ஆர்யாவின் “மகாமுனி” திரைவிமர்சனம்!

மகாமுனி படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஆர்யா. மகா, கால் டாக்சி டிரைவராக பணி புரிகிறார். இவரது மனைவி இந்துஜா. இவர்களுக்கு பள்ளிக்குச் செல்லும் ஒரு மகன். மிகவும் ஏழ்மையான குடும்பம். இவர் பணத்திற்காக அரசியல்வாதியான இளவரசுவை எதிர்க்கும் ஆட்களை கொலை செய்வதற்கு திட்டங்களைப் போட்டு கொடுக்கிறார். இளவரசு, அருள்தாஸ், மதன் குமார், இவர்களுக்கு உதவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜி.எம்.சுந்தர் ஆகியோர் கூட்டணியாகி மகாவை என்கவுண்டரில் கொல்ல சதி செய்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, மற்றொரு கதாபாத்திரமான முனி, தனது அம்மா ரோகிணி உடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரி முடித்துவிட்டு இயற்கை விவசாயம் செய்வதொடு டியூஷன்னும் எடுக்கிறார். ஜெர்னலிசம் படிக்கும் மகிமா, ஆர்யாவை காதலித்து வருகிறார். இது மகிமாவின் தந்தை ஜெயப்பிரகாஷுக்கு தெரிய வருகிறது. சாதிவெறி பிடித்த ஜெயப்பிரகாஷ் முனியை கொல்ல திட்டமிடுகிறார். மகா, முனி இருவரை கொலை சதி துரத்துகிறது. இருவரும் தப்பித்தார்களா? இருவருக்கும் என்ன தொடர்பு? மகாவின் குடும்பம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ஆர்யா. மகா கதாபாத்திரத்தில் பாசமிகு தந்தையாகவும், பொறுப்பான கணவராகவும் பளிச்சிடுகிறார். இந்துஜா புடவை வாங்கியதை சொன்னவுடன் அதற்கு இவர் கொடுக்கும் பதில் அனைத்து நடுத்தர குடும்ப கணவனின் ஆதங்கம். முனி கதாபாத்திரத்தில் மகிமாவின் கடவுள் பற்றிய கேள்விக்கு ஆர்யா கொடுக்கும் பதில்கள் இவரின் குரலுக்கு அந்த வசனங்கள் உயிர் பெற்றிருக்கிறது. இரண்டு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்திருக்கிறார். நான் கடவுளுக்கு பிறகு ஜாலியான வேடங்களிலேயே நடித்துவந்த ஆர்யா இதில் தனது நடிப்பின் பல பரிணாமங்களை காட்டி அசர வைக்கிறார்.

இந்துஜா, ஒரு சராசரி குடும்ப பெண்ணாக அழகாய் பொருந்தியிருக்கிறார். சின்ன சின்ன அசைவில் வெகுளித்தனத்தை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். கணவனிடம் உரிமையோடு சண்டை போடும் போது கண்ணில் நீரை நிறுத்தி அதில் காதலை ஆடவிட்டு, நடுத்தர குடும்பத்து இல்லத்தரசியை நம் கண் முன் நிறுத்துகிறார். குறிப்பாக இறுதி காட்சியில் அவரது நடிப்பு பிரமாதம்.

மகிமா இதுவரை பார்த்திராத ஒரு துணிச்சலான பெண் வேடத்தில் நடித்துள்ளார். ஆர்யாவை பார்க்கும்போது முகத்தில் இருக்கும் புன்னகையை உதடுகள் வெளியே விடாமல் தடுப்பதும் அதற்குத் துணையாய் விழிகள் பேசுவதும் கதாபாத்திரத்திற்கு அழகு. இறுதியில் பாட்டிலை பிடுங்கி குடித்துவிட்டு உடைப்பது துணிச்சலான நடிப்பின் உச்சகட்டம். எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று சிறப்பாக செய்ய முடியும் என்பதை இந்த படம் மூலம் நிரூபித்து இருக்கிறார் மகிமா.

இன்ஸ்பெக்டராக வரும் ஜி.எம்.சுந்தரும் அரசியல்வாதியாக வரும் இளவரசும் நடிப்பில் அசத்துகிறார்கள். இளவரசுவின் மருமகனாக வரும் யோகி கவனிக்க தகுந்த நடிப்பு. சூப்பர் குட் சுப்பிரமணி, அருள்தாஸ், பாலாசிங், மதன் குமார், ரோகிணி என மற்ற அனைவருமே சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்.

மவுனகுரு படம் மூலம் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட சாந்தகுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு அதேபோன்ற கனமான கதையுடன் களம் இறங்கியுள்ளார். கதாபாத்திரங்களை வடிவமைத்த விதத்தில் கவர்கிறார். இந்த படம் மூலம் ஒரு நாவலைப் படிப்பது போன்ற ஒரு அனுபவத்தை திரையில் காண்பித்திருக்கிறார். மகா-முனி என இருவரின் வாழ்க்கையை மிக எளிமையாகவும் யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களையும் அந்தக் கதைக்கு உரிய பாத்திரமாகவே பார்க்க முடிகிறது என்பது இவருக்கு கிடைத்த முதல் வெற்றி. இம் மாதிரியான கதைகளை திரையில் காண்பதற்கு நாம் தயாராக வேண்டும் என்பதே இப்படம் சொல்ல வருகிறது.

படத்தில், விவசாயம், கல்வி, ஜாதி, நடுத்தர வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்கள், கணவன்-மனைவி இடையேயான உணர்வுகள், ஆசிரியருக்கு உண்டான பண்புகள், கடவுள் பற்றிய உரையாடல் என அனைத்தையும் நீண்ட விவாதம் ஆக்காமல் ஆங்காங்கே அழகாய் அளவாய் சொல்லியிருப்பது இயக்குனரின் சிறப்பு.

அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு மகா, முனி இருவரது வாழ்வியலையும் அழகாக பிரிக்கிறது. தமனின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. சாபு ஜோசப்பின் படத்தொகுப்பில் சில காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

மொத்தத்தில் ’மகாமுனி’ கனமான கதையால் கவனிக்க வைக்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*