தனுஷ்-கௌதம் மேனனின் “எனை நோக்கி பாயும் தோட்டா” திரை விமர்சனம்!

தனுஷ்-கௌதம் மேனன் கூட்டணியில் பல வருடங்களாக ரிலிஸிற்கு காத்திருந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் எப்போது வரும் என்று அந்த படத்தை எடுத்தவருக்கும் தெரியவில்லை, நடித்தவருக்கும் தெரியவில்லை என்ற நிலையில் இருக்க, வேல்ஸ் நிறுவனம் மனது வைக்க, இன்று மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் பல திரையரங்குகளில் இப்படம் ரிலிஸாகியுள்ளது, இத்தனை வருட காத்திருப்பிற்கு பலன் கொடுத்தது எனை நோக்கி பாயும் தோட்டா, பார்ப்போம்.

தனுஷ் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கேங்ஸ்டர் கும்பலிடம் குண்டடிப்பட்டு தப்பிக்கின்றார், அதை தொடர்ந்து அவரின் வாய்ஸ் ஓவராகவே படம் செல்கின்றது. கல்லூரியில் தனுஷ் படிக்கும் போது அவருடைய கல்லூரிக்கு ஷுட்டிங் எடுக்க ஒரு படக்குழுவினர்கள் வருகின்றனர், அப்படத்தின் ஹீரோயினாக மேகா ஆகாஷ், விருப்பமில்லாமல் நடிக்கின்றார்.

இவரை வற்புறுத்தி அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நடிக்க வைக்கின்றார், அவருக்கு மேகா மேல் ஒரு ஆசையும் கூட. இந்த நேரத்தில் தனுஷுடன் மெகா காதலில் விழ, இவர்கள் காதல் தெரிந்து அந்த இயக்குனர் மிரட்டி மேகாவை அழைத்து செல்கின்றார்.

இதோடு அவ்வளவு தான் என்று நினைக்க, 4 வருடத்திற்கு பிறகு மேகாவிடம் இருந்து தனுஷிற்கு ஒரு கால், அதில் உன் அண்ணன் என்னை காப்பாற்றினார், அவருக்கு பிரச்சனை நீ உடனே வா என்று சொல்ல, அதன் பிறகு ஏற்படும் திருப்பங்களே அடுத்தடுத்த காட்சிகள்.

தனுஷ் நடிப்பை பற்றி இனி குறை சொல்வதற்கு இல்லை, ஆனாலும், கௌதம் பட நாயகனாக தனுஷ் செட் ஆவாரா என்று பலருக்கும் கேள்வி எழுந்தது, ஆனால், சில நேரம் கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும், படத்திற்கு தனுஷ் வழக்கம் போல் நம்மை கொண்டு செல்கின்றார், மேகாவுடன் காதல், அண்ணனை காப்பாற்ற துட்டிக்கும் தம்பி, இனி ஒன்னுமே இல்ல, வாங்கடா என சவால் விடும் இடம் என தனுஷ் ஒவ்வொரு பந்தும் சிக்ஸர் தான்.

மேகா ஆகாஷிற்கு இந்த படம் முதலில் ரிலிஸாகியிருக்கலாம் என்று தோன்ற வைக்கின்றது, அத்தனை அழகு, தனுஷுடன் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் படம் முழுவதும் நிரம்பி வழிகிறது, மேகாவிற்கு இது தான் திரையுலகத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்பலாம்.

2.30 மணி நேரம் படத்தில் 3 மணி நேரம் வாய்ஸ் ஓவராக தான் இருக்கின்றது, ஏனெனில் படம் முடிந்தும் அரை மணி நேரம் நமக்கு ஏதாவது ஒரு வாய்ஸ் ஓவர் கேட்டுக்கொண்டே தான் இருக்கின்றது, கௌதம் இதை முன்பே பேட்டியில் சொல்லியிருந்தாலும், படத்தோடு பார்க்கையில் நமக்கு கொஞ்சம் சலிப்பை வர வைப்பதை தடுக்க முடியவில்லை.

படத்தின் திரைக்கதை நான் லீனியராக தான் செல்கின்றது, இது எந்த காட்சி, அது எந்த காட்சி என்று ஒரு சில நிமிடங்களில் குழப்பம் நீடித்தாலும், அதை கௌதம் தன் ஸ்டைலில் ஒவ்வொரு கதையாக சொல்லி புரிய வைக்க முயற்சி செய்துள்ளார், அதே நேரத்தில் இந்த கதையெல்லாம் எத்தனை பேருக்கு புரியும் என்பதே கேள்விக்குறி. அதிலும் சசிகுமார் என்ன செய்கிறார், எதற்காக இந்த வீடியோவை எல்லாம் சேகரித்து வைத்தார் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை, இன்னும் கொஞ்சம் கூட தெளிப்படுத்தியிருக்கலாம்.

ஏனெனில் படம் முழுவதும் நிறைய பெயர்கள், நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே தான் இருக்கின்றனர், அதி தீவிர கௌதம் ரசிகர்களுக்கு வழக்கம் போல் விருந்தாக இருந்தாலும், பெரும்பாலான ஆடியன்ஸுகளுக்கு குழப்பம் நீடிப்பது உறுதி, அதிலும் கிளைமேக்ஸ் நாம் பார்ப்பது எனை நோக்கி பாயும் தோட்டா தானா அல்லது அச்சம் என்பது மடமையடாவா என்று கூட யோசிக்கி வைக்கின்றது.

 

படத்தின் மிகப்பெரிய பலம் தர்புகா சிவாவின் இசை, பின்னணி பாடல் என்று முத்திரை பதித்துள்ளார், ஒளிப்பதிவும் கௌதம் படத்தில் சொல்லியா தெரிய வேண்டும், ஒவ்வொரு ப்ரேமும் அழகு, அதோடு மறுவார்த்தை பேசாதே பாடல் தியேட்டரே அதிர்கின்றது.

க்ளாப்ஸ் – தனுஷ் நடிப்பு, மேகா-தனுஷ் காதல் காட்சிகள். படத்தின் வசனம் ‘இவ்ளோ அழக தேடி போனதில்லை, உன் முகத்தை தாண்டி யோசிக்க முடியவில்லை’ ’ஆண் அப்பப்போ மிருகமா நடந்துக்கொள்வான், அப்படி தான் நானும்’ போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றது. படத்தின் இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.

பல்ப்ஸ் – படத்தில் வரும் வாய்ஸ் ஓவர், நமக்கு ஒரு சமயத்தில் தலை வலியை உண்டாக்குகின்றது. இரண்டாம் பாதி அச்சம் என்பது மடமையடா பீல் மிகவும் வந்து செல்கின்றது, நிறைய விஷயங்கள் சுற்றி சுற்றி வந்து என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்று யோசிக்க வைக்கின்றது. மொத்தத்தில் கௌதம் மேனனின் வழக்கமான கதை என்ற தோட்டாவை தனுஷ் என்ற புதிய துப்பாக்கியில் வைத்து பாயாவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*