தாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்

திருமங்கலம்: திருமங்கலம் அருகே அடுத்தடுத்த நாளில் பெற்றோர் இறந்ததால் அவர்களது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உலகாணியை சேர்ந்தவர் சந்தானம் (45). ஜோதிடர். இவரது மனைவி செல்லம்மாள் (40). நூறுநாள் வேலை தொழிலாளி. இவர்களுக்கு ஜெயச்சந்திரன் (15), ஜெயந்தி (13) என 2 குழந்தைகள் உள்ளனர். ஜெயச்சந்திரன் 9ம் வகுப்பு, ஜெயந்தி 7ம் வகுப்பு படித்து வருகின்றனர். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட செல்லம்மாள் சிகிச்சை பலனின்றி கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். மனைவியின் மீது அதிக பாசம் வைத்திருந்த சந்தானம்,

அவரது பிரிவை தாங்கமுடியாமல் மனவேதனையில் இருந்தார். சர்க்கரை நோயாளியான இவர் மனைவி உயிரிழந்த சோகத்திலேயே 6ம் தேதி மரணமடைந்தார். இதனால் குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்களது பாட்டி, தாத்தா தான் (செல்லம்மாளின் பெற்றோர்) தற்போது குழந்தைகளை பராமரித்து வருகின்றனர். வயதான இவர்கள் குழந்தைகளின் கல்விச்செலவு உள்பட அனைத்து பராமரிப்பு செலவுகளையும் எப்படி கவனிப்பது என தெரியாமல் சோகத்தில் நிற்கின்றனர். குழந்தைகளின் தாய்மாமன் தவசி கூறுகையில், ‘‘அடுத்தடுத்த நாளில் எனது தங்கையும், அவரது கணவரும் உயிரிழந்து விட்டனர். தற்போது குழந்தைகளை நானும் எனது பெற்றோரும் பராமரித்து வருகிறோம். நான் சாதாரண விவசாய கூலி. எங்களால் குழந்தைகளின் எதிர்கால செலவுகளை செய்வது சிரமம். எனவே நல்ல உள்ளம் கொண்டோர் பொருளுதவி செய்தால் அவர்களை மேல்நிலைக்கு கொண்டு செல்ல முடியும்’’ என்றார்.

உதவும் மனம் கொண்டவரா நீங்கள்?

பெற்றோரை இழந்த ஜெயசந்திரன், ஜெயந்தி கூறுகையில், ‘‘பெற்றோரை இழந்த எங்களால் விடுதியில் சேர்ந்து தனித்தனியாக வாழ இயலாது. அப்பா, அம்மா வாழ்ந்த வீட்டில் இருந்தே கல்வியை தொடர விரும்புகிறோம். மேல்படிப்பு படிக்க ஆசை’’ என்றனர். நல்ல உள்ளங்கள் கொண்டவர்கள் உதவ நினைத்தால் குழந்தைகளின் தாய்மாமா தவசியை 99449 78432 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*