மும்மூர்த்திகள் என்று மக்களால் வணங்கப்படுபவர்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு இதில் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் எல்லா இடங்களிலும் கோயில்கள் இருப்பதை நாம் அறிவோம் ஆனால் பிரம்மாவிற்கு தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில் இருப்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த கோயிலின் சிறப்பம்சம் குறித்தும் அங்கு செல்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இப்பதிவில் நாம் பார்க்கலாம்.
நான்முகன் என்று அழைக்கப்படும் பிரம்மருக்கு முதலில் 5 தலை இருந்தது. பிரம்மதேவர் உலகில் உள்ள மற்ற கடவுள்களை விட தானே சிறந்தவர் என்று அகங்காரத்துடன் இருந்தார். அவரின் அகங்காரத்தை அறிந்த சிவபெருமான் பிரம்மரின் ஆணவத் தலையை வெட்டினார். பிரம்மனின் படைக்கும் திறனை செயளிழக்கும்படி சிவபெருமான் சாபமளித்தார். சிவபெருமானின் சாபத்தினால் மனம் திருந்திய பிரம்மன் சாபத்திலிருந்து விடுபட திருச்சி மாவட்டத்திலுள்ள திருப்பட்டூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானுக்கு 12 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரம்மரின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனுக்கு சாபவிமோச்சணம் அளித்து அவருக்கு படைப்பாற்றலை மீண்டும் வழங்கினார்.
பிரம்மனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவரது தலையெழுத்தை மாற்றி அமைத்தது போல், பிரம்மனை வழிபடுபவர்களின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் சக்தியையும் பிரம்மதேவருக்கு அருளினார். அதுமட்டுமல்லாமல் “”என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக, என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.
பூலோகத்தில் அரிதிலும் அரிதான பிரம்மரின் திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும் பிரம்மன் இங்கு ஈசனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.
பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.
சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.
கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.