உங்கள் தலையெழுத்து மாற வேண்டுமா? இந்த கோயிலுக்கு செல்லுங்கள்!

நம் ஒவ்வொருவரின் ஆசையும் நாம் தற்போது இருக்கும் நிலையை விட மிகச் சிறப்பாகவும், நல்ல ஆரோக்கியம், செல்வ நலத்துடனும் வாழ வேண்டும் என்பதே. உங்கள் வாழ்வில் நீங்கள் பிறந்தது முதல் துன்பத்தை மட்டுமே அனுபவிக்கிறீர்களா? வாழ்வில் தடைகள் நீங்கி உங்கள் தலையெழுத்து செழிப்பாக மாறவேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் செல்லவேண்டியது உங்கள் தலையெழுத்தை எழுதிய பிரம்மனின் கோயிலுக்கு தான். பிரம்ம தேவரின் கோயிலுக்கு சென்று உங்களின் இந்த நிலை மாறவேண்டும் என்று மனமுருக வேண்டினால் அவர் உங்கள் தலைஎழுத்தை மாற்றி எழுதுவார் என்று உறுதியாக பக்தர்களால் நம்பப்படும் கோயிலை குறித்து அறிந்துகொள்வோம் வாருங்கள்.

 

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து25 கிலோமீட்டர் தொலைவில் சிறுகனூருக்கு 5 கி.மீ தொலைவில் திருப்பட்டூர் எனும் மிகச் சிறிய கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊரில் தான் தன்னை வணங்குபவர்களின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார்.பிரம்மன் இந்த உலகத்தை படைக்கும் சக்தி தன்னிடமே உள்ளது என கர்வத்தில் இருந்தார். ஈசனுக்கும் ஐந்து தலை, தனக்கும் ஐந்து தலை என நான் என்ற அகங்காரத்துடன் ஈசனை மதிக்காத போக்கு தென்பட்டது.

ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழித்து அவரது நிலையை உணர வைக்க எண்ணினார் “”ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய், எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார். தன் நிலையை உணர்ந்த பிரம்மன் திருப்பட்டூரில் துவாதச சிவலிங்கங்களை(பனிரெண்டு லிங்கங்கள்) பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனின் படைப்பாற்றலையும், திரும்ப வழங்கி கூடுதலாக ஒரு வரம் வழங்கினார். என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக, என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.

பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.

இந்த கோயிலில் உள்ள ஈசன், பிரம்மன், அம்பாள் ஆகியோரை தரிசித்து விட்டு 36 தீபமிட்டு 9 முறை வலம் வந்து வேண்டுதல் வேண்டும். தம்பதியர் பிரிவு, துர்மரணம், வியாபாரத்தில் நஷ்டம், திருமணத் தடை, பிள்ளைகள் இழப்பு, கல்வியில் பாதிப்பு, வறுமை, குழந்தையின்மை, மன நோய்கள், தினமும் நித்ய கண்டம் பூரண ஆயுள் என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தலத்து பிரம்மாவை நேராக நின்று தரிசித்தாலே போதும். திங்கள், வியாழன், திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் நமது பிறந்த நட்சத்திரத்தன்று இங்கு வந்து வழிபடுதல் சிறப்பு. சகல தோஷங்களும் நீங்கி ‘திருப்பட்டூர் வந்தோம், திருப்பம் நிகழ்ந்தது’ என்ற நல்ல மங்களகரமான நிலை அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*