கடக ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்!

அதிகாரத்துக்கு அடிபணியாதவர்களே! செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். புது வேலை கிடைக்கும். பணிகளை முடிப்பதில் இருந்த போராட்டங்கள் விலகி, உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கி, அமைதி நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். மகளின் திருமணத்தை விமரிசையாக நடத்தி முடிப்பீர்கள். ஆனால், உங்கள் ராசியிலேயே இந்த வருடம் பிறப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.

வருடம் முழுவதும் சனியும் கேதுவும் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், செல்வாக்கு உயரும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு, வேற்று மாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வருமானம் உயரும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும்.

வருடம் முழுவதும் ராகு 12-ல் இருப்பதால், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.

குருபகவான் ஆண்டு தொடக்கம் முதல் 18.5.19 வரை உங்கள் ராசிக்கு அதிசாரமாக 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் வீண் டென்ஷன், மனஉளைச்சல், செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். திட்டமிட்ட காரியங்களை சற்று அலைந்து திரிந்தே முடிக்கவேண்டி வரும்.

ஆனால் 19.5.19 முதல் 27.10.19 வரை குருபகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் செல்லும் இடமெல்லாம் செல்வாக்குக் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.

ஆனால் 28.10.19 முதல் 27.3.20 வரை குரு 6-ம் வீட்டில் மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அலைச்சலும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

22.11.19 முதல் 16.12.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வீண் சந்தேகம் வேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவினருடன் மனக்கசப்பு வரும்.

மாணவர்கள் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். நண்பர்களிடம் பழகுவதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

வியாபாரத்தில் முதலீடுகள் விஷயத்தில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யவும். கூட்டாகத் தொழில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வைகாசி, ஆவணி, தை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். வியாபார விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

உத்தியோகத்தில் நெருக்கடிகளும், பணிச்சுமையும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்கள் திறமையைக் குறைத்து மதிப்பிடுவார்கள். சம்பள உயர்வுக்காகப் போராடுவீர்கள். மார்கழி, தை மாதங்கள் சாதகமாக இருக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கலைஞர்கள் தங்களுடைய தனித் திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். மற்ற கலைஞர்களைப் பற்றி விமர்சனம் செய்யவேண்டாம்.

இந்தப் புத்தாண்டு சில பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், விடாமுயற்சியால் வெற்றி பெற வைப்பதாக இருக்கும்.

பரிகாரம்

ஏதேனும் ஒரு திங்கள்கிழமை திருப்பதிக்குச் சென்று வேங்கடேச பெருமாளை வழிபடலாம். மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான விடுதிகளுக்கு உதவி செய்வது சிறப்பு.

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*