புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உட்கொண்டு பெருமாளுக்கு விரதமிருப்பது பெரும்பாலானோரின் பழக்கமாகும். குறிப்பாக புரட்டாசியில் வரும் சனிக்கிழமை விரதம் இருந்தால் வளமான வாழ்வு வசப்படும் என்பது நம்பிக்கையாகும். எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்தது தான் என்றாலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாகும். இந்த விரதத்தை முறையாக பின்பற்றினால் நாம் பல பலன்களை அடையலாம். இந்த விரதத்தை எப்படி இருப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
புதன் கிரகம் பெருமாளுக்குரிய கிரகமாகும், புதன் கண்ணிராசியில் புகுவதும் உச்சம் பெறுவதும் புரட்டாசி மாதத்தில் தான் நடைபெறுகிறது. புதனுக்கு சனி கிரகம் நட்பு கிரகமாகும், அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை விரதமிருந்து வணங்குவதன் மூலம் சனிகிரகத்தின் சங்கடத்திலிருந்து பெருமாள் நம்மை காப்பார். அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்ததற்கு சமமாகும்.
புரட்டாசி மாதம் முழுவதும் அசைவத்தை விலக்கி விரதமிருக்க வேண்டும். சனிக்கிழமைகளில் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு வீட்டு வாசலில் கோலமிட வேண்டும். பின் பூஜை அறையை சுத்தம் செய்து குத்துவிளக்கேற்றி வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கை தாயாருடன் இருக்கும் படத்தை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பெருமாளின் படத்திற்கு முன் துளசி இலை தீர்த்தத்தை ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்து வணங்கி அந்த தீர்த்தத்தை சிறிது அருந்தி விரதத்தை தொடங்க வேண்டும்.‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்றைய நாளில் ஒரு பொழுது உணவு மட்டுமே எடுத்துக்கொண்டு விரதம் மேற்கொள்வது நல்லது.
மாலையில் நீராடி அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். வாய்ப்புள்ளவர்கள் சக்கரை பொங்கல், பானகம், வடை, பாயாசம் போன்றவற்றை வீட்டிலேயே செய்து கொண்டு சென்று பெருமாளுக்கு நெய்வேத்யமாக படைத்து தானம் செய்யலாம்.
இந்த விரதத்தை சிரத்தையுடன் மேற்கொள்பவர்களின் தரித்திரம் நீங்கி நற்பலன்கள் ஏற்படும், செல்வவளம் பெருகும் என்பது கண்கண்ட உண்மையாகும்.