மேஷம் முதல் மீனம் வரை ஆடி மாத ராசி பலன்கள்!

ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. ஆடி மாதத்தில் ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை என பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஆன்மீக அலைகள் நிறைந்த ஆடி மாத ராசிபலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்

வீரத்தின் நாயகன் செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே. இந்த மாதம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சுக்கிரன், ராகு, நான்காம் வீட்டில் சூரியன் செவ்வாய், புதன் எட்டாம் வீட்டில் குரு, ஒன்பதாம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. சுக்கிரன் நான்கு மற்றும் ஐந்தாம் வீடுகளுக்கு மாறுவதால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். நான்காம் வீட்டில் உள்ள சூரியன் பத்தாம் வீட்டை பார்க்கிறார். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். இந்த மாதத்தில் வீட்டிற்குத் தேவையான நிறைய பொருட்கள் வாங்குவீர்கள். நான்காம் வீட்டில் இருக்கும் உங்கள் ராசி நாதன் நீசம் பெற்ற செவ்வாய் ஆகஸ்ட் 8ஆம் தேதி உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கு மாறுவதால் இதுநாள் வரை மன இறுக்கம் விலகும் வேலைச்சுமை குறையும் புதிய சொத்துக்கள் வாங்கலாம். பிள்ளைகளால் செலவு வரும் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இந்த மாதம் வியாபாரத்தில் நிறைய லாபம் வரும். புதன் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் அதிக லாபம் வரும். உத்யோகஸ்தானதிபதியால் நன்மைகள் நடைபெறும். வேலையில் நிம்மதி உண்டாகும். பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். இந்த மாதம் கடன்கள் அடைபடும் நிம்மதி உண்டாகும். அம்மன் கோவிலில் கூழ் வார்த்து படையுங்கள். ஆடி மாதம் அமோகமாக இருப்பீர்கள்.

ரிஷபம்

காதல் நாயகன் சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே… இந்த மாதம் ராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகு, சுக்கிரன், மூன்றாம் வீட்டில் சூரியன், செவ்வாய், ஏழாம் வீட்டில் குரு, எட்டாம் வீட்டில் கேது சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருந்த சூரியன் மூன்றாம் வீட்டிற்கு மாறுகிறார். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள், அழகு ஆரோக்கியம் அதிகமாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்ப பிரச்சினைகள் தீரும் ராசிநாதன் சுக்கிரனால் பணவரவு கிடைக்கும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். புதன் சஞ்சாரத்தினால் பிரச்சினைகள் நீங்கி சொந்த பந்தங்கள் ஒன்று சேருவீர்கள். காரியங்களில் வெற்றி உண்டாகும். வியாபாரம் அமோகமாக இருக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மற்றவர்களிடத்தில் பேசும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்களுக்கு கடன் கொடுத்த தொகையை சற்று இழுபறியாக இருந்து பிறகு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். உங்கள் தொழில், வியாபாரங்களை பெரிய அளவு லாபங்கள் இல்லையென்றாலும் நஷ்டங்கள் ஏற்படாது. வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும். ஆடி மாதம் அற்புதங்கள் அதிகம் நடைபெறும். சிவ ஆலயங்களில் பச்சரிசி தானாமாக கொடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மிதுனம்

ராசிக்குள் சுக்கிரன், ராகு, ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன் ஆறாம் வீட்டில் குரு, ஏழாம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. இதுநாள் வரை ராசிக்குள் அமர்ந்து உங்களுக்கு எரிச்சல் கோபத்தை உண்டாக்கிய சூரியன் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதுநாள் வரை கோபம், படபடப்பு, எரிச்சல் குறையும். உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் பாதிப்புகள் நீங்கும். இரண்டாம் வீட்டில் நீச செவ்வாயினால் பண விரையம் ஏற்படும். மாத பிற்பகுதியில் செவ்வாய் இடப்பெயர்ச்சியினால் திடீர் பணவரவு கிடைக்கும். மாதம் முழுவதும் சுக்கிரனின் சாதகமான சஞ்சாரத்தினால் பணவரவு கிடைக்கும். மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வியோகம் உண்டு. பிற்பகுதியில் லாபம் கூடும். வேலையில் மாத முற்பகுதியில் சிறு பிரச்சினைகள் இருந்தாலும் மாத பிற்பகுதியில் நன்மைகள் நடைபெறும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். ஆடி மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக அமையும்.

கடகம்

ராசிக்கு விரைய ஸ்தானத்தில் ராகு சுக்கிரன் உடன் இருந்த சூரியன் உங்கள் ராசிக்குள் நுழைகிறார். நீசம் பெற்ற செவ்வாயுடன் சூரியன் அமர்வதால் கோபம் அதிகமாகும். முன்கோபத்தை தவிர்க்கவும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை சாப்பிட வேண்டாம். புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். நட்புக்களால் நன்மைகள் நடைபெறும். குல தெய்வ பிரார்த்தனை நிறைவேறும். சகோதரர்களுடன் இதுநாள்வரை இருந்த பிரச்சினைகள் தீரும். மாத பிற்பகுதியில் சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் இடமாற்றத்தினால் பிரச்சினைகள் தீரும். சனி கேதுவினால் கடன் பிரச்சினைகள் தீரும். பாதிப்புகள் குறைய புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பால் ஊற்றி வழிபடுங்கள். ஆடி மாதம் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமைகிறது.

சிம்மம்

சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சுக்கிரன், விரய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் நான்காம் வீட்டில் குரு, ஐந்தாம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. சூரியனும் செவ்வாயும் 12 ஆம் வீட்டில் மறைந்து இருப்பதால் திடீர் பயணம் தவிர்க்க இயலாத செலவுகள் ஏற்படும். சூரியனால் இரவு நேரங்களில் தூக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்த சகோதரர்களால் செலவு வரும். வீடு சொத்துக்களை வாங்கும் போது சொத்து விவகாரங்களில் எச்சரிக்கை தேவை பத்திரங்களை சரிபார்த்து வாங்கவும்.பெற்றோர்கள் வழியில் சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். சிலருக்கு ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத் தொடங்கும். திருமண வயது வந்த உங்கள் வீட்டு ஆண்கள், பெண்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும். பெண்களுக்கு அடிக்கடி சிறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் சற்று தாமதித்து அம்முயற்சிகளை தொடங்குவது நல்லது. புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். ராகு, சுக்கிரன், புதனால் நன்மைகளும், வேற்று மொழியைச் சேர்ந்த நண்பர்களால் நன்மைகள் நடைபெறும். ஆடி மாதம் அம்மன் கோவிலுக்கு சென்று கூழ் வார்ப்பது மேலும் நன்மைகளைத் தரும்.

கன்னி ராசி

புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் ராகு, சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், மூன்றாம் வீட்டில் குரு, நான்காம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. கன்னி ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் அதிர்ஷ்டம் வரப்போகுது. சூரியன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் அமர்வது யோகம் கை கூடி வரப்போகுது. இந்த மாதம் முழுவதும் சுக்கிரன் அற்புதமான பலன்களை தரப்போகிறார். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராது இருந்த பணம் கைக்கு வரும் விஐபிக்கள் அறிமுகம் ஆவார்கள். வீடு கட்ட வங்கி லோன் கிடைக்கும். வியாபாரம் அமோகமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த அந்நியோன்யம் அதிகமாகும். உத்யோக வகையில் எதிராக செயல்பட்டவர்கள் உங்களுக்கு ஆதரவாக மாறுவார்கள். புது வண்டி வாகனம் வாங்குவீர்கள். கல்வியில் சிறக்க மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புதியவர்களுக்கு பணத்தை கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் நல்ல லாபங்களை தொழிலில் பெற முடியும். பெருமாள் கோவிலில் சென்று கருடாழ்வாரை தரிசனம் செய்யுங்கள். ஆடி மாதம் அற்புதமாக இருக்கும்.

துலாம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே… இந்த மாதம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் ராகு, சுக்கிரன் பத்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய் இரண்டாம் வீட்டில் குரு, மூன்றாம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. சூரியன் 10 ஆம் வீட்டில் அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும் வருமானம் அதிகரிக்கும் எதிர்பார்த்த தொகை கிடைக்கும். இந்த மாதம் முழுவதும் உங்கள் ராசி நாதன் சுக்கிரன் சாதகமாக இருக்கிறார். கவுரவம் புகழ் அதிகமாகும். புதனால் பெற்றோர்களின் ஆசி கிடைக்கும். எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவீர்கள். அரசாங்க வேலைகள் நல்லவிதமாக முடியும். வியாபாரத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும் மாத பிற்பகுதியில் செவ்வாய் இடமாற்றத்தினால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. மேலும் நல்லது நடக்க அம்மன் கோவிலுக்கு சென்று புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிகராசிக்காரர்களே… இந்த மாதம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன், ராகு 9ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், ராசிக்குள் குரு ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. அமர்வதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. விரைவில் சுக்கிரன் இடம் மாறுகிறார். சுக்கிரனின் சாதகமான சஞ்சாரத்தினால் பெண்கள் விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். பட்ஜெட்டிற்கு தகுந்த மாதிரி வீடு வாங்குவீர்கள். பணப்புழக்கம் அருமையாக இருக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். கணவன் மனைவி இடையை சண்டை சச்சரவுகள் வரும். பிரச்சினை தீர விட்டுக்கொடுத்து போங்கள். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் சின்னச் சின்ன எதிர்ப்புகள் வரும். செவ்வாய் மாத பிற்பகுதியில் 10ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் நன்மை அதிகரிக்கும். பெருமாள் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வணங்குகள். ஆடி மாதம் அமோகமாக இருக்கும்.

தனுசு

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. இந்த மாதம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் ராகு, சுக்கிரன் சஞ்சரிக்கிறார். எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய் இணைகின்றனர். ராசிக்கு விரைய ஸ்தானத்தில் குரு, ராசிக்குள் சனி கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. இதுநாள்வரை ராசிக்கு 7ஆம் வீட்டில் இருந்த சூரியன் 8 ஆம் வீட்டில் அமர்வதால் அப்பா ஆரோக்கியத்திலும் மனைவி ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. சகோதரர் ஒற்றுமை அதிகரிக்கும். செவ்வாய் எட்டாம் வீட்டில் இருப்பதால் பயணங்களில் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும், சொத்துக்களை தாய் பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும். வீட்டில் உள்ள பொருட்களின் பாதுகாப்பில் கவனமாக இருக்கவும். வியாரத்தில் லாபம் கிடைக்கும். இந்த மாத ஆரம்பத்தில் சுமாராக இருந்தாலும் மாத இறுதியில் நன்மைகளும் லாபங்களும் அதிகமாகும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பிள்ளைகளால் நன்மைகள் அதிகரிக்கும். குரு பகவானை வணங்குங்கள் இந்த மாதம் சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட நன்மைகள் நடைபெறும்.

மகரம்

சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே இந்த மாதம் முழுவதும் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சுக்கிரன் ராகு, ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன், செவ்வாய், லாப ஸ்தானத்தில் குரு விரைய ஸ்தானத்தில் சனி கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. களத்திர ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். காரமான உணவை தவிர்க்கவும். சொத்துக்களை வாங்கும் போது எச்சரிக்கை தேவை. சுக்கிரன் சாதகமாக பயணிப்பதால் கணவன் மனைவி உறவு மேம்படும். கோவில் விழா, உறவினர்கள் வீட்டு விசேசங்களில் பங்கேற்பீர்கள் வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சை விளக்கு ஏற்றி அம்மனை வணங்குங்கள். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணியிடங்களில் உங்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கு சூழ்நிலை உருவாகும்.வெளிநாடுகளுக்கு சென்று பெயரும், புகழும் பெரும் யோகம் கலைஞர்களுக்கு உண்டாகும். ஏழைகளுக்கு மிதியடி தானம் கொடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கும்பம்

ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் ராகு, ஆறாம் வீட்டில் சூரியன், செவ்வாய் பத்தாம் வீட்டில் குரு, லாப ஸ்தானத்தில் சனி கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருந்த சூரியன் 6ஆம் வீட்டிற்கு வருவதால் எதிரிகள் தொல்லை ஒழியும். புது வேலை கிடைக்கும். இடம் வாங்க பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதரர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுக்கிரன் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு வரும் போது விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும், பயணங்களில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும். குழந்தைகள் வழியில் அவ்வப்போது மருத்துவ செலவுகள் ஏற்படும். அவ்வப்போது மனம் சற்று குழப்ப நிலையில் இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். அரசு வழியில் கடன் உதவிகளும் கிடைக்கும். புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். தொலைதூர பயணங்களை சிலர் மேற்கொள்வார்கள். உறவினர்களிடம் கவனமாக இருக்கவும். செவ்வாய் பலமாக இருப்பதால் பெரிய பொறுப்புகள் தேடி வரவும். செவ்வாய்கிழமைகளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மீனம்

ராசிக்கு நான்காம் வீட்டில் சுக்கிரன், ராகு ஐந்தாம் விட்டில் சூரியன், செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் குரு பத்தாம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. சூரியன் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கையா இருக்கவும். தடைகளை தாண்டி ஜெயிப்பீர்கள். இன்னும் சில தினங்களில் சுக்கிரன் ஐந்தாம் வீட்டிற்கு மாறுகிறார். ஐந்தாம் வீட்டில் மூன்று கிரகங்களின் கூட்டணி அமோகமாக இருக்கும். குருவின் அருள் முழுமையாக இருப்பதால் நன்மைகள் நடைபெறும். ஐந்தாம் வீட்டில் உள்ள செவ்வாய் மாத இறுதியில் ஆறாவது வீட்டிற்குள் அமர்வதால் திடீர் பணவரவு உண்டாகும். அதிர்ஷ்டங்களினால் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த பொருட்கள் விற்று தீர்க்கும். தொழிலி புது வாடிக்கையாளர்களால் நன்மைகள் நடைபெறும். குருவின் அருளால் வீடு மனை வாங்கு வீர்கள். மேலும் நன்மைகள் நடைபெற பழனி முருகனை வணங்குங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*