2020 புத்தாண்டு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்று தெரியுமா?

நிகழும் விகாரி வருடம், மார்கழி மாதம் 16-ம் தேதி புதன்கிழமை, தட்சணாயனம், ஹேமந்த ருதுவில் வளர்பிறையில் சஷ்டி திதியில் மேல்நோக்குகொண்ட சதயம் நட்சத்திரம், கும்பம் ராசி, கன்னி லக்ன நன்னாளில் நள்ளிரவு 12.00 மணிக்கு 2020-ம் ஆண்டு பிறக்கிறது.

மேஷம் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். எதையும் தைரியமாகச் செயல்படுத்துவீர்கள். ஆழ்மனத்திலிருந்த பயம் நீங்கும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதரர் சகோதரிகள் உதவுவார்கள். வழக்கில் வெற்றி உண்டு. பழைய வாகனத்தைத் தந்துவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். 26.12.2020 வரை சனி பகவான் உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்பதால் தொட்டது துலங்கும். பயணங்கள் அதிகரிக்கும். குரு உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிதுர்வழி சொத்துகள் கைக்கு வரும். அயல்நாட்டிலிருக்கும் தோழிகள், உறவினர்களால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

இந்த ஆண்டு, சில விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தும்.

ரிஷபம் இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு 10-ம் ராசியான கும்பத்தில் பிறப்பதால் அரசாங்கத்தால் ஆதாயம் அடைவீர்கள். எதிரிகள் அடங்குவார்கள். பெரிய பதவிகளில் அமர்வீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். 26.12.2020 வரை சனி 8-ம் வீட்டில் அமர்ந்து அஷ்டமத்து சனியாகத் தொடர்வதால் முக்கியப் பணிகளை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. 12.11.2020 வரை குரு உங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் நிற்பதால் திடீர்ப் பயணங்கள், செலவுகள் இருக்கும். 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு 9-ம் வீட்டில் அமர்வதால் வி.ஐ.பி-க்களின் உதவியுடன் சாதிப்பீர்கள். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். உங்களின் கனவு இல்லம் இந்த வருடத்தில் நனவாகும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரம் மிக்க பதவியில் அமர்வீர்கள்.

இந்த ஆண்டு, நிம்மதி குறைவைத் தந்தாலும் அந்தஸ்தை உயர்த்தும்.

மிதுனம் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் கலங்கிப்போயிருந்த மனத்தில் தெளிவு பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். அயல்நாடு சென்று வருவீர்கள். தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வரும். பிள்ளைகளைப் பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். 26.12.2020 வரை சனி 7-ம் வீட்டில் நின்று கண்டகச் சனியாக இருப்பதால், கணவன் மனைவி வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் மறைந்துகிடந்த திறமைகள் வெளிப்படும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்குக் கூடிவரும். கணவர் உங்களின் புத்திசாலிதனத்தைப் பாராட்டுவார். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டிவரும். புதிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கட்டளைகளை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். சக ஊழியர்களிடம் வளைந்துகொடுத்து போவது நல்லது.

இந்த ஆண்டு, சந்தோஷங்களைத் தியாகம் செய்து சாதனைகளைப் படைக்கத் தூண்டும்.

கடகம் உங்களின் 8-வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் அலைச்சலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் அவ்வப்போது இருக்கும். 26.12.2020 வரை சனி 6-ம் வீட்டிலேயே நீடிப்பதால், பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். மாமனார், மாமியார் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். 12.11.2020 வரை குரு உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்பதால் சில காரியங்களைப் போராடி முடிக்கவேண்டி வரும். வீடு, நிலம் சம்பந்தப்பட்ட முக்கியமான ஆவணங்களைப் பாதுகாப்பாக வைப்பது நல்லது. கல்யாண முயற்சிகள் கைகூடும். செப்டம்பர் மாதம் முதல் வருடம் முடியும் வரை கேது 5-ம் வீட்டில் அமர்வதால் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களைவிட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாக்கி சம்பளத் தொகை கைக்கு வரும். பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

இந்த ஆண்டின் முற்பகுதி முணுமுணுக்கவைத்தாலும் பிற்பகுதி மகிழ்ச்சியைத் தரும்.

சிம்மம் ராசியைச் சந்திரன் பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. இழந்த செல்வம், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மாமனார் மாமியார் வகையில் மகிழ்ச்சி தங்கும். 12.11.2020 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ம் வீட்டிலேயே மறைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆகஸ்ட் மாதம் வரை உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். பங்குச் சந்தை மூலம் பணம் வரும். செப்டம்பர் மாதத்தில் கேது 4-ம் வீட்டிலும் ராகு 10-ம் வீட்டிலும் இருப்பதால் சில விஷயங்களில் அனுசரித்துப்போவது நல்லது. வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கும்.

இந்த ஆண்டு, தைரியமான முடிவுகளாலும் தொலைநோக்குச் சிந்தனையாலும் வெற்றியைத் தரும்.

கன்னி ராசிக்கு 6-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றிபெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 26.12.2020 வரை சனி சாதகமாக இல்லாததால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். 12.11.2020 வரை குரு ராசிக்கு 4-ம் வீட்டில் நிற்பதால் வேலைப்பளு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். வங்கிக்கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். ஆகஸ்ட் மாதம் வரை ராசிக்கு 4-ம் வீட்டில் கேதுவும் ராசிக்கு 10-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் அரசாங்க விஷயம் தள்ளிப்போய் முடியும். செப்டம்பர் மாதம் முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால் சவால்களில் வெற்றிபெறுவீர்கள். கணவர் சில பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.

இந்த ஆண்டின் முற்பகுதி செலவுகளைத் தந்தாலும் பிற்பகுதி கையிருப்பைக் கூட்டும்.

துலாம் ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் உங்கள் கை ஓங்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். 26.12.2020 வரை சனி 3-ம் வீட்டிலேயே நிற்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆகஸ்ட் மாதம் வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் மனோபலம் அதிகரிக்கும். ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள். மேலதிகாரியை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

இந்த ஆண்டு, திட்டமிடுதலையும் எச்சரிக்கை உணர்வையும் தருவதாக அமையும்.

விருச்சிகம் உங்களின் ராசிக்கு 2-ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் பணவரவு உண்டு. அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். மகனுக்கு வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். பங்குச்சந்தை மூலம் பணம் வரும். 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு 3-ம் வீட்டில் தொடர்வதால் புதிய முயற்சிகள் வெற்றிபெற தாமதமாகும். 26.12.2020 வரை சனி 2-ல் அமர்ந்து ஏழரைச் சனியில் பாத சனியாக இருப்பதால் பிள்ளைகளின் பிடிவாதத்தை அன்பாகச் சொல்லி புரிய வையுங்கள். உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. வேலையாட்களின் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டி அன்பாகத் திருத்துங்கள். உத்தியோகத்தில் கால நேரம் பார்க்காமல் உழைக்கவேண்டி வரும். மேலதிகாரி உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். அலுவலக ரகசியங்களை வெளியில் பேச வேண்டாம்.

இந்த ஆண்டு, முன்கோபத்தையும் பயணங்களையும் தவிர்க்க வேண்டியதாக அமையும்.

தனுசு 12.11.2020 வரை குரு ராசியில் அமர்ந்து ஜன்ம குருவாகத் தொடர்வதால் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்ய வேண்டி வரும். 13.11.2020 முதல் உங்களின் ராசியை விட்டு விலகி வருடம் முடியும் வரை குரு 2-ம் வீட்டில் தொடர்வதால் மன இறுக்கங்கள் விலகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவரின் பாராமுகம் மாறும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பணப்பற்றாக்குறையால் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். மாமியார், நாத்தனார் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. பங்குச்சந்தை மூலம் பணம் வரும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். திடீர்ப் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் வரவு உயரும். அயல்நாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை மேலதிகாரி பாராட்டுவார். பதவி, சம்பள உயர்வு தேடி வரும்.

இந்த ஆண்டு, சாதிக்கவைப்பதுடன் வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தரும்.

மகரம் இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு 2-ம் வீட்டில் பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தோற்றப் பொலிவு கூடும். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். புதிய இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். 12.11.2020 வரை குரு உங்களின் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் வீண் விரயம், திடீர்ப் பயணங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நாத்தனார் உங்களின் வேலையைப் பகிர்ந்துகொள்வார். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். செப்டம்பர் மாதம் முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் அயல்நாடு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும்.

இந்த ஆண்டு, தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளினாலும் கடின உழைப்பால் முன்னேற வைக்கும்.

கும்பம் ராசிநாதன் சனி பகவான் லாப வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் புதிய பொறுப்பும் பதவியும் தேடி வரும். உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறந்திருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கணவரின் புது முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். வங்கியில் அடமானமாக வைத்திருந்ததை மீட்பீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். திடீர் யோகம், பணவரவு, அந்தஸ்து வரும். பங்குச் சந்தை மூலம் லாபம் கிடைக்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே சென்று திருத்துவது நல்லது. உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் தள்ளுபடி விற்பனையால் லாபம் கூடும். கடையை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சக ஊழியர்களிடம் எல்லா ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

இந்த ஆண்டு, சகிப்புத்தன்மையையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் தரும்.

மீனம் ராசிக்கு 12-வது இடத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் அலைச்சலும் திடீர்ப் பயணங்களும் செலவுகளும் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு 11-ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்களின் கனிவான பேச்சில் கணவர் மயங்குவார். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். மாமியார் ஆதரவாக இருப்பார். மனவலிமை அதிகரிக்கும். மாமியார், நாத்தனாரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை மூலம் பணம் வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணிகளில் இருந்த தேக்கநிலை மாறும். மேலதிகாரியுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சம்பள உயர்வும் புது வாய்ப்புகளும் தேடி வரும்.

இந்த ஆண்டு, தொட்டதெல்லாம் துலங்குவதுடன், எதிர்பாராத வெற்றிகளையும் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*