நேர்கொண்ட பார்வை – திரை விமர்சனம்!

இசை நிகழ்ச்சி முடிந்தவுடன் 3 ஆண்கள், 3 பெண்கள் ஹோட்டலில் சந்திக்கிறார்கள். அதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய ஒருவரைப் பாட்டிலால் அடித்துவிடுகிறார். இதனால் மூன்று ஆண்களும், மூன்று பெண்கள் மீது புகார் அளிக்கிறார்கள். இதில் பெண்களுக்கு ஆதரவாக வாதாடுகிறார் அஜித். ஏன் அந்தப் பெண் அடித்தார், என்ன நடந்தது, சமூகத்தில் பெண்கள் மீதான பார்வை எப்படியிருக்கிறது என்ற பல கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளது ‘நேர்கொண்ட பார்வை’

இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக். ஆனால், அந்தக் கதையை அப்படியே பண்ணாமல், தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களைச் செய்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். அந்தக் களத்தோடு இங்கு பெண்களை எப்படி பார்க்கிறோம் உள்ளிட்ட பல அம்சங்களை வசனங்களாக திரைக்கதையில் புகுத்தி அப்ளாஸ் பெறுகிறார்.

எளிமையான அறிமுகம், மனைவியின் திடீர் மரணத்தால் தனக்குள் இருக்கும் நோய், பெண்களைக் காப்பாற்ற வாதாடுவது, அவ்வப்போது அமைதியாய் இருப்பது, க்ளைமாக்ஸ் காட்சி வசனம் என வழக்கறிஞர் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாய் பொருந்தியுள்ளார் அஜித். மருத்துவரிடம் வில்லன் ஆட்கள் பேசும் போது ‘அவன் முன் நிற்காதீர்கள். நீங்கள் பத்திரமாக இருங்கள்’ என்று அஜித்துக்கான ஹீரோயிஸக் காட்சியை சரியான இடத்தில் பொருத்தியிருக்கிறார் ஹெச்.வினோத்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பு பிரமாதம். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். தோழிகளுடன் நட்பாக இருப்பது, பாலியல் துன்புறுத்தலின் போது போராடுவது, கெத்தாக வசனம் பேசிவிட்டு பயந்து ஓடுவது, R U A VIRGIN என்று அஜித் கேட்கும் போது, இப்போது ஏன் இந்தக் கேள்வி என குழம்புவது என தனது நடிப்பின் மூலம் திறமையான நடிகை என நிரூபித்திருக்கிறார்.

அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்குப் பிறகு கவனிக்க வைப்பவர் ரங்கராஜ் பாண்டே தான். தன் முதல் படம் என்று தெரியாத அளவுக்கு, கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார். ஆனால், ஒரு சில இடங்களில் கொஞ்சம் செயற்கைத்தனம் எட்டிப் பார்த்துவிடுகிறது. 3 பெண்களையும் கேள்விகளால் துளைத்தெடுக்கும் காட்சி அற்புதம். ரங்கராஜ் பாண்டேவுக்கு இன்னும் பல வாய்ப்புகள் வரக்கூடும்.

அபிராமி, ஆண்ட்ரியா தாரங் ஆகியோர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் தோழிகளாக நடித்துள்ளனர். இருவருமே தங்களுடைய கதாபாத்திரங்களை உணர்த்து சரியான நடிப்பை வழங்கியுள்ளனர். ஆண்ட்ரியா மட்டும் ‘பிங்க்’ படத்தில் நடித்த அதே கதாபாத்திரத்தில் இங்கும் நடித்துள்ளார்.

பெண்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தும் ஆண்களாக அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் ராவ் மற்றும் சுஜித் சங்கர் நடித்திருக்கிறார்கள். இதில் அர்ஜுன் சிதம்பரத்துக்கு தான் முக்கியக் கதாபாத்திரம். பாட்டிலில் அடிவாங்கிவிட்டு கோபப்படுவதில் தொடங்கி க்ளைமாக்ஸ் காட்சியில் அஜித்திடம் நீதிமன்றத்தில் பேசுவது வரை சிறப்பாக தன் பங்களிப்பை வழங்கியுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் மூவருக்குமே சின்ன கதாபாத்திரம் தான் என்றாலும், கவனிக்க வைக்கிறார்கள்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும் பலம். பெண்கள் தங்கியிருக்கும் வீடு, நீதிமன்றக் காட்சிகள் என ஒரே அறைக்குள்ளேயே வித்தியாசமான கோணங்கள் வைத்து காட்சிப்படுத்தியிருக்கிறார். யுவனின் பின்னணி இசையில் கொடுத்த கவனத்தை, கொஞ்சம் பாடல்களிலும் செலுத்தியிருக்கலாம். அஜித் – வித்யாபாலன் பாடலை தவிர்த்துப் படத்தோடு பார்க்கும் போது பாடல்கள் எதுவும் மனதோடு ஒன்றவில்லை. ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமாவும் படத்தின் கதைக்களத்துக்கு ஏற்றார் போல் உடைகளைத் தேர்வு செய்துள்ளார். கோகுல் சந்திரனின் எடிட்டிங் மாஸ் காட்சிகளையும், நீதிமன்றக் காட்சிகளையும் அதன் தன்மைக்கு ஏற்றார் போல் கையாண்டிருக்கும் விதம் சிறப்பு.

படத்துக்கு மிகப்பெரிய பலம் வசனங்கள் தான். பெண்களுக்காக வாதாடும் போது அஜித் பேசும் வசனங்கள் அனைத்துமே மிக எளிமையான வகையில், உடனே பொருந்திப் போகும் வகையில் எழுதியிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். ‘ஒருத்தர் மேல விஸ்வாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தரை ஏன் அசிங்கப்படுத்துறீங்க’, ’ஊசிக்குள் நூலை நுழைக்க முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கோம். ஆனால் அந்த ஊசி சரியா என்று நம்ம நினைக்கிறதே இல்ல’ என பல வசனங்கள் இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் ‘No’ என்பது ஒரு சொல் அல்ல, ஒரு வார்த்தை என்று அஜித் கொடுக்கும் விளக்கம் படத்தின் கதைக்களத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.

இந்தியிலிருந்து ரீமேக் செய்யும் போது, அஜித்தின் இமேஜுக்காக ஒரு சண்டைக்காட்சியும், வித்யா பாலன் காட்சியையும் சேர்த்திருக்கிறார்கள். இவ்விரண்டுமே படத்தின் கதையோட்டத்துக்குத் தேவையில்லை.

‘நேர்கொண்ட பார்வை’ இந்தச் சமூகத்தில் பெண்கள் மீதிருக்கும் பார்வையை கண்டிப்பாக மாற்றும். இம்மாதிரியான கதையை அஜித் தேர்வு செய்து நடித்திருப்பது கூடுதல் சிறப்பம்சம். மாஸ் காட்சிகள் குறைவு என்றாலும், இந்தப் படம் தற்போதைய காலகட்டத்தில் உள்ள பெண்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியிருக்கிறது.

– ஸ்கிரீனன்

– நன்றி இந்து தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*