மேஷம் முதல் மீனம் வரை – கார்த்திகை மாத ராசிபலன்கள்!

12 ராசியினருக்கான கார்த்திகை மாத ராசிபலன்கள்

மேஷம்

“தண்ணீர் வெந்நீரானாலும் தளிர்ந்தெரியும் நெருப்பை அவிக்கும்” என்ற முதுமொழியை அறிந்த நீங்கள், நாலு காசு சம்பாதிக்க கடல் கடந்து போனாலும் பாரம்பரியம், பண்பாட்டை மீறாதவர்கள். சுக்கிரன் இந்த மாதம் முமுக்க வலுவாக சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனத்தாங்கல், ஈகோ பிரச்னை, பனிப்போர் யாவும் நீங்கும். நண்பர், உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும்.

ஆனால் சூரியன் இந்த மாதம் முழுக்க 8ம் வீட்டில் குருவுடன் சேர்ந்து மறைந்துக் கிடப்பதால் பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். அவர்களின் பிடிவாதம் அதிகரிக்கும். நீங்களும் அவர்களுக்கு சரிசமமாக போட்டிப் போட்டுக் கொண்டிருக்காதீர்கள். விட்டுப் பிடிப்பது நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை தூக்க வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக நிற்பதால் பழைய பிரச்னைகள் தீரும். வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். கன்னிப் பெண்களுக்கு வயிற்றுவலி, தலைவலி விலகும். கல்யாணப்பேச்சு வார்த்தை முன்னேற்றம் தரும்.

பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. சிலர் இருக்கும் வீட்டை கொஞ்சம் விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் மூத்த சகோதரர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பழைய இடத்தை விற்று விட்டு புதிதாக வீடு வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் கட்சி தலைமையை விமர்சிக்க வேண்டாம்.

கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மாணவர்களே! கட்டுரை, இசை, ஓவியப் போட்டிகளில் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு உதவிகரமாக இருப்பார்கள். பங்குதாரருடன் கருத்து மோதல்களால் பிரிய வாய்ப்பிருக்கிறது.

அவருக்கு தரவேண்டிய பணத்தை திடீரென கேட்பார்.ஸ்டேஷனரி, ரியல் எஸ்டேட், கம்ப்யூட்டர் உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். சூழ்ச்சிகளையும் தாண்டி உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினர்களே!
தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

விவசாயிகளே!
மகசூல் அதிகரிக்கும். அடகிலிருந்த பத்திரங்கள், நகைகளை மீட்க வழி பிறக்கும். முன்கோபத்தையும், அலட்சியப் போக்கையும் தவிர்க்க வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்
நவம்பர் 17,24,25,26,27 மற்றும் டிசம்பர் 1,2,3,4,12,13,14.

சந்திராஷ்டம தினங்கள்:
டிசம்பர் 6,7,8ம் தேதி காலை 6.28 மணி வரை

ரிஷபம்

கர்மத்தால் வந்தவற்றைத் தருமத்தால் தொலைக்க வேண்டும்” என்ற பழமொழியை அறிந்த நீங்கள், முற்பிறவி சூட்சுமத்தை உணர்ந்து, இப்பிறவியில் எந்த பழிபாவமும் வராதபடி தர்மத்தின் வழியில் நடப்பவர்கள்.

செவ்வாய் பகவான் இந்த மாதம் முழுக்க 10ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதை தொட்டாலும் வெற்றியில் முடியும். சவாலான விஷயங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள்.

வீண் விவாதங்கள் நீங்கும். சூரியனும், குருவும் 7ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அரசு காரியங்கள் விரைந்து முடியும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக்குகள் சாதகமாக முடியும். குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிதாக ஆடை மற்றும் தங்க நகைகள் வாங்குவீர்கள்.

தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ராசிநாதன் சுக்கிரன் சத்ருஸ்தானமான 6ம் வீட்டிலேயே நீடிப்பதால் அடுக்கடுக்காக சவால்களை சந்திக்க வேண்டி வரும். எங்குச் சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

கடன் பிரச்னை தலைத் தூக்கும். எந்த காரியத்தை தொட்டாலும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் செலவினங்கள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.

7ம் தேதி வரை புதனும் 6ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் குறையும். உறவினர்களில் ஒரு சிலர் கூட நீங்கள் மாறி விட்டதாக கூறுவார்கள். ஆனால் 8ம் தேதி முதல் புதன் 7ல் நுழைவதால் நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும்.

உறவினர்களுடன் இருந்து வந்த பகை யாவும் நீங்கும். அரசியல்வாதிகளே! அஷ்டமத்துச் சனி தொடர்வதால் எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள்.

கன்னிப் பெண்களே!
திடீரென்று அறிமுகமாகும் நண்பர்களை நம்பி பழைய நண்பர்களை விட்டு விடாதீர்கள். மாணவர்களே! வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். மாதத்தின் பிற்பகுதியில் நினைவாற்றல் அதிகரிக்கும். குருபகவான் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் லாபம் வரும். இருப்பினும் அவசரப்பட்டு அதிக முதலீடு செய்ய வேண்டாம். பங்குதாரர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும்.

வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய திட்டங்கள் யாவும் நிறைவேறும். உங்களின் ஆலோசனைகளையும் அதிகாரிகள் ஏற்பார்கள். சக ஊழியர்களால் கொஞ்சம் பிரச்னைகள் வரும். மூத்த அதிகாரிகளுடன் சின்னச் சின்ன மோதல்கள் வரும்.

கலைத்துறையினர்களே!
மறைமுக போட்டிகள் இருக்கும். வீண் வதந்திகள், கிசுகிசு தொந்தரவுகள் வந்துப் போகும்.

விவசாயிகளே!
நிலப் பிரச்னைகளை பெரிது படுத்தாமல் சுமுகமாக பேசித் தீர்ப்பது நல்லது. பம்பு செட் பழுதாகும். சிக்கனமும், சகிப்புத் தன்மையும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்
நவம்பர் 17,19,20,26,27,28,29 மற்றும் டிசம்பர் 4,6,7,14,15.

சந்திராஷ்டம தினங்கள்
டிசம்பர் 8ம் தேதி காலை 6.28 மணி முதல் 9,10ம் தேதி மாலை 5.14 மணி வரை.

மிதுனம்

“உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியாது” என்பதை அறிந்த நீங்கள், மற்றவர்கள் தூற்றும்படி வாழாமல் நீதி நேர்மையைப் பின்பற்றி பிறர் போற்றும்படி வாழ்பவர்கள்.

கடந்த ஒரு மாத காலமாக ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு உங்களை பாடாய்ப்படுத்தி, குடும்பத்திலும் குழப்பங்களையும், பிரச்னைகளையும் ஏற்படுத்திய சூரியன் இப்போது 6ல் அமர்ந்திருப்பதால் அடிமனதிலிருந்து வந்த குற்ற உணர்வுகள் நீங்கும். புது முயற்சிகள் பலிதமாகும்.

முன்கோபம் விலகும். இதமாகவும், இங்கிதமாகவும் பேச கற்றுக் கொள்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.

அரசு காரியங்களும் நல்ல விதத்தில் முடியும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன்மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் கட்டுவீர்கள்.

8ம் தேதி முதல் 6ல் புதன் மறைவதால் உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். அவர்களில் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். செவ்வாய் இந்த மாதம் முழுக்க சாதகமாக அமர்ந்திருப்பதால் தைரியம் கூடும்.

சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வழக்குகள் சாதகமாகும். என்றாலும் 6ம் வீட்டிலேயே குரு தொடர்ந்துக் கொண்டிருப்பதால் எதிர்காலம் பற்றிய ஒரு பயம் வரும். சிலர் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

உங்களைப் பற்றிய வதந்திகளும் அதிகமாகும்.

அரசியல்வாதிகளே!
கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும்.

கன்னிப் பெண்களே!
காதல் கனியும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

மாணவர்களே!
படிப்பில் ஆர்வம் பிறக்கும். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நல்ல நட்புச் சூழல் உருவாகும். ராசிநாதன் புதன் 7ம் தேதி வரை 5ம் வீட்டில் வலுவாக இருப்பதால் வியாபாரம் செழிக்கும். பற்று வரவு உயரும்.

புது ஏஜென்சி எடுப்பீர்கள். நிலுவையிலிருந்த பாக்கித் தொகை கைக்கு வரும். ஏற்றுமதி இறக்குமதி, கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும்.

சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். புதிய வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி புது வேலை அமையும்.

எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.

கலைத்துறையினர்களே!
மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். விவசாயிகளே! வங்கிக் கடன் தள்ளுபடியாகும். எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். வசதி, வாய்ப்புகள் பெருகும் மாதமிது.

ராசியான தேதிகள்:
நவம்பர் 19,20,21,22,28,29,30 மற்றும் டிசம்பர் 1,6,7,9,15 .

சந்திராஷ்டம தினங்கள்:
டிசம்பர் 10ம் தேதி மாலை 5.14மணி முதல் 11,12ம் தேதி வரை

கடகம்

“குருமொழி கேளாதவனும், தாய் சொல்லை தட்டுபவனும் உருவேற மாட்டான்”, என்ற சூட்சுமத்தை உணர்ந்த நீங்கள், பெரியவர்களை மதிப்பவர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

சூரியன் 5ல் நிற்பதால் பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அவர்களின் வருங்காலம் குறித்த கவலைகளும் வந்து நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சனி பலம் பெற்று அமர்ந்திருப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். மனபக்குவம் கிடைக்கும். ராஜ தந்திரமாகப் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும்.

உங்கள் ராசிக்கு சாதகமாக இந்த மாதம் முழுக்க சுக்கிரன் செல்வதால் எவ்வளவு செலவு வந்தாலும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களை தக்க நேரத்தில் பயன்படுத்திக் கொள்வீர்கள். வீண் விவாதங்களெல்லாம் குடும்பத்தில் நீங்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

ஆனால் 8ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகள் வந்துச் செல்லும்.

அரசியல்வாதிகளே!
தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் தலைமையிடம் கொண்டு செல்வது நல்லது.

கன்னிப் பெண்களே!
பெற்றோர் நீங்கள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த பொருளை வாங்கித் தருவார்கள். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.

மாணவர்களே!
உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கெட்ட நண்பர்களை அறவே ஒதுக்குங்கள். குரு சாதகமாக இருப்பதால் வியாபாரத்தை நவீன மயமாக்குவீர்கள். சில மாற்றங்களையும் கொண்டு வருவீர்கள். கணிசமாக லாபம் உயரும். பழைய பாக்கிகளும் வசூலாகும். பங்குதாரர்களையும் மாற்றுவீர்கள்.

வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். இரும்பு, கட்டிடம், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நீண்டகாலமாக கிடைக்க வேண்டிய, ஆனால் தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என்றாலும், கொஞ்சம் வேலைச்சுமை இருக்கும். உங்களுக்கு ஆதரவாக இருந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்.

கலைத்துறையினர்களே!
கற்பனைத் திறன் வளரும். விவசாயிகளே! இழுபறியில் இருந்த நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாக முடியும். வற்றிய கிணறு சுரக்கும். மாற்றுப் பயிரால் லாபமடைவீர்கள். ஆளுமைத் திறன் அதிகரிப்பதுடன் அதிகாரப் பதவியில் அமர்த்தப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:
நவம்பர் 21,22,24,30 மற்றும் டிசம்பர் 1,2,3,4,9,10,11,12 .

சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 17,18ம் தேதி காலை 8.51 மணி வரை மற்றும் டிசம்பர் 13,14,15ம் தேதி மாலை 4 மணி வரை.

சிம்மம்

ஒரு அடி அடித்தாலும் பட்டுக் கொள்ளலாம், ஆனால் தரக் குறைவாக ஒரே ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் தாங்கிக் கொள்ளாத நீங்கள், தன்மானச் சிங்கங்கள். இந்த மாதம் முழுக்க சூரியன் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். தடைகளெல்லாம் நீங்கும்.

ஆரோக்கியம், அழகு, இளமை கூடும். தைரியம் பிறக்கும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சிலருக்கு புது வேலை கிடைக்கும். வீடு, மனை வாங்குவீர்கள்.

ஆனால் குருபகவானும் 4ல் நிற்பதால் மனக்குழப்பம், தடுமாற்றம், வேலைச்சுமை, நிம்மதியற்ற போக்கு வந்து செல்லும். சனியும் 5ல் தொடர்வதால் பிள்ளைகள் கோபமாகப் பேசுவார்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் மனதிலே ஒரு தெளிவு பிறக்கும். குழப்பங்கள் நீங்கும்.

விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குமளவிற்கு பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சிலர் வேறு வீடு மாறுவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கும் கூடி வரும். இளைய சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

புதனும் சாதகமாக இருப்பதால் நண்பர்களால் பண உதவிகள் கிடைக்கும். ஷேர் மூலமும் பணம் வரும். ஆனால் 7ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் கணவன் மனைவிக்குள் சின்னச் சின்னக் கருத்து மோதல்கள் வரும். சில நேரங்களில் வீண் சந்தேகத்தாலும், ஈகோ பிரச்னையாலும் பிரிய வாய்ப்பிருக்கிறது. அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள்.

கன்னிப் பெண்களே!
உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

மாணவர்களே!
சோம்பல் நீங்கும். கெட்ட பழக்கங்கள் விலகும். மதிப்பெண் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள்.

வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உத்தியோகத்தில் சிலர் உங்களுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுவார்கள்.

ஆனால் அவற்றையெல்லாம் முறியடித்து மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களுடன் நெருங்கிப் பழக வேண்டாம்.

கலைத்துறையினர்களே!
புது வாய்ப்புகளால் பேசப்படுவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

விவசாயிகளே! எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மக்காச்சோளம், துவரை, கரும்பு லாபம் தரும். விட்டதை பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:
நவம்பர் 17,24,25,26,27 மற்றும் டிசம்பர் 2,3,4,5,12,13,14 .

சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 18ம் தேதி காலை 8.51 மணிமுதல் 19,20ம் தேதி மாலை 5.55 மணி வரை.

கன்னி

“இடித்து அடித்து ஒரு கூடை இடுவதிலும், பிடி சோறு அன்பாய்ப் போடுவதே மேல்” என்ற பழமொழியை அறிந்த நீங்கள், பசியென வந்தவரிடம் பாசமாய் பேசி பாங்காக பரிமாறுவீர்கள். ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் எதிலும் மகிழ்ச்சி தங்கும். அலைபாயும் மனசு அடங்கும்.

வருங்காலத் திட்டமெல்லாம் தீட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். பழைய உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். குருபகவான் 3ல் மறைந்திருப்பதால் முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள்.

ஆனால் கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 2ல் அமர்ந்துக் கொண்டு கண், காது மற்றும் பல் வலியைத் தந்த சூரியன் இப்போது 3ம் வீட்டில் நுழைவதால் அரசால் அனுகூலம் உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்குகளும் சாதகமாகும். அடிமனதில் தைரியம் பிறக்கும். பழைய நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

குடும்பத்தில் அமைதி உண்டாகும். உங்கள் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் திடீரென்று அறிமுகமானவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சில கெட்ட பழக்க வழக்கங்கள் உங்களுக்கு ஏற்படும்.

உங்களின் தனபாக்யாதிபதியான சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் கணவன் மனைவி மனம் விட்டு பேசுவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். வீடு வாங்குவது, கட்டுவது நல்ல விதத்தில் முடியும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள்.

உங்கள் செவ்வாய் பகவான் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வழக்கில் வெற்றி உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிட்டும். அரசாங்கத்தால் ஆதாயமடைவீர்கள். தடைப்பட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள்.

அரசியல்வாதிகளே!
கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார்.

கன்னிப் பெண்களே!
திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புது வேலை கிடைக்கும். மாணவர்களே! உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெற்று பெற்றோரை தலைநிமிரச் செய்வீர்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றமும், லாபமும் உண்டு.

முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நல்ல அனுபவமிக்க வேலையாட்கள் பணியில் வந்து சேர்வார்கள். மருந்து, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் வகைகளால் ஆதாயமுண்டு. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும். மேலதிகாரிகள் உங்களை நம்பி புது பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினர்களே!
உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

விவசாயிகளே!
பூச்சி, எலித் தொல்லை குறையும். வீட்டில் நல்லது நடக்கும். மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:
நவம்பர் 17,18,19,25,26,27,28 மற்றும் டிசம்பர் 4,6,7,9,14,15

சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 20ம் தேதி மாலை 5.55மணி முதல் 21,22ம் தேதி வரை.

துலாம்

“எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வம் அடிக்கும்” என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த நீங்கள், வசதி வாய்ப்புகள் வந்தாலும் ஏழை எளியோரை மதிப்பவர்கள்.

உங்கள் ராசிக்குள்ளேயே கடந்த ஒருமாத காலமாக அமர்ந்து உங்களை கோபப்பட வைத்த சூரியன் இப்போது 2ல் அமர்ந்திருப்பதால் கோபமும், அலைச்சலும் ஒரளவு குறையும். கண் வலி, காது வலி வரக்கூடும். சோப்பு, ஷாம்பு இவற்றையெல்லாம் அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்காதீர்கள்.

சனி பகவான் 3ம் வீட்டிலேயே முகாமிட்டிருப்பதால் தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். சின்னச் சின்ன விவாதங்கள், வீண் சண்டைகளையெல்லாம் ஒதுக்குவீர்கள். குறைக் கூறிக் கொண்டிருப்பவர்கள், புலம்பிக் கொண்டிருப்பவர்களையும் தவிர்ப்பீர்கள். மனைவி பக்கபலமாக இருப்பார்.

சுக்கிரன் ராசிக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணி நிறைவடையும்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிலும் வெற்றி, மகிழ்ச்சி கிடைக்கும். தந்தைவழியில் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்திருந்த பணமும் கைக்கு வரும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால் செவ்வாய் 5ல் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதகமாக இருப்பார்கள்

அவர்களை கண்டிக்கிறேன் என்ற பேரில் கஷ்டப்படுத்தாதீர்கள். அன்பாகச் சொல்லி புரிய வையுங்கள். அரசியல்வாதிகளே! தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தை பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள்.

மாணவர்களே!
அதிகாலையில் எழுந்து படிப்பதுடன், விடைகளை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பார்ப்பது நல்லது. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடுகள் செய்வது நல்லது. தொழிலில் ஓரளவு லாபம் வரும். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம்.

அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். ரியல் எஸ்டேட், பதிப்பகம் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள் என்றாலும், பணிகளை முடிப்பதில் அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும்.

கலைத்துறையினர்களே!
விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

விவசாயிகளே!
வரப்புச்சண்டை, வாய்க்கால் தகராறு என்று நேரத்தை வீணடிக்காதீர்கள். விளைச்சலில் கவனம் செலுத்துங்கள். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் குறைந்து ஆக்கப்பூர்வமான பாதையில் பயணிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:
நவம்பர் 19,20,21,22,28,29,30 மற்றும் டிசம்பர் 1,6,7,9,10,12.

சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 23,24ம் தேதி வரை.

விருச்சிகம்

“ஓடு மீன் ஓட உறு மீன் வரும் அளவும் வாடி இருக்கும் கொக்கைப் போல்” காலம் நேரம் கனிந்து வரும் வரை காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்கள் நீங்கள் தான். சுக்கிரன் சாதகமான வீட்டில் இருப்பதால் பணப்புழக்கம் திருப்தி தரும். வீண் சங்கடங்கள் நீங்கும்.

வாகன வசதிப் பெருகும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆனால் ஜென்ம குரு நடைபெறுவதால் வேலைச்சுமை அதிகமாகும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

திடீரென்று அறிமுகமாகுபவர்களை அதிகம் நம்பாதீர்கள். உங்கள் ஜீவனாதிபதியான சூரியன் கடந்த ஒரு மாத காலமாக 12ல் அமர்ந்து தூக்கத்தையும், நிம்மதியையும் குறைத்தார். ஆனால் இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிக்குள்ளே அமர்ந்திருப்பதால் மனஇறுக்கம் நீங்கும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். தந்தையாரின் உடல் நிலை சீராகும்.

தந்தைவழி சொத்துக்கள் வந்து சேரும். ஆனால் ஏழரைச் சனி நடைபெறுவதால் கொஞ்சம் மந்தம், மறதி, தூக்கம் இருக்கும். கால் கட்டை விரலில் அடிப்படக் கூடும். பல் வலி நீங்கும்.

புதன் இந்த மாதம் முழுக்க வலுவான வீடுகளில் செல்வதால் அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகளையெல்லாம் இனி விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த அலைச்சல், டென்ஷன் நீங்கும். மகளுக்கு திருமணப் பேச்சு வார்த்தைகள் சிறப்பாக முடியும். செவ்வாய் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சொத்து வாங்கும் போது தாய் பத்திரத்தை சரிபார்த்து வாங்குவது நல்லது.

அரசியல்வாதிகளே!
உட்கட்சி பூசல் வெடிக்கும். கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குங்கள்.

கன்னிப் பெண்களே!
தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும்.

மாணவர்களே!
உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் உயர்கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவுப்படுத்துவீர்கள். ஏழரைச் சனி நடப்பதால் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். அவர்களை பக்குவமாக தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது.

வேற்றுமொழி, வேற்று மாநிலத்தை சார்ந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். விலகிச் சென்ற பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

சில ஆலோசனைகளும் தருவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கலைத்துறையினர்களே! பழைய நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும்.

விவசாயிகளே!
மகசூல் அதிகரிக்கும். ஊரில் மதிப்பு மரியாதை கூடும். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். சந்தேகங்கள், சங்கடங்கள் நீங்கி நிம்மதி தென்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:
நவம்பர் 21,22,23,24,30 மற்றும் டிசம்பர் 1,2,9,10,11,12,15.

சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 25,26,27ம் தேதி காலை 7.46மணி வரை.

தனுசு

“உற்றார் தின்றால் பற்றாய் விளையும், ஊரார் தின்றால் வேராய் விளையும்” என்பதை அறிந்த நீங்கள், சொந்த பந்தங்களை விட அண்டை அசலாருக்கு அதிகம் கொடுத்து உதவுவீர்கள். சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோ ஓவன் புதிதாக வாங்குவீர்கள்.

புதனும் சாதகமாக இருப்பதால் புது வேலை கிடைக்கும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.

ஆனால் குரு 12ம் வீட்டில் நீடிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

இந்த மாதம் முழுக்க உங்களின் பாக்யாதிபதியான சூரியன் 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தந்தையாருக்கு உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். ஏழரைச் சனி நடைபெறுவதால் புதியவர்களை நம்பி பெரிய காரியங்களில் இறங்க வேண்டாம்.

கொஞ்சம் குழப்பங்கள், தடுமாற்றங்கள் வரக்கூடும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். ராசிக்கு 3ம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் வழக்குகள் சாதகமாக முடியும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள்.

சகோதரங்கள் பாசமழைப் பொழிவார்கள். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது.

கன்னிப் பெண்களே! சாணக்கியத்தனமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். மாணவர்களே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். விடுபட்ட பாடத்தில் தேர்ச்சி பெறுவீர்கள். லாப வீட்டில் சுக்கிரன் நிற்பதால் வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

வேலையாட்களிடம் கறாராக இருங்கள். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். புது பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். துணி, உணவு, கன்ஸ்டரக்ஷன் மூலம் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும், உடன் பணிபுரிபவர்களால் பிரச்னைகள் வரக்கூடும்.

கலைத்துறையினர்களே!
வசதி, வாய்ப்புகள் பெருகும். உங்களின் திறமைகள் வெளிப்படும்.

விவசாயிகளே!
வங்கிக் கடனுதவி கிட்டும். பழைய மோட்டார் பம்பு செட்டை மாற்றுவீர்கள். வாய்க்கால் சண்டை ஓயும். எதிர்நீச்சலில் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:
நவம்பர் 17,23,24,25,26 மற்றும் டிசம்பர் 2,3,4,5,12,13,14,15

சந்திராஷ்டம தினங்கள்:

நவம்பர் 27ம் தேதி காலை 7.46மணி முதல் 28,29ம் தேதி காலை 10.07 மணி வரை.

மகரம்

“நிலத்திற்கு தகுந்தாற்போல் தான் கனியின் சுவை அமையும், குலத்திற்கு தகுந்தாற்போல் தான் குணமும் இருக்கும்” என்பதை அறிந்த நீங்கள் தராதரம் அறிந்து பழகுபவர்கள். குருபகவான் லாப வீட்டிலேயே நீடிப்பதால் குடும்ப வருமானம் உயரும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும்.

இந்த மாதம் முழுக்க சூரியன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்து போக முடியாமல் இருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தந்தை உதவிகரமாக இருப்பார்.

தந்தைவழி சொத்தும் வந்து சேரும். சுக்கிரனும் ஆட்சிப் பெற்று நிற்பதால் திடீர் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு கட்டுவீர்கள். சிலர் வீடு வாங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டுமென்று நினைத்த பொருள் ஒன்றை வாங்குவீர்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். பிதுர்வழி சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

செவ்வாய் 2ல் நிற்பதால் இருப்பதால் பேச்சில் கம்பீரம் பிறக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும் என்றாலும், ஏழரைச் சனி தொடர்வதால் செலவுகள் அதிகமாகும். அலைச்சல்கள் இருந்து கொண்டேயிருக்கும்.

அரசியல்வாதிகளே!
மேலிடத்திற்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். புது நட்பு மலரும்.

மாணவர்களே! உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

வகுப்பறையில் சக மாணவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். வாடிக்கையாளர்கள் உங்கள் மனங்கோணாமல் நடத்துக் கொள்வார்கள்.

ஏற்றுமதி இறக்குமதி, டிரான்ஸ்போர்ட், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் வகைகளால் திடீர் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தொல்லை கொடுத்து வந்த மூத்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்.

எதிர்பார்த்த புது சலுகைகளும் கிடைக்கும்.

கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு ரசிகர் கூட்டம் அதிகரிக்கும்.

விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் சுமுகமான தீர்வு கிடைக்கும். கூட்டுறவு வங்கியில் லோன் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க வழி கிடைக்கும். மகிழ்ச்சியும், மனநிறைவும் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்:
நவம்பர் 17,18,19,20,27,28 மற்றும் டிசம்பர் 6,7,9,14,15.

சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 29ம் தேதிகாலை 10.07 மணி முதல் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதி நண்பகல் 12.46 மணி வரை.

கும்பம்

“புதருக்குள் இருக்கும் இருபறவைகளை விட கையில் இருக்கும் ஒரு பறவையே மேல்” என நினைக்கும் நீங்கள் வேகமாகவும், விவேகமாகவும் செயல்படுவதில் வல்லவர்கள். உங்கள் ராசிக்கு 10ம் வீட்டிற்குள் சூரியன் நுழைந்திருப்பதால் சவாலான காரியங்களையும் சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். கோபம் விலகும். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.

மனைவி வழியில் உதவிகள் உண்டு. மனைவி வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அவர்கள் உங்களின் புதுத் திட்டங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சிலருக்கு புது வேலையும் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். செல்வாக்குக் கூடும். லாப வீட்டிலேயே சனி வலுவாக நீடிப்பதால் எவ்வளவு செலவுகள், அலைச்சல்கள் வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தியும், வல்லமையும் உண்டாகும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோ ஓவன் வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் அதிரடி மாற்றங்களும், முன்னேற்றங்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். தைரியம் உண்டாகும். வி.ஐ.பிகள் ஆதரவாக இருப்பார்கள்.

ஆனால் உங்கள் ராசியிலேயே செவ்வாய் நிற்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். அடிக்கடி கோபப்படுவீர்கள். உண்ணும் உணவு வகைகளை கொஞ்சம் மாற்றியமைத்துக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகளே! கட்சியில் மேல்மட்டத் தலைவர்களுக்கு நெருக்கமாவீர்கள்.

கன்னிப் பெண்களே!
உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

மாணவர்களே!
வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல், தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

குரு சரியில்லாததால் வியாபாரத்தில் போட்டியாளர்களை முறியடிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக திருத்துங்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

வாகன உதிரி பாகங்கள், உணவு, பெட்ரோ கெமிக்கல் மூலமாக லாபம் உண்டாகும். பங்குதாரர்களால் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். உத்தியோகத்தில் திடீர் முன்னேற்றம் உண்டாகும். உங்களைப் புரிந்துக் கொள்ளும் ஒருவர் அதிகாரியாக வந்து சேருவார். பதவி, சம்பள உயர்வு உண்டு. இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்களை சின்னச் சின்ன நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்.

கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த நவீன ஒட்டுரக விதைகளை பயன்படுத்துங்கள். காய்கறி, பழ வகைகளால் ஆதாயமுண்டு. சோதனைகளையும் தாண்டி சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:
நவம்பர் 19,20,21,27,28,29,30 மற்றும் டிசம்பர் 6,7,9.

சந்திராஷ்டம தினங்கள்:
டிசம்பர் 1ம் தேதி நண்பகல் 12.46 மணிமுதல் 2,3ம் தேதி மாலை 4.38 மணிவரை.

மீனம்

“காட்டுக்குப் புலி ஆதரவு, புலிக்கு காடு ஆதரவு” என்ற பழமொழியை அறிந்து வைத்திருக்கும் நீங்கள், ஒரு வட்டத்திற்குள்ளே நில்லாமல் தேசமெங்கும் சுற்றுபவர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்கள் ரசனை மாறும்.

உறவினர்களால் அனுகூலம் உண்டு. பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். சூரியன் 9ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவரை பகைத்துக் கொள்வீர்கள். சேமிப்புகள் கரையும். பணப்பற்றாக்குறையும் தலைத்தூக்கும்.

உங்கள் ராசிக்கு 12ல் செவ்வாய் அமர்ந்திருப்பதால் கொஞ்சம் சிக்கனமாக எதையும் செய்யப் பாருங்கள்.

செலவினங்கள் அதிகரிக்கும். தூக்கமில்லாமல் போகும். எண்ணெய் பதார்த்தங்களை உணவில் தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். ஆனால் ராசிநாதன் குரு பகவான் வலுவாக நிற்பதால் பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி பிறக்கும்.

பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். கன்னிப்பெண்களே! உயர்கல்வியில் அலட்சியம் வேண்டாம். பெற்றோருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுங்கள்.

மாணவர்களே! சதா விளையாட்டு என்றிருக்காதீர்கள். கொஞ்சம் படிப்பிலும் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைப் பயன்படுத்துவீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். வியாபாரிகள் நலச்சங்கம் இயக்கம் இவற்றிளெல்லாம் பதவிக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கம்ப்யூட்டர், கட்டிடம் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். மேலதிகாரிக்கு நெருக்கமானாலும் சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும்.

கலைத்துறையினர்களே!
கிசுகிசுக்கள், வதந்திகள் என்று ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் உங்களின் விடாமுயற்சியால் சாதித்துக் காட்டுவீர்கள். விவசாயிகளே! மகசூல் அதிகாரிக்கும். வயலில் எலித்தொல்லை, பூச்சித் தொல்லை குறையும். தைரியமான முடிவுகளால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:
நவம்பர் 21,22,26,27,29,30 மற்றும் டிசம்பர் 1,2,9,10,11,12.

சந்திராஷ்டம தினங்கள்:
டிசம்பர் 3ம் தேதி மாலை 4.38 மணி முதல் 4,5ம் தேதி வரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*