விருச்சிக ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்!

வேலைகளை உடனுக்குடன் முடிப்பவர்களே! உங்கள் ராசிக்கு 9-ல் சந்திரன் இருக்கும்போது தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், மற்றவர்கள் செய்ய முடியாத கடினமான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். அடுத்தடுத்து செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும்.

சூரியன் 6-ல் நிற்கும் போது வருடம் பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். வழக்கு வெற்றி அடையும். வேலை கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குக் குடும்பத்துடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள்.

வருடம் முழுவதும் பாதச்சனி இருப்பதால் குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் முரட்டுத் தனத்தை அன்பாக எடுத்துச் சொல்லி மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கண், காது வலி வந்து செல்லும். உடம்பில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும்.

வருடம் முழுவதும் கேது 2-லும், ராகு 8-லும் தொடர்வதால், பேச்சில் நிதானம் தேவை. எந்த ஒரு விஷயத்தையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னை வந்து போகும். இரவு நேரத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

வருடத் தொடக்கத்தில் இருந்து 18.5.19 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குரு அதிசாரத்தில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகளும் அடுத்தடுத்து ஏற்படும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்தும் வாய்ப்பு ஏற்படும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

19.5.19 முதல் 27.10.19 வரை குரு ஜன்ம குருவாக இருப்பதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். வீண் பழியும் வந்து நீங்கும்.

28.10.19 முதல் 27.3.20 வரை குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டிலேயே அமர்வதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

7.5.19 முதல் 23.6.19 வரை உங்களின் ராசிநாதனாகிய செவ்வாய் 8-ல் மறைவதால் மனஇறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயமும், எந்தக் காரியத்தை தொட்டாலும் தாமதமாக முடியும் போக்கும் உண்டாகும்.

11.5.19 முதல் 3.6.19 வரை மற்றும் 1.3.20 முதல் 28.3.20 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் அலைச்சல், செலவினங்கள், கணவன் – மனைவிக்கிடையே சந்தேகத்தால் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும்.

மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். சிலருக்கு அரசாங்கத்தால் கௌரவிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும்.

வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். உங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு இதுவரை ஏற்பட்ட பல சிக்கல்களும் நீங்கும். பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த தமிழ்ப் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி வைப்பதாக இருக்கும்.

பரிகாரம்

விசாக நட்சத்திரம் வரும் நாளில் முருகப்பெருமானை வழிபடுவதுடன், பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது சிறப்பான நன்மைகளைத் தரும்.

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*