எதையும் வெளிப்படையாகப் பேசுபவர்களே! சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்க்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனி சிறப்பாக நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால், உங்கள் ராசிக்கு 12-ல் சந்திரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், செலவுகள் அதிகரிக்கும். சேமிக்க நினைத்தாலும் முடியாது.
செவ்வாய் 10-ல் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், எதைத் தொட்டாலும் வெற்றியில் முடியும். சவாலான விஷயங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் விவாதங்கள் நீங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புது வேலை கிடைக்கும்.
வருடம் முழுவதும் சனியும் கேதுவும் 5-ல் இருப்பதால், முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், குடும்பச் சூழ்நிலையை அவர்களுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கவும். மகளின் திருமணத்துக்காகக் கடன் வாங்க நேரிடும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் இழுபறியாகி முடியும்.
வருடம் முழுவதும் ராகு லாபவீட்டில் இருப்பதால், ஷேர் மூலம் லாபம் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வழக்குகள் சாதகமாக முடியும். ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
வருடத் தொடக்கம் முதல் 18.5.19 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசாரமாக 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, மனை வாங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆனால், 19.5.19 முதல் 27.10.19 வரை உங்களின் ராசிக்கு குருபகவான் 4-ம் வீட்டில் அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்கவும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.
ஆனால், 28.10.19 முதல் 27.3.20 வரை 5-ம் வீட்டிற்கு குரு செல்வதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் எதிர்பார்த்த நிறுவனத்தில் அமையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
17.12.19 முதல் 9.1.20 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள் வந்து போகும். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். கணவன் – மனைவிக்கிடையே ஈகோ பிரச்னையால் சில சங்கடங்கள் ஏற்படும்.
மாணவர்கள் அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி தொடரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
வியாபாரத்தில் வருடப் பிறப்பின்போது சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். ஆனி, ஆவணி மாதப் பிற்பகுதி, புரட்டாசி, தை, மாசி மற்றும் பங்குனி மாதங்கள் சாதகமாக இருக்கும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால், புகழ் பெற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அதிக லாபம் சம்பாதிப்பீர்கள்.
உத்தியோகத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.
கலைஞர்களுக்குப் புதுப் புது வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் அதிகரிக்கும்.
இந்த புத்தாண்டு உங்களைச் சாதிக்க வைப்பதுடன், பொருளாதார ரீதியில் வளர்ச்சி தருவதாகவும் அமையும்.
பரிகாரம்
பிரதோஷ நாளில் நந்திக்குக் காப்பரிசி நைவேத்தியம் செய்து சிவபெருமானுக்கு வில்வதளத்தால் அர்ச்சனை செய்யவும். அன்னதானத்துக்கு உதவி செய்வது நல்லது.