பு கேட்பார்கள். குடும்பத்தில் எதைப் பேசினாலும் கலகம் வெடித்த நிலை மாறி, இனி வீட்டில் அமைதி திரும்பும்.

கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கசப்பு உணர்வு நீங்கும். தாம்பத்தியம் இனிக்கும். இருவரும் தங்களின் ரத்த சொந்தங் களைப் பற்றிப் பெருமையாகப் பேசவேண்டாம். வீட்டில் தாமதமாகிக் கொண்டிருந்த சுபகாரியங் கள் ஏற்பாடாகும். வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து வங்கியில் வாங்கியிருந்த கடனைத் தீர்க்கப் புது வழி பிறக்கும்.

பூர்வீகச் சொத்துச் சிக்கல்கள் முடிவுக்கு வரும். பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்று சேருவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தாயாருக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் வீண் அலைச்சலும், கருத்து வேறுபாடுகளும் வந்து போகும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும். சிலர், நகரத்திலிருந்து விலகிச் சற்றே ஒதுக்குப்புறமான பகுதிகளுக்குக் குடிபெயர்வீர்கள்.

ஐந்தாம் வீட்டை விட்டு ராகு விலகுவதால், பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்; உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களின் ஆழ்மனதில் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவருவீர்கள்.

உடன்பிறந்த சகோதரர்களும் சகோதரிகளும் நம்மைப் புரிந்துகொள்ளவில்லையே என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தீர்கள் அல்லவா? இனி, அந்த நிலை மாறி, இனி அவர்கள் உங்களிடம் பாசமாக நடந்துகொள்வார்கள். தந்தைக்கு இருந்துவந்த மூட்டுவலி, நெஞ்சுவலி எல்லாம் நீங்கி, அவரது உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கன்னிப்பெண்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் தன்னிச்சையாக முடிவெடுக்கவேண்டாம். பெற்றோரைக் கலந்தா லோசிக்காமல் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்காதீர்கள். குடும்பத்தை நிர்வகிப்பவர்கள், முக்கிய முடிவுகளை பெரியவர்களிடம் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது.

அரசியலில் நீங்கள் எதிர்பாராத முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளால் போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜ தந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசிப் பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாள்கள் இனிப் பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.

உணவு, சிமென்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் இரட்டிப்பு லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிக்கப் பாருங்கள்.

உத்தியோகத்தில், எவ்விதக் காரணம் கொண்டும் மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்யவேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. தடைகள் நீங்கும்.

கணினித் துறையில் இருப்பவர்களுக்கு அதிக சம்பளத்துடன் அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத்துறையினர் பற்றிய கிசுகிசுக்கள் அனைத்தும் விலகும். அவர்களுக் குப் பெரிய நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் வரும்.

இதுவரை உங்களின் ராசிக்குப் பதினோன்றா வது வீட்டில் அமர்ந்து பணப்புழக்கத்தையும், பிரபலங்களின் நட்பையும் ஏற்படுத்திக் கொடுத்த கேது பகவான், இப்போது பத்தாவது வீட்டில் வந்து அமர்கிறார்.

ஆகவே, எந்த வேலையையும் திறம்படச் செய்து முடிக்கும் மனோபலத்தைத் தருவார். ஆனால் பலமுறை அலைந்து திரிந்தே சில காரியங்களை முடிக்க வேண்டி வரும். பிரச்னை களின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள்.

சிலருக்கு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பாதியில் முடங்கிக்கிடந்த வீடு கட்டும் பணி முழுமை அடையும். ஏளனமாகப் பேசியவர்கள் எல்லாம் இனி உங்களைப் பாராட்டுவார்கள். வீடு, மனை வாங்கும்போது தாய்ப் பத்திரத்தைச் சரி பார்ப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் கொஞ்சம் செலவுகளும், அலைச்சலும் வந்து நீங்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

வியாபாரத்தில், `பெரிய முதலீடு போட்டு வட்டியும் முதலுமாக எடுத்துவிடலாம்’ என்று அவசர முடிவுகளை எடுத்துவிடாதீர்கள். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளை முறையே செலுத்திவிடுங்கள். உத்தியோகத்தில், வேலை அதிகரிக்கும். சிலர், மூத்த அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்; எனினும் பொறுமை யுடன் இருந்தால் பிரச்னைகள் நீங்கும். பதவி உயர்வை போராடிப் பெறுவீர்கள்.

மொத்தத்தில், இந்த ராகு – கேதுப் பெயர்ச்சி, உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும். சிவ வழிபாடு, உங்களின் வாழ்க்கையைச் சிறக்கவைக்கும். கோயிலில் அன்னதானம் வழங்குங்கள்; வளம் பெருகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*