மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர்களே! உங்கள் ராசிக்கு 11-ல் சந்திரன் இருக்கும்போது தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அடிப்படை வசதிகள் பெருகும். பிரபலங்களின் நட்பும் கிடைக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் விருந்தினர் எண்ணிக்கை அதிகரிக்கும். ராசிநாதன் புதன் ராசியை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்கள் ரசனை மாறும். உறவினர்களால் அனுகூலம் உண்டு.
வருடம் பிறக்கும்போது 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வீண் சந்தேகம் வேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவினருடன் மனக்கசப்பு வரும்.
வருடம் முழுவதும் சனியும், கேதுவும் 4-ம் வீட்டிலேயே நீடிப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வீட்டிலும் மனைவி, பிள்ளைகளுடன் இருக்கும் நேரம் குறையும். வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பழைய வாகனத்தை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். தாய்வழி சொத்துகளில் சிக்கல்கள் வரக்கூடும். மறதியால் பணம், விலை உயர்ந்த நகையை இழக்க நேரிடும். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். தேவையற்ற பழக்கங்களைத் தவிர்க்கவும்.
வருடம் முழுவதும் ராகு 10-ல் தொடர்வதால், சிறுசிறு அவமானம், மறைமுக எதிர்ப்புகள், வேலைச்சுமை வந்து செல்லும். தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.
இந்த வருடம் முழுவதும் குருபகவான் சரியில்லாததால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். தோலில் நமைச்சல், நரம்புச் சுளுக்கு வந்து செல்லும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். மற்றவர்களின் ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், பலமுறை யோசித்து ஏற்பது நல்லது. சொத்து வாங்கும்போது ஆவணங்களை கவனமாகப் பரிசீலித்து வாங்கவும். உணவு விஷயத்தில் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.
10.1.20 முதல் 3.2.20 வரை உள்ள காலகட்டத்தில் சுக்கிரன் 6-ல் மறைவதால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்படும். நீங்கள் எதைப் பேசினாலும்் அதை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். பண விரயம் உண்டாகும் என்பதால் கவனம் தேவை.
மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதற் காகச் சிரத்தை எடுத்துப் படிப்பீர்கள்.
வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்ட நஷ்டங்கள் நீங்கும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். கடையை நவீனப்படுத்துவீர்கள். தை மாதத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நடைபெறும். பங்குதாரர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள்.
உத்தியோகத்தில் ஒருபக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மற்றொரு பக்கம் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். வெகுநாள்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். ராகு ராசிக்கு 10-ம் வீட்டில் இருப்பதால் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும்.
கலைஞர்களுக்கு மூத்த கலைஞர்களால் ஆதாயம் உண்டாகும்.
இந்தத் தமிழ்ப் புத்தாண்டு வசதி வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், பதவி, புகழ் போன்றவற்றை வழங்குவதாகவும் அமையும்.
பரிகாரம்
வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, நெய்தீபம் ஏற்றி வழிபடுவதுடன், பசுவுக்கு ஊறவைத்த கொண்டைக் கடலையை உண்ணக் கொடுப்பது அளவற்ற நன்மைகளைத் தரும்.