அற்புதமான பலன்களைப் தரும் சனி மகாபிரதோஷம் – சனியால் ஏற்படக்கூடிய அத்தனை கஷ்டங்களும் நீங்கும்!

ஒருவருக்கு அஷ்டமத்துச் சனி வந்துவிட்டால் பாடாய்ப் படுத்தும் என்பார்கள். அதற்காக யாரும் கவலைப்படவே தேவையில்லை. பிரதோஷ நாளில் குறிப்பாக, மகாபிரதோஷம் அன்று சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய அத்தனை கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதிகம்.

இன்று சிவபெருமானின் அருளால் அற்புதமான பலன்களைப் பெற்றுத் தரும் சனி மகா பிரதோஷம். சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் விசேஷம்.

இன்று சனிக்கிழமை. கிழமை என்றால் உரிமை. சனிபகவானுக்கு உரியக் கிழமை. மேலும் திரயோதசி திதி. மாதம்தோறும் இரண்டு முறை திரயோதசி திதி வருகிறது. ஆனால், சனிக்கிழமைகளில் வரும் திரயோதசி, `மகா பிரதோஷம்’ என்று சிறப்பித்துப் போற்றப்படுகிறது.

சனிபகவானால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட நமக்குக் கிடைக்கும் அருமருந்து இந்த மகா பிரதோஷ நாள்.

பாற்கடலைக் கடைந்தபோது ஏற்பட்ட ஆலகால விஷத்தின் காரணமாகத் தேவர்களுக்குத் துயர் சூழ்ந்தபோது அவர்கள் மகாதேவனையே சரணடைந்தனர். அவர், தேவர்களை அழிக்க வந்த ஆலகால விஷத்தை ஒரு நாவல் பழம்போல சுருட்டித் தன் வாயில் இட்டுக்கொண்டார். ஆனால், அம்பிகையோ அதைச் சிவபெருமானின் கழுத்தோடு நிறுத்திவிட்டாள். அதன் காரணமாகவே அவருக்கு, ‘நீலகண்டன்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. `தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்’ என்று சம்பந்தரும் பாடுகிறார். அப்படிப்பட்ட சிவபெருமானை, நாம் தீவினையால் துன்புறும்போது வணங்கி நற்பயன் பெற உகந்த நேரம் பிரதோஷம். பிரதோஷ காலத்தில் சிவன் சந்நிதியில் எல்லா தேவர்களும் ஒன்றுகூடி மகாதேவனைப் பிரார்த்திக்கிறார்கள். அந்த நேரத்தில் நாமும் அந்தக் குழாமோடு இணைந்துகொண்டால் நற்பயனே சூழும்.

பிரதோஷத்துக்குச் சென்று வழிபடச் சிவன் கோயில் உகந்தது. அருகில் சிவன் ஆலயம் இல்லை என்றால், விநாயகர், முருகன் போன்ற ஆலயங்களில் சிவபெருமானை சிந்தையில் இருத்தி வழிபடலாம். பெருமாள் ஆலயத்துக்குச் சென்றும் இறைவனை வழிபடலாம்.

அருகில் இருக்கும் ஆலயம் எதுவாக இருந்தாலும் அங்கு சென்று சிவனை நினைத்து வழிபடச் சகல வேண்டுதலும் நிறைவேறும். குறிப்பாக, மகா பிரதோஷம் சனிக்கிழமை நிகழ்வதால் சனிபகவானால் ஏற்படும் தீமைகள் நீங்கப்பெற இந்த வழிபாடு உகந்தது. அஷ்டமச் சனி மற்றும் அர்த்ராஷ்டம சனி, ஏழரைச் சனியால் அவதிப்படுபவர்கள் பிரதோஷ காலத்தில் சிவாலயம் சென்று முதலில் நந்தியை வழிபட்டுப் பின் சிவனைத் தரிசனம் செய்ய வேண்டும். கோளறுபதிகம் பாடி இறைவனைத் தொழ வேண்டும். இயன்றவர்கள் தயிர்சாதம் நிவேதனம் செய்து விநியோகிக்கலாம். ஆனால், எல்லாவற்றையும்விடப் பிரதானம் பக்தியும் அவன் திருவடிகள் பணிவதுமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*