துலாம் ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்!

இனிமையாகப் பேசுபவர்களே! உங்கள் ராசிக்கு 10-ல் சந்திரன் இருக்கும்போது தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், நிர்வாகத் திறனும் ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். இதுவரை நீங்கள் உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். வேலைக்குக் காத்திருப்பவர்களுக்கு புது வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அமையும்.குடும்பத்தில் அடிக்கடி மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.

ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை பிறக்கும். ஏமாந்த தொகை இனி கைக்கு வரும். கனிவான பேச்சால் காரியம் முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். பூர்வீகச் சொத்து பங்கைக் கேட்டு வாங்குவீர்கள்.

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சனியும், கேதுவும் வருடம் முழுவதும் தொடர்வதால், சோர்ந்து காணப்பட்ட நீங்கள், சோர்வு நீங்கி சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். பெயரும் புகழும் பெற்றுப் பிரபலமடைவீர்கள். நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் வாய்ப்பு ஏற்படும். வெளிநாட்டிலிருப்பவர்கள், நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யும் அமைப்பு உண்டாகும்.

வருடம் முழுவதும் ராகுபகவான் ராசிக்கு 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் செலவினங்கள் அதிகரிக்கும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் சிக்கல்கள் வரக்கூடும். ஆரோக்கியத்திலும் கவனம் தேவைப்படும்.வருட ஆரம்பம் முதல் 18.5.19 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசாரமாக 3-ம் வீட்டில் நிற்பதால் கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சுபச் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்குத் திருமணம் கூடிவரும். மகனின் போக்கில் நல்ல மாற்றம் தென்படும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

19.5.19 முதல் 27.10.19 வரை குருபகவான் 2-வது வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். ஆனால் 28.10.19 முதல் 27.3.20 வரை குரு 3-ம் வீட்டிற்குச் செல்வதால் காரியத் தடைகள் அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் போராடி முடிக்க வேண்டி வரும். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் ஏற்படக்கூடும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். 16.4.19 முதல் 11.5.19 வரை மற்றும் 4.2.20 முதல் 29.2.20 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

14.4.19 முதல் 6.5.19 வரை செவ்வாய் 8-ல் மறைவதால், உடன்பிறந்தவர்களால் நிம்மதியிழப்பீர்கள். கூடுதல் செலவுகளால் கையிருப்பு கரையும். சொத்துகள் வாங்கும்போது ஆவணங்களை ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்த்து வாங்கவும். மாணவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வெளிநாட்டில் படிக்க அழைப்பு வரும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யவும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் உறுதியற்ற நிலை உண்டாகும். சிலரால் ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆனால், எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாகும்.

கலைத்துறையினர் மற்றவர்களின் பேச்சை நம்பி பெரிய முடிவுகளை எடுக்கவேண்டாம்.

தமிழ்ப் புத்தாண்டு சுமைகளைச் சுமக்க வைத்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவதுடன், அபிராமி அந்தாதி போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். ஏழைப் பெண்களுக்கு வஸ்திர தானம் செய்வது நல்லது.

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*