மீன ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்!

மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்பவர்களே! செவ்வாய் 3-ல் வலுவாக இருக்கும் வேளையில் புத்தாண்டு பிறப்பதால், புதிய முயற்சிகள் வெற்றி பெறும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொந்தங்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள்.

வருடம் முழுவதும் சனி பகவான் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வேற்று இனத்தவர்கள் உதவுவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் வேலைச்சுமை இருந்தபடி இருக்கும்.

வருடம் முழுவதும் ராகு 4-லும் கேது 10-லும் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம், முடிவு எடுப்பதில் தடுமாற்றம் வந்து செல்லும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீக சொத்தைப் பெறுவதில் பிரச்னைகள் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.

14.4.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் தொடர்வதால் அதுவரை வேலைச்சுமை அதிகமாக இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும்.

19.5.19 முதல் 27.10.19 வரை ராசிநாதன் குருபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி, கிரகபிரவேசம் செய்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

28.10.19 முதல் 27.3.20 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் இருப்பதால் சிறு சிறு அவமானங்களும், விமர்சனங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் குற்றம், குறைகளை அடிக்கடி சொல்லிக் காட்டவேண்டாம். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

17.8.19 முதல் 9.9.19 வரை சுக்கிரன் 6-ல் அமர்வதால், அந்தக் காலகட்டத்தில் கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைக்குச் சிறு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புள்ளது. 12.11.19 முதல் 27.12.19 வரை செவ்வாய் 8-ல் அமர்வதால் சகோதரர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். செலவுகள் அதிகரிக்கும்.

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் உண்டாகும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று பெற்றோரை மகிழ்விப்பீர்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

வியாபாரத்தில் நீங்கள் தொட்டது துலங்கும் காலம் இது. உங்கள் நிலை உயரும். இழந்த செல்வாக்கை மீட்பீர்கள். தேங்கிக் கிடக்கும் சரக்குகள் விற்றுத் தீரும். பழைய பாக்கிகள் வசூலாகும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். சித்திரை, ஆவணி, தை மாதங்களில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் நிலை உயரும். புதிதாகப் பொறுப்பேற்கும் உயரதிகாரி உங்களைப் புரிந்துகொள்வார். முக்கியப் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார். ஆவணி, புரட்டாசி, தை மாதங்களில் பொறுப்புகள் அதிகரிப்பதுடன், சம்பளமும் உயரும்.

கலைஞர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமடைவீர்கள்.

இந்தப் புத்தாண்டு உங்களை மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வதுடன் உறவினர்கள் வியந்து மதிக்கும்படி வாழவைக்கும்.

பரிகாரம்

சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்குக் கொழுக்கட்டை நைவேத்தியம் செய்துப் பிரசாதமாக வழங்குவதும், மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வதும் நன்மை தரும்.

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*