உலகளவில் புகழ் பெற்ற கோடிலிங்கங்களைக் கொண்ட கோடிலிங்கேஸ்வரர் ஆலயம்!

உலகளவில் புகழ் பெற்ற சிவன் கோயில்களில் மிகவும் பிரமிப்பு உண்டாக்கக் கூடிய கோயில்,கோடிலிங்கேஸ்வரர் திருக்கோயில். இரண்டு லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.இங்குக் கோடிக்கணக்கான லிங்கங்களை ஒரே இடத்தில் காண முடியும்,ஆதலாலேயே,கோடிலிங்கேஸ்வரர் என்னும் பெயர் பெற்றது.இந்தத் திருக்கோயில் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது.

ஸ்தல வரலாறு: முன்னொரு காலத்தில் பக்த மஞ்சுநாதா என்பவர்,தர்மஸ்தாலி என்னும் கிராமத்தில் வாழ்ந்து வந்தார். சைவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் இறை நம்பிக்கையற்றவர்.தனது குடும்பத் தொழிலைவிட்டுக் காவல் வேலையைச் செய்து கொண்டிருந்தார்.பின்பு சில காலம் கழித்து,எதோ மாற்றத்தால் இறை நம்பிக்கை கொண்டு,ஸ்ரீமஞ்சுநாதர் மீது பக்தி கொள்ள ஆரம்பித்தார்.ஒரு சமயம் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற பொழுது,இவர் நுழைந்ததும் அங்குள்ள விளக்குகள் அனைத்தும் அணைந்துவிட்டது.அங்கு சூழ்ந்திருந்த மக்கள்,இவர் கால்அடி எடுத்து வைத்த சகுனத்தால் தான் விளக்குகள் அணைந்துவிட்டது என்று பொய்ப் பழி கூறினார்கள்.அங்கு இறை வழிபாடு செய்ய வந்த அந்த நாட்டின் மகாராஜா அம்பிகேஸ்வரவர்மன்,இவர்கள் கூறியதை கேட்டு பக்த மஞ்சுநாதர் மீது சந்தேகம் கொண்டார். “இவ்வாறு நடந்தது உன்னால் இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா?” என்று அவர் பக்த மஞ்சுநாதரிடம் வினவினார், சிவ பக்தனான பக்த மஞ்சுநாதன் சிவன் மேல் உள்ள தனது அன்பையும்,தன் பக்தியையும் நிரூபிக்க மாயக்காயத் தீபம் பாடலில் உள்ள பதிகத்தை பாடினார்.அனைவருக்கும் ஆச்சர்யம் உண்டாகும் விதத்தில்,அணைந்த விளக்குகள் தானாக எரிந்தது.தன் தவற்றை உணர்ந்த மகாராஜா அம்பிகேஸ்வரவர்மன்,பக்த மஞ்சு நாதரிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால்,சிவ பக்தனைச் சந்தேகித்ததால்,கோடிக்கணக்கான பாவம் அடைந்ததாக எண்ணிய மகாராஜா பக்த மஞ்சுநாதர் அறிவுடைப்படி,தான் செய்த பாவத்திற்காகக் கோடி லிங்கங்களை இங்கு வைத்து வழிபட்டு,தன் பாவத்தைப் போக்கிக் கொண்டார்.

கோவிலின் சிறப்புக்கள்: 15 ஏக்கர் சுற்றளவில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலின் சிவன் சிலை 108 அடி ஆகும் (33m) மற்றும் நந்தியின் சிலை 35 அடி (11m) ஆகும்.இது உலகத்தில் உள்ள பெரிய சிவலிங்கங்கள் பட்டியலில் ஒன்றாகும்.இதனைச் சுற்றிலும் கோடிக்கும் மேற்பட்ட சிவ லிங்க சிலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.அது மட்டுமின்றி,விஷ்ணு,விநாயகர்,ராமர் போன்ற 11 தெய்வங்களுக்குத் தனி சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.ஸ்தல விருட்சமாக நாகலிங்க பூ மரம் அமைந்துள்ளது.கல்யாணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.இங்கு ஜூலை மற்றும் ஜனவரி மாதம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

கோவிலைச் சென்றடையும் வழிகள்&கோவில் கட்டணங்கள்: கோலார் மாவட்டம் காமசன்ற கிராமத்தில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது.கோலரில் இருந்து இத்திருத்தலத்திற்குப் பேருந்து வசதி உள்ளது.காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறக்கப்படும்.சுவாமி தரிசனம் பெற,ஒருவருக்கு நுழைவாயில் கட்டணம் 20 ரூபாய்.கேமரா கொண்டு செல்ல அனுமதிக் கட்டணம் 100 ரூபாய்.சிவலிங்கம் அங்கு நிறுவ, 6000 ரூபாய்.அது மட்டுமின்றி,இங்கு தூரத்தில் இருந்து வருபவர்கள் தங்குவதற்குப் பக்கத்தில் ஹோட்டல் வசதியும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*