விநாயகரின் வெட்டப்பட்ட மனிதத் தலை இருக்கும் குகை இதுதானா?

விநாயகர் என்றால் மேலான தலைவர் என்று பொருள், கணபதி என்றால் கணங்களின் அதிபதி என்று பொருள். முழுமுதற்கடவுளாக அனைவராலும் போற்றப்படும் விநாயகருக்கு யானையின் தலை எப்படி வந்தது என்பதை பெரும்பாலான அனைவரும் அறிந்திருப்போம்.

சிவபெருமானால் வெட்டப்பட்ட விநாயகரின் மனிதத் தலை இன்றும் ஒரு குகையில் அப்படியே இருப்பதாக நம்பப்படுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

உத்தரகண்டில் உள்ள புவனேஷ்வரில் உள்ளது பாட்டல் புவனேஸ்வர் எனும் குகை. இந்த குகைக்குள் செல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. 160 மீட்டர் நீளமும் 90 அடி ஆழமும் உள்ள இந்த குகைக்குள் செல்லவேண்டுமெனில் தளராத மனவுறுதியும் கடுமையான இறைபக்தியும் அவசியம். வளைந்து நெளிந்து செல்லும் இந்த குகை வெறும் ஒரே குகை கிடையாது. உள்ளே செல்ல செல்ல பல கிளைகளாக பிரிந்து இன்றுவரை மனிதனின் காலடித்தடமே படாத அளவிற்கு மிகவும் குறுகலான பாதைகளை கொண்ட பல குகைகள் இங்கு உள்ளது.

சிவனின் அனுகிரகம் இருந்தால் மட்டுமே இந்த குகைக்குள் முழுமையாக செல்லமுடியும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. பலரும் இந்த குகைக்குள் செல்ல முயன்று முடியாமல் பாதியிலேயே திரும்பி வருவதே வாடிக்கையாக இருக்கிறது.

திரேதாயுகத்தில் இந்த பகுதியை ஆண்ட சூரிய வம்சத்தை சேர்ந்த ரிதுபர்னா என்ற அரசன் வேட்டைக்கு சென்றபோது ஒரு மானை துரத்தி களைப்பாகி ஒரு மரத்தடியில் தூங்கிவிட்டார். அவரது கனவில் ஒரு குரல் அந்த மானை துரத்த வேண்டாம் என்றும் அது செல்லும்போக்கில் அதை பின்தொடர்ந்து வா என்று கட்டளை பிறப்பித்தது. ராஜா ரிதுபர்னா கண்விழித்தவுடன் கனவில் சொல்லியபடி அந்த மானை பின் தொடர்ந்து வந்து இந்த குகையை அடைந்தார். இந்த குகையை பாதுகாத்துவந்த ஆதிசேஷன் என்ற நாகம் ராஜாவுக்கு வழிவிட்டது. குகையின் இறுதியில் ராஜா ரிதுபர்னா ஈசனையும் 33 கோடி தேவர்களையும் விநாயகரின் வெட்டப்பட்ட தலையையும் கண்டதாகவும் இதன்பின் கலியுகத்தின் தொடக்கம் வரை யாரும் இந்த குகைக்குள் நுழைந்ததில்லையாம். பின் ஆதிசங்கரர் கந்த புராணத்தில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் இந்த குகை குறித்து வெளியிட்டார்.

சிவனால் வெட்டப்பட்ட விநாயகரின் மனிதத் தலை இந்த குகையில் எங்கோ ஓரிடத்தில் பத்திரமாக இருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இதுவரை முழுமையாக இந்த குகைக்குள் யாரும் செல்லமுடியாததால் விநாயகரின் தலை குறித்த மர்மம் இன்றுவரை நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*