சினிமாவில் மியூசிக் டைரக்டர் ஆகவேண்டும் என்பது ஸ்ரீதரின் கனவு. இல்லை இல்லை… ஸ்ரீதர் மற்றும் அவனது சுற்றத்தாரின் கனவு. இப்படி ஒருவருக்காக அவரது குடும்பம், நண்பர்கள், காதலி என அனைவருமே இருந்தது, அவர்களுக்காக இவர் அன்பா இருந்ததைத்தான் இப்படம் உருகி உருகி சொல்லியிருக்கும் முகவரி திரைப்படம்.
ஆசை, வாலி, காதல் மன்னன் என சாதாரண பசங்களைவிட ஒரு படி மேல உள்ள கதாபாத்திரங்களாக நடித்துவந்த தன் பாதையை, ஃபேமிலி சப்ஜெக்டுகளை நோக்கி அஜித் திரும்பிய காலகட்டம் இது. எல்லா இளவட்டங்கள் மாதிரி அஜித்தும் காய்கறி கடைக்குச் செல்வது, அப்பாவிற்கு டிரெயின் டிக்கெட் வாங்கித் தருவது என அப்போதே மிடில் கிளாஸ் வேலையில்லா பட்டதாரி டெம்ப்ளேட்டில் நடித்திருப்பார்.
அஜித் ஒரு பேட்டியில், ‘நான் நடித்த படங்களில் முகவரி என் மனதிற்கு மிக நெருக்கமான படம்’னு சொல்லியிருப்பார். அதுமட்டுமில்லாமல், ரீரெக்கார்டிங்கில் படம் பார்க்கும்போது, ‘இந்தப் படத்தில் நான் நடிச்ச மாதிரி எனக்குத் தெரியலை. வேற ஆளைப் பார்க்கிற மாதிரிதான் இருக்கு’’னு சொன்னார்.
இது மட்டும் இல்லை, இப்படத்தில் வந்த அனைத்து நகைச்சுவை டிராக்குகளும் விவேக் எழுதியது. அல்வா வாசு டீ கடையில் உட்கார்ந்து அவ்வப்போது தானும் வேலை செய்கிறேன், வழிப்பறி செய்கிறேன் என்று எல்லா இடத்திலும் மொக்கை வாங்குவது இன்றும் சிரிக்க வைக்கக்கூடிய காட்சிகள்.
நாம் இன்று பல இடங்களில் கேட்கும் ‘முதல்ல வாங்கோணும். அப்புறம் நோண்டோனும்’ எனப் பொன்னம்பலம் பேச்சும் கலாய் டயலாக் டிரேட் மார்க்கான ஒன்று. முக்கியமாக, அஜித்குமாருக்கு டைட்டில் கார்டில் ‘ஏ.கே’ என அறிவித்த முதல் படமும் இதுதான்.
முதலில் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தவர் முரளி. எல்லாம் அமையும் என்பார்களே, அப்படி `முகவரி’க்கு எல்லாம் அமைந்த படம். இதில் வரும் ஸ்ரீதர் கேரக்டர் அஜித்துக்கு அவ்வளவு நெருக்கமானது. அந்த கேரக்டரை அவ்வளவு அழகாக உள்வாங்கி, இயல்பாக நடித்திருந்த படம் முகவரி.
இசை அமைப்பாளர் வாய்ப்புக் கேட்டு இருக்கும் ஒருவனின் கதை எவ்வளவு இசை நிறைந்ததாக இருக்க வேண்டுமோ, அந்தளவுக்கு இருந்திருக்கும் படத்தின் இசை. வேற்று மொழி பாடல்களின் ரிப்-ஆஃப் என்ற வாதங்கள் வந்தாலும், அதைத் தமிழ் ரசிகர்களுக்கான ரசிப்புத்தன்மையில் கொண்டு வந்தது தேவாவின் கைவண்னம்..
இன்று அஜித்குமார் ‘தல’ என அழைக்கப்பட்டாலும், அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்தாலும், அன்றைய கால கட்டத்தில் ஒரு பக்கத்து வீட்டு பையன் இமேஜை அடைந்தது முகவரி படம் மூலம்தான்! 25 வயதை தாண்டியவர்கள் கனவுகளுக்காக தங்கள் காதலைப் பிரிந்திருந்தால், இந்தப் படத்தை பார்க்கும் போது நிச்சயம் ஒரு ‘ரெமினிசென்சாக’ இருக்கும்!