தனுசு ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்!

உள்ளதை உள்ளபடி பேசுபவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். மகிழ்ச்சியான செய்திகள் வரும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பிள்ளைகள் கல்வி அல்லது உத்தியோகத்தின் பொருட்டு வெளிநாடு அல்லது வெளிமாநிலம் செல்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் சந்திரன் இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், எந்த ஒரு வேலையையும் போராடித்தான் முடிக்கவேண்டி வரும். பணம் வரும் என்றாலும் செலவுகளும் அதிகரிக்கவே செய்யும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வருடம் பிறக்கும்போது செவ்வாய் 6-ல் இருப்பதால், தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பிரபலங்களின் உதவியால் சில வேலைகளை முடிப்பீர்கள். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். வெளிநாடு சென்று வருவீர்கள். இழுபறியாக இருந்த பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வருடம் முழுவதும் சனிபகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். ஜன்மச் சனியாக தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். வழக்கை நினைத்துக் கவலையடைவீர்கள்.

வருடம் முடியும் வரை 1-ல் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால் முன்கோபம், மனதில் ஒருவித சஞ்சலம், எதிலும் ஆர்வமில்லாத நிலை, ஹார்மோன் பிரச்னை, தலைச்சுற்றல் வந்து செல்லும். கணவன் – மனைவிக்கிடையே வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வரக்கூடும். வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் கருத்துமோதல்களும் ஏற்படக்கூடும்.

ஆண்டுத் தொடக்கத்திலிருந்து 18.5.19 வரை குருபகவான் அதிசாரமாக ஜன்ம குருவாக நீடிப்பதால், அடுத்தடுத்து வேலைகள் இருந்தபடி இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். 19.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருப்பது அவசியம். கோயில்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

ஆனால், 28.10.19 முதல் 27.3.20 வரை குருபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் திடீர் பயணங்களால் ஏற்பட்ட வீண் அலைச்சல்கள், அலைக்கழிப்புகள் குறையும். முன்கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடவேண்டாம். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும்.

24.6.19 முதல் 9.8.19 வரை செவ்வாய் 8-ல் அமர்வதால் கணவன் – மனைவிக்கிடையே மனக்கசப்புகள் வரும். உங்கள் இருவருக்கிடையே வீண் சந்தேகத்தை ஏற்படுத்திப் பிரிவை உண்டாக்கச் சிலர் முயற்சி செய்வார்கள். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள்.

4.6.19 முதல் 5.7.19 வரை மற்றும் 29.3.20 முதல் 13.4.20 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். மற்றவர்கள் விஷயங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு விளையாட்டு மனப்பான்மை நீங்கி, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும்.

உத்தியோகத்தில் நல்ல திருப்பம் ஏற்படும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். வைகாசி மாதத்தில் புதிய வேலை கிடைக்கும்.

கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்பு வரும். வருமானம் உயரவும் வழி பிறக்கும்.

இந்தப் புத்தாண்டு ஓய்வில்லாமல் உழைக்க வைத்தாலும், தடைப்பட்ட காரியங்களை நிறைவேற்ற உதவி செய்வதாக இருக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்வதுடன், மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்த உதவி செய்யவும்.

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*