மங்களகரமான விளம்பி வருடம் 04.10.2018 வியாழக்கிழமை அன்று, அதாவது புரட்டாசி மாதமான இந்த மாதத்தில் வரும் 18-ம் நாளான, தசமியில் சனிபகவான் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில், சரியாக 10.07-க்கு, துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்கிறார். குரு பகவான் இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் இடத்தின் பலமே அதிகம். எனவே, குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறுவர். 2018-2019-ம் ஆண்டிற்கான குருப்பெயர்ச்சி பலன்கள் பற்றி பார்ப்போம்.
மேஷம்
பிரச்னைகளை சமாளிக்கும் மன தைரியம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் மறைவதால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும், மனப்பக்குவத்தையும் தருவார்.
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் பாக்யவிரயாதிபதியான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். தந்தையார் ஆதரவாக இருப்பார். அவர்வழி உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். புது வேலை கிடைக்கும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் ஜீவனாதிபதியும்லாபாதிபதியான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச்சுமை, பணப்பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள், குடும்பத்தில் சலசலப்பு, உத்யோகத்தில் எதிர்ப்புகள் வந்து செல்லும்.
கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அலட்சியம் வேண்டாம். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் உங்களின் தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். திடீர் இடமாற்றம் உண்டு. சக ஊழியர்களின் வேலைகளை சேர்த்துப் பார்ப்பீர்கள். அயல்நாட்டு வாய்ப்புகள் வரும்.
ரிஷபம்
பெருந்தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்ட நீங்கள், இதமான பேச்சால் எல்லோரையும் கவர்ந்திழுப்பவர்கள். தன்கையே தனக்குதவி என்று வாழும் நீங்கள், கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி வாழ்வின் சிகரத்தை எட்டிப் பிடிப்பவர்கள். இதுவரை ஆறாம் வீட்டில் அமர்ந்து உங்களை அவமானப்படுத்திய குருபகவான் பல கஷ்ட, நஷ்டங்களை தந்து, மறைமுக எதிர்ப்புகளால் உங்களை திணறடித்து, கடன் பிரச்னைகளால் தூக்கத்தைக் குறைய வைத்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்க இருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் அஷ்டமலாபாதிபதியான குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். மூத்த சகோதர வகையில் சச்சரவு வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். புது பதவிகள், பொறுப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் பாக்யாதிபதியும்ஜீவனாதிபதியுமான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்யம் சீராகும். சொந்தமாக வீடு கட்டுவீர்கள். வேலை கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். கல்யாணம் கூடி வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் தனபூர்வபுண்ணியாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளால் சொந்தபந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும்.
மிதுனம்
எதிலும் புதுமையை புகுத்துபவர்களில் வல்லவர்களான நீங்கள், பொது உடைமைச் சிந்தனையும் அதிகம் உள்ளவர்கள். நிறை குறைகளை அலசி ஆராய்ந்து மற்றவர்களை துல்லியமாக கணிக்கும் நீங்கள் சிரமப்படுபவர்களை கைதூக்கி விடுபவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து உங்களின் வருங்காலத் திட்டங்களை நிறைவேற்றியதுடன், குடும்ப வருமானத்தையும் ஓரளவு உயர்த்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 6ம் வீட்டில் மறைகிறார். சகட குருவாச்சே! சங்கடங்களையும், எதிர்ப்புகளையும் தருவாரே என்று கலங்காதீர்கள். ஓரளவு நல்லதே நடக்கும். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சமூகத்தின் மீதும் சின்னச் சின்ன கோபமெல்லாம் வந்து நீங்கும்.
குருபகவான் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு. அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சாமர்த்தியமாகப் பேசி காய் நகர்த்துவீர்கள். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். குரு 10ம் வீட்டைப் பார்ப்பதால் புது வேலை கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்கும் சக்தி கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். குரு 12ம் வீட்டை பார்ப்பதால் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுபசெலவுகளும் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
கடகம்
தொலை தூரச்சிந்தனையுடைய நீங்கள், நாளை நமதே என்ற நம்பிக்கையுடன் எதையும் செய்பவர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் நீங்கள், எதிரிகளையும் சிந்திக்க வைக்கும் செயல்திறன் கொண்டவர்கள். இதுவரை உங்களின் ராசிக்கு சுகவீடான 4ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் விரயத்தையும், ஏமாற்றங்களையும், இனம்புரியாத பயத்தையும், தாயாருடன் பகைமையையும் ஏற்படுத்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 5ம் வீட்டில் அமர்வதால் உங்களை புதிய பாதையில் பயணிக்க வைப்பார். உங்கள் வாழ்வில் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும்.
குரு உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கோயில் கும்பாபிஷேகத்தை தலைமையேற்று நடத்துவீர்கள். தந்தையாருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். அவரின் ஆரோக்யம் சீராகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பதினோறாவது வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் புகழ், கௌரவம் கூடும். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
சிம்மம்
போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் அஞ்சாத நீங்கள், யாருக்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள். முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முன்னேறும் குணமுடைய நீங்கள் திடீரென்று முடிவெடுத்து எதிரிகளை திக்குமுக்காடச் செய்துவிடுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களின் புதிய முயற்சிகளை முடக்கி வைத்தாரே! எந்த ஒரு வேலைகளையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைக்கழித்தாரே! எதை செய்தாலும் அதில் ஒரு தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்தினாரே! தந்தையாருக்கு மருத்துவச் செலவுகளையும், அவருடன் கருத்து மோதல்களையும் ஏற்படுத்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதை தெரிந்து கொள்வது நல்லது.
04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்அஷ்டமாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு வரும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வாகனத்தை மாற்றுவீர்கள். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் சஷ்டமசப்தமாதிபதியான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பிறர் மீது நம்பிக்கையின்மை, அசதி, சோர்வு, சுபச் செலவுகள் வந்து போகும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும்.
கன்னி
கனவிலும், கற்பனையிலும் மாறிமாறி சஞ்சரிக்கும் நீங்கள் நிஜத்தைத் தேடி அலைவீர்கள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாகப் பழகும் நீங்கள், பலரையும் வழிநடத்திச் செல்லும் அளவிற்குப் பட்டறிவு கொண்டவர்கள். விட்டுக் கொடுக்கும் மனது கொண்ட நீங்கள், எல்லோரையும் அன்பால் அரவணைப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் அமர்ந்து கொண்டு பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 3ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். எந்த ஒரு வேலைகளையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும்.
குரு உங்கள் ராசிக்கு 7ம் வீட்டை பார்ப்பதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. கூடாப்பழக்கம் விலகும். கனவுத் தொல்லை குறையும். குரு 9ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு உண்டு. தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். வேலை கிடைக்கும். குரு லாப வீட்டை பார்ப்பதால் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.
துலாம்
ந்த ஊர் சென்றாலும் சொந்த ஊரை மறவாத நீங்கள் அவ்வப்போது கடந்த கால நினைவுகளில் மூழ்குவீர்கள். வாழ்க்கையின் உச்சகட்டத்தை எட்டிய பிறகும் கூட விழுந்து கிடந்ததை மறக்காதவர்களே! தோல்வி என்பது வெற்றிக்கான ஏணிப்படி தான் என்பதை உணர்ந்த நீங்கள், கடின உழைப்பாளிகள். இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்து வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பையும், சலிப்பையும் ஏற்படுத்தினாரே! எங்கு சென்றாலும் ஏமாற்றங்களையும், இழப்புகளையும் தந்தாரே! குடும்பத்திலும் உங்களுக்கென்று ஒரு தனித்துவம் இல்லாமல் செய்தாரே! எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் இல்லையே என்று ஆதங்கப்பட்டு புலம்ப வைத்தாரே! இப்படி பலவகையிலும் இன்னல்களை மாறி மாறித் தந்து மனதில் அமைதியே இல்லாமல் நிலை குலையச் செய்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான 2ம் வீட்டில் அமர்வதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும்.
குரு உங்கள் ராசிக்கு 6ம் வீட்டை பார்ப்பதால் கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பெரிய நோயிலிருந்து விடுபடுவீர்கள். குரு 8ம் வீட்டை பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ஆயுள் கூடும். வேற்றுமதத்தினர் உதவுவார். குரு 10ம் வீட்டை பார்ப்பதால் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்கள் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.
விருச்சிகம்
விரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும், வினோதப் போக்கும் கொண்ட நீங்கள், நாலும் அறிந்தவர்கள். தன்மானம் அதிகமுள்ள நீங்கள் தயவு, தாட்சண்யம் அதிகம் பார்ப்பவர்கள். விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகள், ஏமாற்றங்கள், தூக்கமின்மையை தந்து கொண்டிருந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். ஒரு தேடலும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களை எதிர்ப்பீர்கள். அவசரப்பட்டு வாக்குறுதி தந்து அதை நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள்.
குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டைபார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீரும். சிலர் தங்களது பங்கை விற்று நகரத்தை ஒட்டி இடம் வாங்குவீர்கள். தியானம், பொது சேவையில் மனம் ஈடுபாடு கொள்ளும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு 7ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கணவன், மனைவிக்குள் சச்சரவு இருந்தாலும் பாசம் குறையாது.
தனுசு
மற்றவர்கள் பயந்து பின்வாங்கும் செயல்களை தானாக முன்வந்து தைரியமாக செய்யும் ஆற்றலுடைய நீங்கள், தன்னை மதியாதவர்களுக்கும் மறுக்காமல் உதவுபவர்கள். எப்போதும் நியாயத்திற்காக போராடும் நீங்கள், மனசாட்சியை முக்கிய சாட்சியாக நினைப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து கொண்டு ஓரளவு வசதி, வாய்ப்புகளையும், திடீர் யோகங்களையும், பணவரவையும் தந்து கொண்டிருந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 12ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். பிரபலமான புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பழைய வீட்டை சிலர் இடித்து புதுப்பிப்பீர்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைத்து சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்குவீர்கள்.
குரு உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் வேறு ஊருக்கு குடிபெயர்வீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை துண்டிப்பீர்கள். குரு 6ம் வீட்டை பார்ப்பதால் பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குரு 8ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்யம் கூடும். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
மகரம்
குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சமமாக மதிக்கும் நீங்கள், மற்றவர்களின் மனம் நோகாமல் பேசக்கூடியவர்கள். தடைக்கற்களை படிக்கட்டுகளாக்கி முன்னேறும் நீங்கள் ஆரவாரமில்லாமல் சாதிப்பவர்கள். கொடை குணம் கொண்ட நீங்கள் குறுகிய வட்டத்தில் வாழாமல் பரந்து விரிந்த சிந்தனை படைத்தவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு உத்யோக ஸ்தானமான 10ம் வீட்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்கான வேலைச்சுமையையும், உங்களைப் பற்றிய அவதூறு பேச்சுக்களையும், கௌரவக் குறைவான சம்பவங்களையும் அவமானத்தையும் ஏற்படுத்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 11ம் வீட்டில் அமர்வதால் இப்போது என்னவாகுமோ, அடுத்தது என்ன நடக்குமோ என்ற அச்சத்தால் கூனிக்குறுகி, ஒதுங்கியிருந்த நீங்கள், இனி வெளியுலகத்திற்கு வருவீர்கள். எந்த வேலைகளையும் முழுமையாக முடிக்க முடியாமல் தட்டுத் தடுமாறினீர்களே! குடும்பத்திலும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் பிரச்னை வந்ததே! இனி அவற்றிற்கெல்லாம் லாப ஸ்தான குருபகவான் நல்ல தீர்வுகளைத் தருவார். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள்.
உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தன்னிச்சையாக, தைரியமாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். குரு 5ம் வீட்டை பார்ப்பதால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி இனி தெளிவு பிறக்கும். மகளுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல வரன் அமையும். மகன் கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவார். உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குரு ராசிக்கு 7ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். மனைவிவழியில் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
கும்பம்
தன்கடன் பணிசெய்து கிடப்பதே என்று காலநேரம் பாராமல் கடினமாக உழைக்கும் நீங்கள், அழுதாலும் உதட்டால் புன்னகைக்கும் குணமுடையவர்கள். அமைதியை விரும்பும் நீங்கள், போட்டியென வந்து விட்டால் விஸ்வரூபம் எடுத்து மற்றவர்களை மிரள வைப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து கொண்டு தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி.ஐ.பிகள் மத்தியில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத் தந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவியை பறித்துவிடுவாரே! கையில் காசுபணம் தங்காதே! என்றெல்லாம் பதட்டப்படாதீர்கள். ஓரளவு நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும்.
குரு உங்கள் ராசிக்கு 2ம் வீட்டை பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். குரு ஏழாம் பார்வையால் 4ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். கை, கால், முதுகு வலியிலிருந்து தாயார் விடுபடுவார். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். புது வீட்டில் குடி புகுவீர்கள். கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். நவீன ரக வாகனம், செல்போன் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். குரு 6ம் வீட்டைப் பார்ப்பதால் மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும்.
மீனம்
அடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக் கொடுக்காத நீங்கள் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் அநாவசியமாகத் தலையிட மாட்டீர்கள். சமயோஜித புத்தியால் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், எப்பொழுதும் பரபரப்பாக இருப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் மறைந்து கொண்டு எதையும் எட்டாக் கனியாக்கியதுடன், மனஅழுத்தத்தையும், எதிர்மறை எண்ணங்களையும், விபத்துகளையும் தந்து கொண்டிருந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்கு பாக்ய வீடான 9ம் வீட்டில் நுழைவதால் வாழ்வில் புது வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். ‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு’ என்ற பழமொழிக்கேற்ப இனி தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும்.
குடும்ப விசேஷங்களில் ஒதுக்கப்பட்டீர்களே! பொது நிகழ்ச்சிகளிலும் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். வளைந்து கொடுத்தால் வானம் போல் உயரலாம் என்பதை உணருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகளுக்கு தீர்வு கிடைக்கும். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த சொந்த, பந்தங்களெல்லாம் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள்.