தமிழகத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தின் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் ஜோதிகா. அவர் வந்ததும் அந்தப்பள்ளியில் ஏராள மாற்றங்கள் முன்னேற்றங்கள். அதனால் பல சிக்கல்கள். அவர் ஏன் அங்கு வந்தார்? அவருக்கு வந்த சிக்கல்களை எப்படி எதிர்கொண்டார்? ஆகியனவற்றிற்கான விடைதான் ராட்சசி.
படத்தின் பெயரிலிருந்து திரை முழுக்க ஜோதிகாவின் ஆதிக்கம்தான். எவ்வளவு பொறுப்பான வேடத்தை ஏற்றிருக்கிறோம் என்பதை முழுமையாக உணர்ந்து அதற்கு நியாயமாக நடித்திருக்கிறார்.
அறிமுகக் காட்சி, பெட்டிக்கடையில் காட்டும் அதிரடி,ஆசிரியர்களிடம் காட்டும் கண்டிப்பு ஆகியன அவரை ராட்சசியாகக் காட்ட சிறுவர்களிடம் காட்டும் அன்பு அவரை தேவதையாகச் சித்தரிக்கிறது. இரண்டுக்கும் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.
தந்தை மறைவுக்குப் பின் பூர்ணிமாபாக்யராஜும் ஜோதிகாவும் சந்திக்கும் காட்சி கண்கலங்க வைக்கிறது. ஓர் அறைக்குள் பூட்டிவைத்து பல ஆண்கள் அவரைத் தாக்க வரும்போது நடக்கும் நிகழ்வுகள் ஜோதிகாவின் இன்னொரு பரிணாமத்தை வெளிப்படுத்துகிறது. பள்ளி ஆசிரியர்களாக நடித்திருக்கும் கவிதாபாரதி, முத்துராமன், சத்யன், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட அனைவரும் கவனிக்க வைக்கிறார்கள்.
ஜோதிகாவின் தந்தையாக வரும் நாகிநீடு, இப்படி ஒரு அப்பா எல்லோருக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்க வைத்திருக்கிறார். தனியார் பள்ளி தாளாளராக வரும் ஹரிஷ்பேரிடி,என்னவோ செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்தால் அதற்குள் படம் முடிந்துவிடுகிறது. ஷான்ரோல்டனின் இசையில் பாடல்கள் படத்தோடு ஒன்றியிருக்கின்றன. பின்னணி இசையும் பொருத்தம்.
கோகுல்பினாயின் ஒளிப்பதிவு ஜோதிகாவுக்குப் பலம். மூன்று கேள்விகள் கேட்கவா? என்று ஜோதிகா விரலுயர்த்தும் போதெல்லாம் பாரதிதம்பியின் பேனா தலைநிமிர்கிறது. மாநில அரசை சீண்டும்போதே நினைத்தேன் அது மத்திய அரசாகத்தான் இருக்குமென்று என்பது உட்பட பல அரசியல் விமர்சனங்களும் அங்கங்கே இருக்கின்றன. தானி ஓட்டுநராக நடித்திருக்கும் மூர்த்தி பேசும் வசனங்கள் எல்லாமே சரவெடிகள்தாம்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றாலே இப்படித்தான் என்கிற பொதுப்புத்தியை அப்படியே ஏற்றுக்கொண்டு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. படம் தொடங்கியதிலிருந்து அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என்பதை குழந்தை கூடச் சொல்லிவிடும்.அதுபோலவே படம் இருப்பது ஆகப்பெரிய பலவீனம்.
கிராமத்துப் பள்ளிக்குள் திடீரென இந்தி ஒலிப்பது ஏன்? எதற்கு? ஜோதிகா யாரென்பது உள்ளூர்காரர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், மாவட்ட ஆட்சியருக்கு, கல்வித்துறை அதிகாரிகளுக்குக் கூடவா தெரியாது?
அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்துதல், இடைநிற்கும் மாணவர்களின் நிலை உணர்தல் ஆகிய நல்ல விசயங்கள் பேசப்படுகின்றன. முதல்படத்தில் நல்ல விசயத்தைப் பேசியிருக்கிறார் இயக்குநர் சை.கெளதம்ராஜ். பேசி மட்டும் இருக்கிறார்.