மேஷ ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்!

சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களே! உங்கள் ராசிக்கு 4-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், சமுதாயத்தில் பிரபலமடையும் வாய்ப்பு ஏற்படும். பணப் பற்றாக்குறை நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த மெல்லிய இடைவெளி மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களைக் குறை கூறும் உறவினர்களை இனம் கண்டு ஒதுங்கிச் செல்வீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் நடைபெறும். சுக்கிரனும் புதனும் சாதகமான வீட்டில் இருப்பதால், சோர்வு நீங்கி மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். பழையக் கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

இந்த வருடம் முழுவதும் ராகு 3-ல் தொடர்வதால், மனவலிமை அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். உங்களிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த நண்பர், உங்களைப் புரிந்துகொண்டு வலிய வந்து பேசுவார்.

சனிபகவான் 9-ல் தொடர்வதால், தன்னம்பிக்கை பிறக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் ஏற்படும். ஆண்டு முழுவதும் கேதுவும் 9-ம் வீட்டிலேயே இருப்பதால், அதிகரிக்கும் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கடந்தகால இழப்புகளை நினைத்து அவ்வப்போது கஷ்டப்படுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். வழக்குகளில் வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

வருடத் தொடக்கம் முதல் 18.5.19 வரை குரு அதிசாரத்தில் 9-ம் வீட்டில் இருப்பதால், எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். 19.5.19 முதல் 27.10.19 வரை குரு 8-ல் அமர்வதால், அடிக்கடி மனக் கவலைகள், பிறரிடம் நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தின் காரணமாக நல்லவர் சிலரின் நட்பை இழக்க நேரிடும். குடும்பத்தில் நிம்மதியற்ற போக்கு காணப்படும். ஆனால், 28.10.19 முதல் 27.3.20 வரை குரு 9-ம் இடத்தில் அமர்வதால், தடைகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். தள்ளிக்கொண்டே போன சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நடைபெறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை அமையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

10.9.19 முதல் 4.10.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

28.12.19 முதல் 8.2.20 வரை செவ்வாய் 8-ம் இடத்தில் இருப்பதால், உறவினர்களுடன் மோதல் ஏற்பட்டு நீங்கும். செலவுகளும் பயணங்களும் அதிகரிக்கும்.

மாணவர்கள் சிரத்தை எடுத்துப் படிக்கவேண்டும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். தேங்கிக் கிடக்கும் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆவணி, புரட்டாசி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்துகொண்டாலும், மேலதிகாரி குறைகூறத்தான் செய்வார். வேலைச்சுமை அதிகரிக்கும். ஆவணி மாதத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு மாசி மாதத்தில் புது வேலை கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

கலைஞர்கள் கிடைக்கக்கூடிய சின்னச் சின்ன வாய்ப்புகளையும் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.

இந்தப் புத்தாண்டில் தொடர் முயற்சியின் மூலம் காரியங்களை முடிக்கவேண்டி வரும். இடைவிடாத உழைப்பு மட்டுமே லட்சியத்தை அடையச் செய்யும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடுவதும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதுடன் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வதும் நல்லது.

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*