தன்னுடைய மார்க்கெட்டுக்காக அலைபவர்களுக்கு மத்தியில் இப்படி இருக்கும் அஜித்துக்கு எனது மனமார்ந்த நன்றி ஜோதிகா நெகிழ்ச்சி சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததற்காக அஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜோதிகா.
திருமணம், குழந்தைகள் என்றான பிறகு ஒரு பிரேக் எடுத்துவிட்டு மீண்டும் நடிக்க வந்த ஜோதிகா சமூக அக்கறை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். வித்தியாசமான வழியில் செல்லும் ஜோதிகாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றே கூற வேண்டும்.
இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் அஜித்தை பாராட்டியதுடன், நன்றியும் தெரிவித்துள்ளார்.
அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் ஸ்டேட்டஸில் இருப்பவர்கள் மார்க்கெட் மார்க்கெட் என்று இருக்கும்போது அவர் அதை பற்றி கவலைப்படாமல் நேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் நடித்துள்ளதற்கு நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜோதிகா.
அஜித் மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அதனுடன் ஒப்பிடும்போது நேர்கொண்ட பார்வை சின்ன படம் தான். இருந்தாலும் சமூக அக்கறையுடன் அவர் நடித்துள்ளார். அஜித்துக்கு கோடிக் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அவரின் நடை, உடை, ஸ்டைலை பின்பற்றும் அவர்கள் இந்த படத்தில் அவர் செய்துள்ளதையும் பின்பற்றுவார்கள் என்று ஜோதிகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜோதிகா அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கமல் ஹாஸன் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் தான் நடித்த ஹீரோக்களில் அஜித், சூர்யா, மாதவன் ஆகியோருடன் நடித்தபோது தான் சவுகரியமாக உணர்ந்ததாக முன்பு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இந்நிலையில் அஜித்தின் முயற்சியை பாராட்டியுள்ளார். ஜோதிகாவின் பேட்டியை பார்த்தவர்கள் அவர் யாரை மார்க்கெட்டுக்காக அழைகிறார்கள் என்று தெரிவித்துள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சிலரோ அது யார் என்று எங்களுக்கு தெரியுமே என்கிறார்கள். அவர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, பொதுவாகத் தான் பேசியுள்ளார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜோதிகா பள்ளி ஆசிரியையாக நடித்த ராட்சசி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் அதை ஜோதிகா தனது தோளில் தாங்குவதாக தெரிவித்துள்ளனர். ஜோதிகா தனது மைத்துனர் கார்த்தியின் அக்காவாக ஒரு படத்தில் நடிக்கிறார். அக்கா, தம்பி பாசத்தை பற்றியது அந்த படம். கார்த்தியும், ஜோதிகாவும் முதன்முறையாக சேர்ந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.