சந்தானத்தின் ஏ1 திரைவிமர்சனம்!

காமெடியில் வடிவேலுவுக்கு அடுத்து அவரது இடத்திற்கு வந்தவர் தான் சந்தானம். ஆனால் இதற்குபிறகு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறி நடித்து சில படங்களில் வெற்றியும் கண்டுள்ளார்.

ஏ1 (ஆக்கியூஸ்டு நம்பர் 1) அவருக்கு மேலும் ஒரு வெற்றியை பெற்றுத்தருமா? வாருங்கள் பார்ப்போம்.

கதை:

சில லோக்கல் ரௌடிகளிடம் சிக்கிக்கொண்ட ஹீரோயினை சண்டைபோட்டு காப்பாற்றுகிறார் சந்தானம். தமிழ் சினிமா வழக்கப்படி உடனே ஹீரோயினுக்கு ஹீரோ மீது காதல். அடுத்த நிமிடமே கட்டிப்பிடித்து லிப் டு லிப் கிஸ் செய்துவிடுகிறார்.

லோக்கல் பையனான சந்தானம் அன்று நெற்றியில் நாமம் போட்டிருப்பார். அதனால் அவர் அய்யங்காராக தான் இருப்பார் என நினைத்து காதலில் விழுந்துவிடுகிறார் அவர். ஆனால் அடுத்த நாளே சந்தானம் யார் என அறிந்து பிரேக் அப் செய்கிறார்.

பின்னர் ஹீரோயினின் அப்பா ரோட்டில் உயிருக்கு போராடும் சமயத்தில் அவருக்கு உதவுகிறார் சந்தானம். அதை பார்த்து ஹீரோயினுக்கு மீண்டும் காதல் மலர்கிறது. அதை நம்பி அவர் வீட்டிற்கு குடும்பத்துடன் பெண் கேட்டு செல்கிறார் சந்தானம். ஆனால் அங்கும் அவமானம் தான் மிஞ்சுகிறது.

ஒரு சமயத்தில் இந்த பிரச்சனை பற்றி குடித்துவிட்டு உளறுகிறார் சந்தானம். அதை நம்பி அவரது நண்பர்கள் ஒரு விபரீத செயலை செய்துவிடுகின்றனர். அதனால் வரும் பிரச்சனைகள், அதை சந்தானம் எப்படி சமாளித்தார் என்பது தான் மீதிக்படம்.

படத்தை பற்றிய அலசல்:

இதுவரை தமிழ் சினிமாவில் நாம் பார்த்து அலுத்துப்போன கதை தான் இது என்றாலும் படம் முழுவதும் நிரம்பியிருப்பது சந்தானத்தின் ட்ரேட்மார்க் ஒன் லைன் காமெடிகள் தான். தனக்கு என்ன வருமோ அதை தெளிவாக செய்துள்ளார் சந்தானம்.

அழகு பதுமை போல இருக்கவேண்டும் என்பதற்காகவே தாரா அலிஷா பெரியை தேடிப்பிடித்து ஹீரோயினாக நடிக்கவைத்துள்ளனர். ஆனால் நடிப்பில் பெரிதாக கவரவில்லை.

விஜய் டிவி தங்கதுரை, லொள்ளு சபா மனோகர், எம்எஸ் பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் என பலர் நடித்துள்ளதால் படத்தில் காமெடிக்கு பஞ்சம் இல்லை. பல காமெடிகளுக்கு தியேட்டரில் சிரிப்பு சத்தம் அதிகமாகவே கேட்டது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் ’இதுவெல்லாம் காமெடியா?’ என்கிற கேள்வியும் ஒருசில இடங்களில் மனதில் எழத்தான் செய்கிறது.

கிளாப்ஸ் & பல்ப்ஸ்:

– ஒர்க் அவுட் ஆன சந்தானம்+டீமின் காமெடி.

– சந்தோஷ் நாராயணன் பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னணி இசை ஓகே.

– பல லாஜிக் மீறல்கள். காமெடி படத்திற்கு எதுக்கு லாஜிக் என இயக்குனர் நினைத்துவிட்டாரோ என்னவோ.

– விஜய் டிவியில் பார்த்த லொள்ளு சபாவை அப்படியே பெரிய திரைக்கு கொண்டுவந்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என ஏ1 படம் பார்த்த பிறகு உங்களுக்கு நிச்சயம் தோன்றலாம்.

மொத்தத்தில், ஏ1 படம் எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் இரண்டு மணி நேரம் உங்களை சிரிக்கவைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*