பெற்றோரை வலம் வந்து வணங்கி மாங்கனியை வென்றவர் விநாயகர். இவர் தன்னைச் சுற்றி வந்து வழிபடுவோருக்கு தேகபலம், புத்திபலம் என எல்லா நன்மைகளையும் வழங்குவார். நெற்றியில் குட்டிக் கொள்ளுதல், தோப்புக்கரணம் இடுதல், சிதறுகாய் போடுதல், கொழுக்கட்டை படைத்தல் என விநாயகருக்குரிய தனி வழிபாட்டு முறைகள் பல இருந்தாலும், அவருக்குரிய விசேஷ பிரார்த்தனை ‘பிரதட்சிணம்’ என்னும் சுற்றி வந்து வழிபடுவதாகும். சாதாரணமாக மூன்று முறை வலம் வருவது வழக்கத்தில் இருந்தாலும், மனதில் நினைத்தது நிறைவேற சதுர்த்தி திதியன்று விநாயகரை 21, 48, 108 முறை என சுற்றி வந்து வழிபடுவது சிறப்பாகும். இதை நம்ம ஊர் அரசமரத்தடி விநாயகருக்கு செய்தாலே போதும்.
யானைக்கு தந்தம்தான் அழகு. அது தன் தந்தத்தை அக்கறையோடு பாதுகாக்கும். ஆனால், விநாயகர் என்னும் யானைமுகக்கடவுள் மட்டும் தனக்கு அழகும், கவுரவமும் தரும் தந்தத்தை தியாகம் செய்ய முன்வந்தார். வியாச மகரிஷி, மகாபாரத காவியம் படைத்தபோது, தன் ஒற்றைக் கொம்பை ஒடித்து, எழுத்தாணியாக்கி எழுதினார். இது ஆக்க சக்தி. கஜமுகாசுரனை தன் தந்தத்தால் குத்தி வதம் செய்தார். ஆக்க சக்தியும், அழிக்கும் சக்தியும் தனக்கே உரித்தானது என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தினார். அன்பர்களுக்கு அன்பையும், வம்பர்களுக்கு தண்டனையையும் வழங்கும் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.
தேர்வு வந்தால் குழந்தைகளுக்கு பிள்ளையார் ஞாபகம் வந்து விடும். “பிள்ளையாரப்பா!! ‘பதினோரு தேங்கா விடலை (சிதறுகாய்) போடுறேன். எனக்கு நிறைய மார்க் வாங்கிக் கொடு” என்று வேண்டுதல் வைப்பார்கள். உண்மையில் சிதறுகாயின் தத்துவம் தெரியுமா? தேங்காய் மீதுள்ள கனமான ஓட்டை உடைத்தால் உள்ளே இனிப்பான பருப்பும், தண்ணீரும் இருக்கும். இதுபோல, மனிதன் தன்னிடமுள்ள அகங்கார எண்ணத்தை கைவிட்டு விநாயகரைச் சரணடைந்தால், வாழ்வு இனிக்கும். சிதறுகாய் உடைப்பதற்கு புராண கதை ஒன்றும் உண்டு.
ஒரு முறை விநாயகர் சிவபெருமானிடம், “உங்கள் தலையை எனக்கு பலியிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். சிவபெருமானும் தன்னைப் போல மூன்று கண்களை கொண்ட தேங்காயை பூலோகத்தில் சிருஷ்டித்து, அதை விநாயகருக்கு அர்ப்பணித்தார். அன்று முதல் தேங்காய் உடைக்கும் பழக்கம் வந்தது.
பிரிந்தவர்களை ஒன்று சேர்த்து வைப்பவர்!
நீங்கள் கணவர் அல்லது மனைவி மீது, ஏதோவொரு காரணத்தால் கோபித்து விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறீர்களா? இதைப் படியுங்க! ஒரு சமயம் சிவபெருமான் மீது பார்வதிக்கு கோபம் எழுந்தது. அது பெயரளவில் இருந்ததே தவிர, அம்பிகையின் ஆழ்மனதில் அன்பே மேலிட்டு இருந்தது. இதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவள் மவுனம் காத்தாள். சிவனும் மனைவியின் பொய்க் கோபத்தை தெரிந்து கொண்டார். அவளருகே சென்று தன்னை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். இந்த நேரத்தில் அங்கிருந்த பால கணபதி, தன் தந்தை சிவனின் தலையில் இருந்த பிறைச்சந்திரனின் அழகில் மயங்கி, துதிக்கையால் இழுக்க முயன்றார். சிவனும் கணபதியின் விளையாட்டை ரசித்து அணைக்க முயன்றார். அம்பிகையும் பிள்ளையை அணைத்தாள். அப்போது சிவன், பார்வதி இருவரது கைகள் மோதிக் கொண்டன. கணபதியின் பிள்ளை விளையாட்டால் சிவபார்வதியின் ஊடல் மறைந்து ஒன்று சேர்ந்தனர். இந்த வரலாறைப் படித்தவர்கள் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டால், அவர்களை ஒன்று சேர்த்து வைப்பார். ராம சாஸ்திரிகள் இயற்றிய ‘சீதா ராவண ஸம்வாதம்’ என்னும் நூலிலுள்ள ‘விநாயகர் துதி’ யில் இந்த வரலாறு இடம்பெற்றுள்ளது.
விநாயகருக்கு இரண்டு அம்மா… இதெப்படி சாத்தியம் என்கிறீர்களா!
சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து புறப்பட்ட ஆறு தீப்பொறிகள் கங்கையில் மிதந்தன. அத்தீப்பொறிகளே ஆறு குழந்தைகளாக முருகப்பெருமானாக அவதரித்தன. இதனால், முருகனுக்கு கங்கையின் புதல்வன் என்ற பொருளில் ‘காங்கேயன்’ என்று பெயருண்டு. ஆனால், விநாயகருக்கு தம்பி முருகனைப் போல கங்கையுடன் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும், அவரும் கங்கையைத் தன் தாயாக ஏற்றுக் கொண்டார். கங்கைக்கு ‘தண்ணீர்’ என்ற பொருள் உண்டு. தண்ணீரைக் கண்டதும் குதூகலம் கொள்வது யானையின் இயல்பு. அது துதிக்கையால் நீரை உறிஞ்சி பீய்ச்சாங்குழல் போல தன் உடம்பு முழுவதும் வாரி இறைத்து மகிழும். அதாவது விநாயகர் தன் இன்னொரு தாயான கங்கையுடன் (சிவனின் இன்னொரு மனைவி) விளையாடி மகிழ்கிறார் என்று பொருள் கொள்ளலாம். பார்வதி இவரை பெற்ற அன்னை. எனவே விநாயகருக்கு ‘த்வைமாதுரர்’ என்று பெயர் வந்தது. இதற்கு ‘இரண்டு தாயார்க்காரர்’ என்று பொருள்.