மிதுன ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்!

சமாதானத்தை விரும்புபவர்களே! உங்கள் ராசிக்கு 2-ல் சந்திரன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். முக்கிய பிரமுகர்களை சரியான முறையில் பயன்படுத்தி பல வேலைகளை முடிப்பீர்கள். மற்றவர்களை நம்பாமல் நீங்களே நேரடியாகக் களத்தில் இறங்கி வேலை செய்வீர்கள்.

உங்கள் ராசிக்கு சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் அடுத்தடுத்து முடிப்பீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கோபம் குறையும். பணப்பற்றாக்குறை அகலும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வவளம் பெருகும்.

வருடம் முழுவதும் சனியும், கேதுவும் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே தொடர்வதால் கணவன் – மனைவிக்கிடையே கருத்து மோதல்கள் வரும். சந்தேகத்தால் இருவரும் பிரிய வேண்டி வரும். திடீர் நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வருடம் முழுவதும் ராகு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நீடிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். ஆன்மிக விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

வருடத் தொடக்கம் முதல் 18.5.19 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு அதிசாரத்தில் நிற்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்களை பேசித் தீர்ப்பீர்கள். கணவன் – மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும்.

குருபகவான் 19.5.19 முதல் 27.10.19 வரை 6-ம் வீட்டிலேயே மறைவதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டு பேசி தீர்க்கப் பார்க்கவும்.

ஆனால் 28.10.19 முதல் 27.3.20 வரை உங்கள் ராசிக்கு குருபகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் போட்டி, பொறாமைகள் நீங்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். குடும்பத்தில் இனி மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும்29.10.19 முதல் 21.11.19 வரை 6-வது வீட்டில் சுக்கிரன் மறைவதால் கணவன் – மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

22.3.20 முதல் 13.4.20 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்வதால் இந்தக் காலகட்டத்தில் வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.

மாணவர்களுக்கு விளையாட்டில் பதக்கம் கிடைக்கும். உயர்கல்வியிலும் வெற்றியுண்டு.

வியாபாரத்தில் பழைய கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிற்போக்கான நிலை மாறி, முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். வைகாசி, ஆவணி மாதங்களில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

உத்தியோகத்தில் உங்களை ஓரங்கட்ட நினைத்த உயரதிகாரியின் முயற்சியை முறியடிப்பீர்கள். இழந்த சலுகைகளைப் போராடி பெறுவீர்கள். வெகுநாள்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு வைகாசி, கார்த்திகை மாதங்களில் கிடைக்கும்.

கலைஞர்களே! வசதி, வாய்ப்புகள் உயரும். அதே நேரம் வீண் வதந்திகளுக்கும் பஞ்சமிருக்காது.

இந்தப் புத்தாண்டு உங்களைப் பல வகைகளிலும் உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம்

புதன்கிழமைகளில் விஷ்ணு சஹஸ்ர நாமம் பாராயணம் செய்வதுடன், பசுமாட்டுக்கு ஊறவைத்த பச்சைப் பயறு கொடுப்பது சிறப்பான பலன்களைத் தரும்.

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*