சைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்!

பாகுபலி படத்திற்கு பிறகு வரலாற்று கதைகளை பிரம்மாண்டமாக திரைப்படமாக்கும் ட்ரெண்ட் அதிகரித்துவிட்டது. தெலுங்கு சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் அப்படிப்பட்ட கதைகள் பல வரத்துவங்கிவிட்டன. அந்த வரிசையில் தற்போது சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்துள்ளது தெலுங்கு படமான சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்த படம்.

இந்தியா ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தில் துவங்குகிறது படம். ஜான்சி ராணியாக அனுஷ்கா நரசிம்ம ரெட்டியின் கதையை தன் படையினருக்கு சொல்ல துவங்குகிறார்.

உய்யலவாடா பாளையராகார நரசிம்ம ரெட்டி (சிரஞ்சீவி) சிறு வயதிலேயே ஆங்கிலேயர்கள் இந்தியர்கள் சிலரை தூக்கில் தொங்க விட்டிருப்பதை பார்த்து கொந்தளிக்கிறார். அதை அவரது குருவான கோசாயி வெங்கண்ணாவிடம் (அமிதாப் பச்சன்) கூறுகிறார். நான் இப்போதே சென்று 10 ஆங்கிலேயர்களை கொல்கிறேன் என கூறுகிறார்.

நீ மற்றவர்களை கொள்வதோ, இல்லை நீ கொல்லப்படுவதோ முக்கியம் இல்லை. ஆங்கிலேயர்களை விரட்ட வேண்டும் என்றால் உன்னிடம் இருக்கும் இந்த கொந்தளிப்பு உன்னை சுற்றி இருப்பவர்களிடமும் வர வைக்க வேண்டும் என அறிவுரை கூறுகிறார்.

அப்போது ஆரம்பித்த பயணம், பின்னர் எப்படி நரசிம்ம ரெட்டி தன் மக்களின் சுதந்திரத்திற்காக வாள் பிடித்து போராடி, ஒரு பெரிய இயக்கத்தையே வழிநடத்தி சுதந்திர போராட்டத்தை இந்திய நாடு முழுவதும் துவங்கி வைத்தார் என்பதை காட்டியுள்ளது மீதி படம்.

சைரா மொத்த படத்தையும் ஆரம்பம் முதல் இறுதி வரை தாங்கி நிற்பது சிரஞ்சீவி தான். கம்பீரமான தோற்றம் நரசிம்ம ரெட்டி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.

நரசிம்ம ரெட்டியின் மனைவியாக நயன்தாரா, அவர் படத்தில் வருவது விரல் விட்டு எண்ணக்கூடிய சீன்கள் மட்டும்தான் வருகிறார். காதலியாக நடித்துள்ள தமன்னாவிற்கு இதே நிலை தான். இருப்பினும் இருவரும் அதிலும் ஜொலித்துள்ளனர்.

நரசிம்ம ரெட்டிக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது என தெரிந்து தற்கொலை செய்ய துணிவது, பின்னர் அந்த முடிவை மாற்றி நாடு முழுவதும் நரசிம்ம ரெட்டி பற்றி கூறி இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பது, இறுதியில் சுதந்திர போரில் தன்னுடைய உயிரையே தியாகம் செய்வது என மனதில் நிற்கிறது தமன்னாவின் லக்ஷ்மி கதாப்பாத்திரம்.

சுதீப்.. படத்தின் ஆரம்பத்தில் நரசிம்ம ரெட்டியுடன் மோதல், பின்னர் சுதந்திர போராட்டத்திற்காக அவரது இயக்கத்திலேயே இணைந்து ஒன்றாக போரிடுகிறார். சிரஞ்சீவிக்கு அடுத்து அதிக முக்கியத்துவம் இவரது ரோலுக்கு என்று தான் சொல்ல வேண்டும்.

சுதந்திர போராட்ட இயக்கத்தில் பங்கெடுக்கும் தமிழராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படி பெயருக்கு சில நொடிகள் மட்டுமே வரும் கதாபாத்திரங்களில் அவர் ஏன் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று தான் தெரியவில்லை.

படத்தில் நம்மை அதிக இடங்களில் மெய்சிலிர்க்க வைப்பது அரவிந்த்சாமியின் டப்பிங் குரல் தான். ரத்னவேலுவின் பிரம்மிக்கவைக்கும் ஒளிப்பதிவு. குறிப்பாக சண்டை காட்சிகளில் கேமரா டீம் அதிகம் மெனகெட்டுள்ளது. சண்டை காட்சிகள் சற்று மிகைப்படுத்தப்பட்டதாக தெரிந்தாலும், இது ஒரு நிஜ ஹீரோவின் கதை என்பதால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

படம் முழுக்க தேசப்பற்றை ஊட்டும் சீன்கள். நாம் இப்போது சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை நரசிம்ம ரெட்டி போன்ற பல ஹீரோக்கள் தங்கள் தலையை கொடுத்து போராடியதால் தான் கிடைத்தது என்பதை நினைவு கொள்ள வைக்கிறது.

இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் ஓடுகிறது சைரா நரசிம்ம ரெட்டி படம், சற்று பொறுமையை சோதிக்கிறது. இன்னும் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.மொத்தத்தில், நரசிம்ம ரெட்டியின் தேசப்பற்றை, மார்தட்டி, மிக பிரம்மாண்டமாக திரையில் காட்டியுள்ளது இந்த படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*