ருத்திராட்சம் சிவபக்தர்கள், சிவனடியார்கள் தங்கள் கழுத்தில் பயபக்தியுடன் அணிந்திருக்கும் சிவச்சின்னம். ஆண், பெண் பேதமின்றி யாரும் அணியலாம். வயது வரம்பும் கிடையாது. ஆனால், ருத்திராட்சம் அணிந்தால் சில நடைமுறைகளை, பழக்கவழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும்.
கடவுளுக்குப் பூஜை செய்யும்போது அணியலாம். பிறருக்கு கல்வி அளிக்கும்போது அணியலாம். புனித நதிகளில் குளிக்கும்போது, பிதுர் தர்ப்பணம் செய்யும்போது, வீட்டில் நடைபெறும் சுப நிகழ்வுகளின்போது அணியலாம். எந்தவொரு செயலையும் ருத்திராட்சம் அணிந்து செய்யும் போது நமக்கு இறைவனின் அனுகூலம் கிடைப்பதால், நிச்சயம் வெற்றி கிட்டும்.
ஒருவார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணெயில் ருத்திராட்சத்தை ஊறவைக்கவேண்டும். பின்னர் நீரால் சுத்தப்படுத்தி, ஈரம் காய்ந்த பின்னர் திருநீறில் ஒருநாள் முழுவதும் வைத்திருக்கவேண்டும். அடுத்ததாக, பச்சைப் பசும்பாலில் கழுவவேண்டும், பின்பு மீண்டும் நீரால் தூய்மை படுத்தவேண்டும். தூய்மையான ருத்திராட்சத்தை பூஜை செய்து, மந்திரம் ஜபித்து அணியவேண்டும்.
ருத்திராட்சம் அணிவதால், உண்டாகும் பொதுவான நன்மைகள்: புண்ணிய நதிகளில் நீராடிய நன்மை கிட்டும். தீய சக்திகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும். மோட்சத்தை அருளும் சக்தியை வழங்கும். லட்சுமி கடாட்சம் கிட்டும். புத்திரப் பாக்கியம் உண்டாகும். ருத்திராட்சத்தைப் பார்ப்பது மகா புண்ணியம். தொட்டால் கோடி புண்ணியம். அணிந்துகொண்டால் பல கோடி புண்ணியமாகும். நம் உடல் பிணிகளைப் போக்கக் கூடியது.
108 ருத்திராட்சம் கொண்ட மாலையை அணிந்தால், ‘அசுவமேத யாகம்’ செய்த புண்ணியம் உண்டாகும். பாவங்களிலிருந்து விடுதலை கிட்டும். ஒன்று முதல் பதினான்கு முகங்கள் கொண்ட ருத்திராட்சம் உண்டு. ருத்திராட்சங்களின் முகங்களைப் பொறுத்து நமக்கு கிடைக்கும் நன்மைகளும் மாறுபடும். பெரும்பாலும், இருமுகம், ஐந்துமுகம், 11 முகம், 14 முகமே சிவனடியார்களால் போற்றப்படுகிறது. சிவனடியார்களின் அறிவுரை மற்றும் ஆசீர்வாதத்துடன் ருத்திராட்சம் அணிவது சிறப்பு. ரத்த அழுத்தத்தை சீராக்கி மன அமைதியையும் சுறுசுறுப்பையும் தரும். ஆறுமுகம்கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்கு பாத்திரமாகலாம்.
பிறப்பு, இறப்பு போன்ற தீட்டு நாள்களில் ருத்திராட்சம் அணியக் கூடாது. ருத்திராட்ச மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள்: திருவலஞ்சுழி, அச்சுதமங்கலம், தாராசுரம்
எத்தனை பெரிய கோடீஸ்வரர்கள் ஆனாலும், இறுதியில் வருவது ஈஸ்வரனின் திருவடிகளுக்குத்தான். ‘ருத்திராட்சம்’ எப்போதும் நம்மை இறைவனுக்கு அருகிலிருப்பது போல் உணர வைக்கும்.