அனைத்து ராசிக்குமான குரு பெயர்ச்சி பலன்கள் 2021

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள், ஜாதக ரீதியில் குருபெயர்ச்சி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். பலர் குருபெயர்ச்சி என்றவுடன் தட்சிணாமூர்த்தி பகவானுக்கு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அது மிகப்பெரிய தவறாகும் குரு பகவான் வேறு தட்சிணாமூர்த்தி வேறாகும். நவகிரகங்களில் இருக்கும் குருபகவானை பூஜித்து ஆசிபெருவதே சரியாகும்.வரவிருக்கும் குருபெயர்ச்சியில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்தவிதமான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை அறியலாம் வாருங்கள்.

மேஷ ராசி அன்பர்களுக்கு தற்பொழுது 10 இடத்திலிருந்து பலனளித்துக்கொண்டிருந்த குருபகவான் தற்போது 11 ஆம் இடத்திற்கு மாறுகிறார். இதனால் மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த குருபெயர்ச்சி இலாபகரமான பலன்களை வழங்க இருக்கிறது. 11 ஆம் இடம் தொழில் ஸ்தானம் என்பதால் அதிகப்படியான பொருளாதார ஏற்றத்தை இம்முறை வழங்க போகிறார். நீண்ட நாட்களாக முயற்சி செய்து நடக்காத காரியங்களை இந்த காலகட்டத்தில் மிக சுலபமாக சாதிக்கலாம். எனினும் வருவுக்கு ஏற்ற செலவு இந்த காலகட்டத்தில் ஏற்படும் என்பதால் செலவுகளை சுப செலவுகளாக மாற்றி அமைப்பது நன்மை பயக்கும். திருமணம் தடைபட்டுவந்த அன்பர்கள் இம்முறை முயற்சி செய்தால் நிச்சயம் திருமணம் கைகூடும். திருச்செந்தூர் முருகனை வணங்கிவர நன்மை உண்டாகும்.

ரிஷபராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல முன்னேற்றங்களை கொண்டுவர உள்ளது. ருண ரோக ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் உங்களை வாட்டி வதைத்துவந்த கடன் தொல்லைகள் நீங்கும். எதிர்பார்த்த பணம், தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் தீரும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நீடிக்கும். வாரிசுகளால் நல்ல செய்தி தேடி வரும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு இப்போது தடையில்லாமல் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் இருப்பவர்களுக்கு தற்போது வெளிநாடு செல்லும் வாய்ப்பு மிக எளிதாகக் கிடைக்கும். மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி வாழ்வில் தன் சொந்த அனுபவங்களைப் பயன்படுத்தி ஒருவர் எப்படி முன்னேற முடியும் என்பதை உங்களுக்குப் புரிய வைப்பதாக அமையும்.

மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல பலன்களை வழங்கப்போகிறது. இதுவரை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் இருந்துவந்த குருபகவான் 9 ஆம் இடத்திற்கு இடம்பெயர்கிறார். ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள். அதுபோல துவண்டு போயிருந்த நீங்கள் இனி பெரும் ஊக்கத்தோடு செயல்படும் காலம் வந்துவிட்டது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக நீங்கிவிடும். உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் ஓடி ஒளிவர். புதிதாகத் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், சுப நிகழ்வுகள், திருமணம், சொந்த வீடு வாங்குதல் போன்றவை மிக எளிதாக நிறைவேறும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். தனியார் நிறுவனம் அல்லது அரசுப் பணி போன்றவை கிடைக்கும். வாழ்க்கைத்துணையோடு அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவதோடு குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டால் இந்த காலகட்டத்தில் நீங்கள் உச்சம் தொடுவீர்கள்.

கடக ராசி இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்தில் எந்த ஒரு காரியத்தையும் யோசித்து நிறுத்தி நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். இதுவரை இருந்துவந்த வீண் சந்தேகம், சங்கடங்கள், சண்டை சச்சரவுகள் நீங்கும். பணப்புழக்கத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். வேலையின்மை, காரிய தடை, மருத்துவ செலவு, கடன் பிரச்சனை, வழக்குகளில் பின்னடைவு போன்ற நிகழ்வுகளிலிருந்து படிப்படியாக மீள்வீர்கள்.ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். பணவரவு அதிகரிக்கும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். சொந்தமாக வீடு வாங்கும் முயற்சி வெற்றிபெறும்.நீண்ட நாள் தொழில் வாய்ப் பைப் பெற முயற்சி எடுத்து தடை பட்ட நிலைமாறி அதற்கான வழிகளை பின்பற்றி நன்மை அடைவீர்கள். நவகிரக குருவை வணங்கி மஞ்சள் ஆடை அணிவித்து நெய் தீபம் ஒன்று ஏற்றி வணங்கி வர வாழ்வு வளம்பெறும்.

சிம்ம ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான மகரத்தில் அமர்ந்து ஏராளமான தொல்லைகளைக் கொடுத்துவந்த குருபகவான் 13.11.2021 அன்று ஏழாம் வீட்டுக்கு நகர்வது மகிழ்ச்சியான செய்தியாகும். மனவலிமை, செயல்திறன் வள மான வாழ்வு, உடல் ஆரோக்கியம் போன்ற பலன்களையும் பெறுவீர்கள். புதிய திட்டங்களை செயல்படுத்தி காட்டுவீர்கள். சுமையாக எதையும் நினைக்காமல் அனுபவமாக எடுத்து செயல்படுத்தி காட்டுவீர்கள். எதற்காக இதுவரை போராடிக் கொண்டிருக்கிறீர்களோ, அதில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். பிள்ளைகள் எதிர்காலம் தொடர்பான திட்டமிடல் மேற்கொள்வது நன்மைகளை கொடுக்கும். குருபகவான் உங்கள் லாப வீட்டைப் பார்ப்பதால் இனி தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும். சகோதர உறவுகளால் நன்மைகள் கிடைக்கும். அவர்களோடு இருந்த வருத்தங்கள் நீங்கும். தங்க ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சென்னை திருவலிதாயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவானை வணங்குங்கள். புற்று நோயால் பாதித்தவர்களுக்கு உதவுங்கள் நல்லது நடக்கும்.

கன்னி ராசி அன்பர்களே இந்த குருபெயர்ச்சியில் முதல் ஆறாமிடமான சத்ரு ஸ்தானத்தில் குரு அமர்ந்து உங்களின் தன ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும், விரைய ஸ்தானத்தையும் பார்க்கிறார். ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற மருத்துவ ரீதியான செலவுகளை செய்ய நேரிடும் என்பதால் கவனம் தேவை. பேச்சில் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் தீர்ந்து இல்லறம் நல்லறமாகும். குருபகவான் உங்களின் 10 ம் வீடான மிதுனத்தைப் பார்ப்பதால் புதிய வேலை கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும். உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். பதவியுயர்வு தேடிவரும். பணவரவும் அதிகரிக்கும். வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு ஐந்து நெய் தீபமிட்டு அன்னதானம் செய்துவர துன்பம் நீங்கும்.

துலாம் ராசி அன்பர்களே இந்த குருப்பெயர்ச்சியில் குருபகவான் உங்களின் ராசியையும், பாக்கிய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வையிடுவதால் சிறப்பான நல்ல பலன்களை பெறுவீர்கள். இது வரை தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் கை கூடி வரும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட இரட்டிப்பு லாபம் உண்டாகும். தீர்த்த யாத்திரை செல்லும் வாய்ப்பை சிலர் பெறுவீர்கள். திருமணம் புத்திர பாக்கியம் கிடைக்கும் சூழ்நிலையும் அமையும். சொந்த வீடு, வாகனம் வாங்க தேவையான பொருள் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உங்கள் அணுகுமுறையே இனி மாறும். ரசனை அதிகரிக்கும். குலதெய்வத்துக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக்கடனைச் செய்து மன நிம்மதி பெறுவீர்கல். சொத்துப் பிரச்னைகள் தீரும். திருச்செந்தூரில் அருள்புரியும் ஸ்ரீமுருகப் பெருமானைச் சென்று வணங்குங்கள் நிம்மதி பெருகும்.

விருச்சிக ராசி அன்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் உங்களின் ராசிக்கு சுகஸ்தானத்தில் குரு அமர்ந்து அட்டம ஸ்தானத்தையும், விரையஸ்தனாத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பதால் செய்யும் தொழிலில் எத்தனை சிரமம் வந்தாலும் அதனை வெல்லும் வல்லமையை பெறுவீர்கள். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும். கணவன் மனைவி பிரச்சினைகள் தீர்ந்து அன்னோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உணவு விஷயங்களில் மிகவும் கட்டுபாடு தேவை. அதிகமாகவே அல்லது நேரந்தவறியோ சாப்பிடுவதைத் தவிர்க்கவும். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. ஆன்மிக காரியங்களுக்கு செலவிடுவீர்கள். குடும்பத்தின் வருமானம் கணிசமாக உயரும். வேற்றுமதத்தவர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களால் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். கருவூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பசுபதீஸ்வரரை வணங்குங்கள் மகிழ்ச்சி பெருகும்.

தனுசு ராசி அன்பர்களே இந்த குரு பெயர்ச்சி குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. களத்திர ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வை இடுவதால், உங்களின் வாழ்க்கைக்கு சிறப்பான பலன்களை பெற்று தருவார். அரசாங்க சலுகை, அரசு சம்மந்தமான உதவிகளையும் பெறுவீர்கள். செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்க பெறுவீர்கள். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் விதமாக அமையும். பணியிலிருந்து வருபவர்களுக்கு கிடைக்க வேண்டிய பண பலன்களும் நிலுவை தொகையும் வந்து சேரும். இந்தக் காலகட்டத்தில் பிறர் சொல்வதை நம்பி ஒரு காரியத்தில் இறங்கக் கூடாது. ஆசை வார்த்தைகளுக்கு மயங்க வேண்டாம். குடும்பத்துக்குள் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படும் என்பதால் முடிந்தவரை விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. இந்தக் காலகட்டத்தில் பிறர் சொல்வதை நம்பி ஒரு காரியத்தில் இறங்கக் கூடாது. ஆசை வார்த்தைகளுக்கு மயங்க வேண்டாம். பாத சனி உங்களை பாடாய் படுத்தினாலும் சில சமயங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாழன் தோறும் குரு வழிபாடு செய்யுங்கள் நன்மைகள் நடக்கும்.

மகர ராசி அன்பர்களே இதுவரை உங்கள் ராசியிலேயே அமர்ந்து ஜன்ம குருவாக எந்த நற்பலன்களும் தராமல் இருந்த குருபகவான் வரும் குருபெயர்ச்சியில் உங்களின் தன குடும்ப வாக்குஸ்தானமான கும்பத்தில் அடியெடுத்து வைக்கிறார். இதன் மூலம் உங்களின் மனப்போராட்டம் நீங்கும். செலவுகள் கட்டுக்குள் வரும். தேவையில்லாத சிக்கல்களைப் பேசிப் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். பணபலன் அதிகரிக்கும். வீட்டில் தொலைந்துபோயிருந்த நிம்மதி குடியேறும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்தும் வாய்ப்பு கனிந்துவரும். நீங்கள் காத்திருந்த காரியம் கைகூடும். சத்ரு ஸ்தானத்தை பார்ப்பது மறைமுகமான எதிரி தொல்லை நீங்கி, சுபிட்சம் பெறுவீர்கள். கவலையை மறந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். அட்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால், பதவி உயர்வு, புதிய பதவி போன்றவற்றில், சாதகமான சூழ்நிலை உருவாகும். நினைத்த காரியம் செயல்படதுவங்கும் போது, மனதிற்கு மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தரும். தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். வெளிநாடு தொடர்பான வேலை விஷயத்தில் சாதகப்பலன் உண்டாகும். திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஅக்னீஸ்வரரை வணங்குங்கள் நிம்மதி பெருகும்.

கும்ப ராசி அன்பர்களே இந்த குருபெயர்ச்சி ஜென்ம குருவாக அமர்நது பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும்,. பாக்கிய ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுவதால், உங்களின் ராசிக்கு சிறப்பான பலன்களை பெறுவீர்கள். குருவருள் இருந்தால் திருவருள் தானே வரும் என்பது போல விரைய சனியின் காலத்தில் குருவின் அனுக்கிரகத்தால் வளமான வளர்ச்சியை பெறுவீர்கள். செயல்களில் உத்வேகம் பிறக்கும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கும். அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்லத் திட்டமிட்டுத் தள்ளிப்போனதே அது இப்போது கைகூடும். அதன் மூலம் பணவரவும் உண்டாகும். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனம் வாங்குவீர்கள். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம். தேவையற்ற வீண் வம்பு வழக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதும், புதிய நண்பர்கள் சேர்க்கை மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். நினைத்த படி எல்லா காரியங்களும் நடக்கும். தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருக்கருகாவூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமுல்லைவனேஸ்வரரை வணங்குங்கள் அந்தஸ்து பெருகும்.

மீன ராசி அன்பர்களே இந்த குருபெயர்ச்சியில் சுகஸ்தானத்தில் குரு பார்வையால் வாகனம் வாங்கும் யோகத்தையும், புதிய வீடு, சொத்து வாங்கும் யோகத்தை பெறுவீர்கள். வரவுக்கு உரிய செலவும், செலவுக்கு உரிய வரவும் இருக்கும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் தீர்ந்து உடல் வலுப்பெறும். விரைய ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.எவ்வளவு முயன்றாலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். கௌரவத்துக்காகச் செலவு செய்வதை நிறுத்துங்கள். தேவையற்ற விஷயங்களுக்காக வீட்டுக்குள் சண்டைபோடுவதைக் குறைப்பது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். அலுவலகத்தில் தேவையற்ற வம்பு வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. பொருளாதாரம் உயர்வடைய வாய்ப்புகள் உண்டு. வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*