அனைத்து வகை சனி தோஷங்களும் நீங்க அகத்தியர் கூறிய எளிய வழிபாடு!

ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் “நீதி தேவன்” என குறிப்பிடப்படுகிறார். அதாவது ஒரு நபர் தன்னை அறியாமல் செய்யும் தவறுகளுக்கு கூட அவருக்கான தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்டும் தன்மை கொண்டவர் எனவே தான் பெரும்பாலான மக்கள் சனி கிரக பெயர்ச்சி என்றாலே மிகவும் கலங்குகின்றனர். ஏழரை சனி காலம் என்பது ஒரு நபரின் வாழ்நாளில் மூன்று முறை வரும். முதல் முறை வரும் ஏழரை சனி மங்கு சனி எனப்படும். இரண்டாம் முறை வரும் ஏழரை சனி பொங்கு சனி என்றும், மூன்றாம் முறை வரும் ஏழரை சனி மாரக சனி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, சனி திசை, சனி கோட்சாரம் போன்ற ஜாதக ரீதியான சனியின் பாதகமான அமைப்பினாலும் பல துன்பங்கள், சோதனைகளை சந்திக்க நேரிடுகிறது. எப்படிப்பட்ட சனி கிரகத்தின் திசாபுக்தி, கோட்சார காலத்திலும் பாதக பலன்கள் ஏற்படுவதை குறைத்து நற்பலன்கள் ஏற்படுவதற்கு அகத்தியர் சித்தர் கூறிய வழிமுறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மனிதனுக்கு மட்டுமே இருக்கின்ற மனதை செம்மையாக்கி சித்தத்தை தெளிவு படுத்திக் கொள்ளும் மனிதர்களை சித்தர்கள் என அழைக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான சித்தர்கள் இருந்து வந்துள்ளனர். அந்த சித்தர்களுக்கெல்லாம் தலைமை சித்தராக கருதப்படுவர் அகத்தியர் பெருமான். அகத்தியப் பெருமான் ஜோதிடம், மருத்துவம், மந்திரம் போன்ற சகல கலைகளிலும் வல்லமை பெற்ற ஒரு சித்தராவார். அந்த அகத்தியப் பெருமான் ஜோதிடத்தைப் பற்றி பல செய்யுட்களை இயற்றியுள்ளார். அதில் மனிதர்களுக்கு சனி கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதையும், அதிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கான பரிகாரம் என்ன என்பதையும் தெளிவாக கூறியிருக்கிறார்.

இறைவன் குடியிருக்கும் அறிவாகிய பிடரி தன்னில் சனி பகவான் ஏறி நின்று கொண்டு, அறிவுதனை தலைகீழாய் மாற்றி தான் என்ற ஆணவத்தை நிலைக்கச்செய்து, உண்மையை பொய்யாய் காட்டி, நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகக் காட்டி, புத்தியை மாற்றி, பொய் ,களவு ,மது ,மாது ,சூது ,போன்ற வைகளுக்கு புத்தியை அடிமையாக்கி வாழ்க்கையை கரையேற விடாமல் தடுப்பார். நீரில் பாசி படிந்து நின்றது போல் நம் மேல் படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ள இறைவனின் பாதம் தொழுது ஒரு உபாயம் கூறுகிறேன் என்கிறார் அகத்தியர் பெருமான்.

அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும் சூரிய பகவானை வணங்கி “ஓம் கிலி சிவ” என்ற மந்திரத்தை 108 முறை செபிக்க வேண்டும். இப்படி ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் தொடர்ந்து செபித்து வர நம்மை உடும்பு போல் பற்றி நின்ற சனீஸ்வர தோஷம் விலகி விடும். இது ஏராளமானோர் செய்து பயனடைந்த முறையாக உள்ளது. இந்த 48 நாட்களும் மது, மாது, மாமிச உணவு, தீய சொற்களை பேசுவது போன்றவற்றை அறவே தவிர்த்து, மந்திர உச்சாடனம் செய்யும் பொது நிச்சயமான பலனை கொடுக்கும். மேலும் 48 நாட்கள் முடிந்த பின்பு ஒருமுறை திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் அல்லது திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில், குச்சனூர் சனீஸ்வரன் கோயில் போன்றவற்றிற்கு சென்று சனி பகவானை வழிபாடு செய்வது நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*