பத்திரிகையாளரான நயன்தாராவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்களான ஜெயப்பிரகாஷ் – மீரா கிருஷ்ணன் முடிவு செய்கின்றனர். ஆனால் திருமணத்தின் மீது அதீத நாட்டம் இல்லாத நயன்தாரா சென்னையில் இருந்து தனது பாட்டி வீட்டுக்கு சென்று விடுகிறார்.
கண் தெரியாத நயன்தாராவின் பாட்டியை யோகி பாபு கவனித்துக் கொள்கிறார். அங்கு சிறுவன் ஒருவனையும் நயன்தாரா சந்திக்கிறார். தனது பாட்டி வீட்டில் தங்கியிருக்கும் நயன்தாராவுக்கு இரவில் ஏதோ கருப்பு உருவம் அங்கு இருப்பது போலவும், அது தன்னை பின்தொடர்வதாகவும் தோன்றுகிறது. அது ஒருவித பயத்தையும் உண்டுபண்ணுகிறது. ஒருகட்டத்தில் பாட்டி மேலே இருந்து கீழேவிழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பின்னர் சிகிச்சை பலனின்றி பாட்டி இறந்துவிடுகிறார்.
மறுபுறத்தில் இதேபோன்று சில மர்ம மரணங்கள் நிகழ்கிறது. இதில் கலையரசனுக்கு சம்பந்தப்பட்ட ஒருவரும் இறந்துவிட, இந்த மரணங்கள் பற்றி கலையரசன் தகவல் சேகரிக்கிறார்.
கடைசியில், மர்ம மரணங்களுக்கு பின்னால் இருக்கும் அமானுஷ்ய சக்தி எது? நயன்தாரா பார்க்கும் நிழல் உருவம் என்ன? கலையரசனுக்கும், நயன்தாராவுக்கும் என்ன தொடர்பு? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இருவிதமான தோற்றத்தில் வந்து நயன்தாரா
அவரது வேலையை சிறப்பாக செய்துவிட்டு போயிருக்கிறார். ஒரு தோற்றத்தில் நகரத்து சாயலிலும், மற்றொரு தோற்றத்தில் கிராமத்து பெண்ணுக்குண்டான சாயல், பேச்சு என வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். கலையரசன் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். பாட்டியாக வரும் குலப்புள்ளி லீலா, யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், மாதீவன், கேப்ரெல்லா என மற்ற கதாபாத்திரங்களும் திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.
எச்சரிக்கை படத்திற்கு பிறகு ஒரு முழு நீள த்ரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார் சர்ஜூன். முதல் பாதி காமெடி கலந்த திகிலாகவும், இரண்டாவது பாதி திகில் கலந்த செண்டிமெண்ட் காட்சிகளாகவும் இருக்கிறது. பொழுபோக்கு அம்சங்கள் குறைவாக இருந்தாலும், படம் முழுக்க பயமுறுத்தும் காட்சிகளாகவே நகர்கிறது. படத்தின் காட்சிகளுக்கு சுந்தரமூர்த்தியின் இசை உயிர்ப்பாக அமைந்திருக்கிறது.
சுந்தரமூர்த்தி.கே.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. குறிப்பாக இதயத்துடிப்பு போன்ற மெல்லிய இசை திகிலை கூட்டுகிறது. சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. கார்த்திக் ஜோகேஷின் படத்தொகுப்பு கச்சிதம்.
மொத்தத்தில் `ஐரா’ திகில்.