உதவும் மனப்பான்மை உள்ளவர்களே! உங்கள் ராசிக்கு 6-ல் சந்திரனும் 3-ல் சூரியனும் இருக்கும் வேளையில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வழக்கு சாதகமாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
சுக்கிரன் ராசியில் இருக்கும்போது வருடம் பிறப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அநாவசிய செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகளை நல்ல வழிக்குக் கொண்டு வருவீர்கள்.
வருடம் முழுவதும் ராகு 5-ல் தொடர்வதால், சில நேரங்களில் மன இறுக்கம் வந்து நீங்கும். உறவினர்களில் சிலர் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். அன்புத் தொல்லையும் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை. மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகத்துக்காகச் சிலரின் சிபாரிசை நாடுவீர்கள்.
வருடம் முழுவதும் சனியும் கேதுவும் 11-ல் அமர்ந்திருப்பதால், சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய கசப்பான சம்பவங்கள் அவ்வப்போது மனதை வாட்டும்.
14.4.19 முதல் 18.5.19 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசாரமாக லாப வீட்டில் வலுவாக இருப்பதால், திடீர் பணவரவு உண்டு. பெரிய பதவிகள் தேடி வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தாழ்வுமனப்பான்மை நீங்கி நேர்மறை எண்ணங்கள் உருவாகும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிக்க வழி பிறக்கும்.
19.5.19 முதல் 27.10.19 வரை குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால், வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்களும் ஏற்படக்கூடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.
28.10.19 முதல் 27.3.20 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். நல்லவர்களின் ஆலோசனையால் நீங்கள் புதிய பாதையில் செல்வீர்கள். கணவன்-மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
24.7.19 முதல் 16.8.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
26.9.19 முதல் 11.11.19 வரை உள்ள காலகட்டத்தில் செவ்வாய் 8-ல் மறைவதால் கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்பட்டபடி இருக்கும். ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்ல பலனைத் தரும். விரும்பும் பாடப்பிரிவில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும்.
வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். கார்த்திகை, தை, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். ஆவணி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.
கலைத்துறையினர் கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.
இந்தப் புத்தாண்டு சின்னச் சின்ன இடையூறுகளை ஏற்படுத்தினாலும், மனதைப் பக்குவப்படுத்தி, வருட முடிவில் வசதிகளை ஏற்படுத்துவதாக அமையும்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையில் சரபேஸ்வரரை வழிபடுவதுடன், பார்க்கும் திறனற்றவர்களுக்கு உதவி செய்வது நல்லது.