எல்லோரையும் அன்புடன் நேசிப்பவர்களே! புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் சுக்கிரன் 10-ம் வீட்டில் வலிமையாக அமர்ந்திருப்பதால், அமைதியாக இருந்து சாதிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். தடைப்பட்டு நிற்கும் காரியங்களெல்லாம் கைகூடும். பழைய கடன் தீரும். வருமானம் உயரும். உங்கள் ராசிக்கு மூன்றாவது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் முடியாததையும் முடித்துக் காட்டுவீர்கள். தைரியம் பிறக்கும்.
புதன் லாப வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் ஆண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். உங்களின் நிர்வாகத்திறமை அதிகரிக்கும். பெரிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். வருடம் முழுவதும் சனியும் அஷ்டமத்துச் சனியாகத் தொடர்வதால் ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
வருடம் முழுவதும் ராகு உங்கள் ராசிக்கு 2-ல் தொடர்வதாலும், 8-ல் கேது நீடிப்பதாலும் அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிலும் பிடிப்பற்ற போக்கு வந்து செல்லும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது.
வருடத் தொடக்கம் முதல் 18.5.19 வரை குரு அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் மறைந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. திடீர் செலவுகளும் ஏற்படும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள்.
19.5.19 முதல் 27.10.19 வரை குருபகவான் 7-வது வீட்டிலேயே தொடர்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளாலும், நண்பர்கள், உறவினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். கணவன் -மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
ஆனால், 28.10.19 முதல் 27.3.20 வரை குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல், வதந்திகள், இனம்புரியாத கவலைகள், ஒருவித பய உணர்வு வந்து செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்தை சரியாகப் பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும்.
5.10.19 முதல் 28.10.19 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6-வது வீட்டில் சென்று மறைவதால் சிறு சிறு விபத்துகள், வாகனம் பழுதாகுதல், வீடு பராமரிப்புச் செலவுகள் மற்றும் காய்ச்சல், சளி தொந்தரவு வந்து நீங்கும் 9.2.20 முதல் 21.3.20 வரை செவ்வாய் உங்களுடைய ராசிக்கு 8-வது வீட்டில் மறைவதால் வீடு, மனை வாங்குவது விற்பது எதுவாக இருந்தாலும் கவனமாக இருங்கள் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் பெருகும். சோம்பல் நீங்கும். கெட்டப் பழக்கங்கள் விலகும். மதிப்பெண்கள் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் நஷ்டப்பட்ட நிலை மாறும். குறைந்த வாடகையில் பெரிய கடை அமையும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் புதிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். ஐப்பசி மாதத்தில் வராது என்றிருந்த பாக்கித் தொகை வந்து சேரும்.
உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மேலதிகாரி உங்கள் திறமையை அங்கீகரிப்பார். பதவி உயர்வுக்காக எழுதும் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வெகுநாள்களாக தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கிடைக்கும்.
கலைஞர்களே! கற்பனைத்திறன் அதிகரிக்கும். அயல்நாட்டு நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும்.
இந்தப் புத்தாண்டு உங்களுக்குப் பிரகாசமாக இருக்கும்.
பரிகாரம்
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து அர்ச்சனை செய்வதுடன், நடக்க முடியாதவர்களுக்கு முடிந்த உதவி செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.