மங்களங்களை மட்டுமே அருளும் செவ்வாய் பகவான் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் இடத்தைக்கொண்டே பலன்களை அளிக்கிறார். செவ்வாய் பகவான், தன்னை வணங்குவோருக்கு மங்களங்களை அருளும் இரக்கக் குணம் கொண்டவர்.
செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருக்கிறது என்பதை அறிந்தவுடன் நாம் தவித்துப்போகிறோம். `செவ்வாய் தோஷம் கொண்டவர்களுக்கு திருமணமே அமையாது, அமைந்தாலும் நிலைக்காது’ என்றெல்லாம் சொல்லி, அவர்களுக்கு அவநம்பிக்கையை உருவாக்கிவிடுகிறோம்.
செவ்வாய் தோஷம் என்பது மிகவும் நுட்பமான அறிவியல். திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தாம்பத்யத்தைக் குறிக்கும் கிரகம். ஜோதிடர்ஒருவரின் மணவாழ்க்கையில் செவ்வாய்க் கிரகம், இன்ப வாழ்வை தீர்மானிக்கும் சக்தி படைத்தது. இந்த இடத்தில் செவ்வாய் இருந்தால் ஆபத்து என்பதெல்லாம் தவறானது. முழுமையாகக் கற்றறிந்த ஜோதிடர்கள், ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தை ஆய்வு செய்து பலன்களைச் சொல்வதே நல்லது.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பல வழிகளில் தோஷநிவர்த்தி செய்துகொள்ளலாம். செவ்வாய்க்கான தலமான வைத்தீஸ்வரன் கோயிலிலிருக்கும் செவ்வாய் பகவானுக்கு செவ்வாய்க் கிழமையன்று விளக்கேற்றி விசேஷ பூஜைகள் செய்து வணங்கலாம். செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் என்பதால் அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசித்து செவ்வாய் பகவானின் அருளைப் பெறலாம். குறிப்பாக திருச்செந்தூர் செல்வது நன்மையளிக்கும். எல்லா சிவாலயங்களிலும் செவ்வாய்க்கிழமைகளில் நவக்கிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி, செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து வணங்குவது நல்ல பலனைத் தரும்.
செவ்வாய் தோஷமுள்ள பெண்ணுக்கு திருமணம் தடங்கலாகிக் கொண்டே வந்தால் வளர்பிறையில் வரும் செவ்வாய்க்கிழமையில் பரிகாரம் செய்ய வேண்டும். அந்த பரிகாரத்தை நாமே நம் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நீராடி சிவந்த ஆடை உடுத்தி மாங்கல்யத்தை தெய்வத்தின் முன் மஞ்சள் சரட்டில் கோர்த்து வைத்து வணங்கி எடுத்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமை முழுவதும் மாங்கல்யத்தை அவிழ்க்க கூடாது. மறுநாள் காலை நீராடி நெற்றியில் குங்குமமிட்டு தெய்வத்தை வணங்கி மாங்கல்யத்தை அவிழ்த்து ஏதாவது ஓர் ஆலயத்தின் உண்டியலில் சிறிது காணிக்கை சேர்த்து சமர்ப்பித்து விட வேண்டும். சிவந்த ஆடையை யாருக்காவது தானம் செய்து விட வேண்டும். இவ்விதம் செய்தால் திருமணம் தடையின்றி விரைவாக நடைபெற்று விடும்.