துருவ் விக்ரம் நடித்த “ஆதித்ய வர்மா” திரைப்பட விமர்சனம்

விக்ரம் மகன் துருவ் நடித்துள்ளார் என்பதே பெரிய எதிர்ப்பார்ப்பிற்கு காரணம், அத்தனை பேர் எதிர்ப்பார்ப்பையும் காப்பாற்றினாரா துருவ்? பார்க்கலாம்.

துருவ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவன். எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஒரு கதாபாத்திரம், ஹீரோயின் பனிதா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக வர, அவரைப்பார்த்தவுடன் துருவ்விற்கு காதல் பற்றிக்கொள்கின்றது. அதை தொடர்ந்து அந்த பெண் இந்த காதலை ஏற்கின்றாரா? இல்லையா? என்றெல்லாம் தெரியவில்லை, துருவ், அவருக்கு முத்தம் கொடுக்கின்றார், கையை பிடிக்கின்றார், ஒரு கட்டத்தில் தன் காதலிக்கு ஏற்படும் சங்கடத்தை பக்கத்து கல்லூரி வரை சென்று தட்டிக்கேட்க, அந்த தருணம் தான் பனிதாவிற்கு காதல் பிறக்கின்றது.

பிறகு இருவரும் ஈர் உயிர் ஒரு உடலாக இருக்க, இவர்களின் காதல் பனிதாவின் வீட்டிற்கு தெரிய வர, பனிதாவிற்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் நடக்கின்றது, துருவ் அதை தடுக்க சென்ற இடத்தில் பனிதா தன்னுடன் வராத கோபத்தில் போதைக்கு அடிமையாகி மிக அரக்கக்குணத்திற்கு மாறுகின்றார், இதன் பிறகு இவர்கள் காதல் என்ன ஆனது? என்பதன் உணர்ச்சிப்போராட்டமே இந்த ஆதித்ய வர்மா.

ஆதித்ய வர்மாவாக த்ருவ், உண்மையாகவே அர்ஜுன் ரெட்டி என்ற கதாபாத்திரத்தை எப்படி தாங்குவார் என்ற பயம் அனைவரிடத்திலும் இருந்தது, அதை விட படம் ஏற்கனவே எடுத்து அதன் ரிலிஸை நிறுத்தி, பிறகு மீண்டும் முழுவதும் எடுத்தது என கசப்பான அனுபங்களை சந்தித்து வந்தார், ஆனால், துளிகூட அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரத்திற்கு குறை இல்லாமல் சிறப்பாக செய்துள்ளார், தமிழ் சினிமாவிற்கு இளைஞர்கள் கொண்டாடும் ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார். அதைவிட த்ருவ் வாய்ஸ் மிகப்பெரிய ப்ளஸ்.

அதேபோல் அவருடைய நண்பராக வரும் அன்பு, ஹீரோயின் பனிதா, சில நிமிடங்கள் வரும் ப்ரியா ஆனந்த், நீண்ட வருடங்களுக்கு பிறகு ரீஎண்ட்ரி கொடுத்து ராஜா உட்பட அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர், பனிதா, ஷாலினி பாண்டே அளவிற்கு ஆரம்பத்தில் மனதில் நிற்காமல் விலகி வந்தாலும், கிளைமேக்ஸில் அவரின் நடிப்பு ரசிக்க வைக்கின்றது.

அர்ஜுன் ரெட்டி படத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை கூட மாற்றாமல் அப்படியே எடுத்தது புத்திசாலித்தனம், மேலும், அதே பாடல்கள், பின்னணி இசை என ரதனும் மனதில் நிற்கின்றார், ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு சிகரெட் புகையில் இருந்து அதில் விழும் நெருப்பு வரை தெளிவாக படம் பிடித்துள்ளது.

சரி ஏற்கனவே தெலுங்கு, ஹிந்தி என கொண்டாடிய படம் இதில் குறை சொல்ல என்ன இருக்கின்றது என்றால், அந்த அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரமே ஒரு வகையில் மைனஸ் தான், படத்தில் இந்த குணம் இந்தியாவிற்கே செட் ஆகாது என்று கூட வசனம் வருகின்றது.

அதை விட என்ன தான் இப்படம் சாதி திருமணத்தை எதிர்க்கிறது, குடியால் இழந்த வாழ்க்கை என்று காட்டினாலும், தேவர் மகன் போல் படம் முழுவதும் சாதியை கொண்டாடி கிளைமேக்ஸில் சாதியை விடுங்கள் என்று சொல்வது போல் தான் உள்ளது.

ஆதித்ய படம் முழுவதும் தன் கோபம், பிடிவாதம், போதைக்கு அடிமை என இருந்துக்கொண்டு கிளைமேக்ஸில் அனைத்தையும் விட்டு வருவது படமாக பார்க்க நன்றாக இருந்தாலும், இதை இளைஞர்கள் எப்படி தெளிவாக எடுத்துக்கொள்வார்கள் என்பதிலேயெ கேள்விக்குறி மிஞ்சுகிறது, ஏனெனில் இன்றும் அர்ஜுன் ரெட்டி என்றால் நம் நினைவிற்கு போதை, கோபம் மட்டுமே முதலில் வந்து செல்கின்றது.

காதலிக்கின்றாளா இல்லையா? என்று கூட தெரியாமல் ஒரு பெண்ணை முத்தமிடுவது, படமாக பார்க்க நன்றாக இருந்தாலும், கதாபாத்திரமாக ஆதித்ய வர்மா ரியல் லைபில் பயணப்பட முடியாத கதாபாத்திரம், திரையோடு மட்டும் கொண்டாடி செல்லுங்கள்.

க்ளபாஸ் – படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் யாருமே மிகைப்படுத்தி நடிக்கவில்லை, த்ருவ் ஆதித்ய வர்மாவாகவே வாழ்ந்துள்ளது. படத்தின் இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள். படத்தின் வசனங்கள் குறிப்பாக பெண்களின் ப்ரீயட் வைத்து கூறும் எ-கா, சாதி திருமணத்தை எதிர்ப்பது போன்ற வசனங்கள். த்ருவ்-அன்பு நட்பு படத்தில் சூப்பராக ஒர்க் அவுட் ஆகியுள்ளது, அதிலும் அழும் நண்பரின் கண்ணீரை துடைக்கும் காட்சி செம்ம. அர்ஜுன் ரெட்டியில் எங்கெங்கு நாம் அழுதோமோ, சிரித்தோமோ அதெல்லாம் இங்கும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது நன்று.

பல்ப்ஸ் – அர்ஜுன் ரெட்டி பார்த்தாவர்களுக்கு கொஞ்சம் அடுத்த இதானே, என்று எண்ணிக்கொண்டே இருக்கும், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் த்ருவ் பேண்ட் ஈரமாகும் போதே பலரும் இடைவேளை என்று திரையரங்கில் இருப்பவர்களே எழுந்து நிற்பது தெரிகின்றது. மொத்தத்தில் அர்ஜுன் ரெட்டியை தாண்ட முடியாது என்றாலும், அதை டேமேஜ் செய்யாமல் எடுத்தது ஆதித்ய வர்மாவின் வெற்றி தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*