சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்!

ஒரு நாள் கயிலாய மலையில் சிவபெருமானும், பார்வதியும் வீற்றிருந்தனர். அப்பொழுது பார்வதி தேவி, “உங்களை வழிபடுவதற்கு மிக உகந்த நாள் எது?” என்று ஈசனிடம் கேட்டாள்.

அதற்கு சிவபெருமான், “தேவி இரவு வேளையில் வரும் நான்கு ஜாம வேளையிலும் கண் விழித்திருந்து, உபவாசத்துடன் நீ என்னை பூஜித்து வழிபட்டாய். அந்த மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளே எனக்கு மிகவும் பிரியமானது.அது மகா சிவராத்திரி தினம். அந்த நாளில் உணவருந்தாமல் இருந்து, நான்கு ஜாமங்களிலும், நான்கு கால பூஜை நடத்த வேண்டும். வாசனை மலர், அலங்காரத்தை விடவும், வில்வ அர்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது” என்றார்.

நாள், ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஆலயத்திற்குச் சென்று ஈசனை வழிபட வேண்டும். தொடர்ந்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். இரவு வீட்டிலேயே நான்கு ஜாமங்களிலும் நான்கு கால பூஜையை முறைப்படி செய்யலாம். அப்படி செய்ய முடியாதவர்கள், சிவாலயங்களில் நடைபெறும் சிவ பூஜையில் கலந்து கொள்ளலாம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது கூடுதல் பலன் தரும்.

வீட்டில் பூஜை செய்பவர்கள், பஞ்சாட்சர மந்திரமான ‘நமசிவாய’, ‘சிவாய நம’ வார்த்தைகளை உச்சரித்தபடி இருக்க வேண்டும்.

மகா சிவராத்திரியின் முதல் ஜாமத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் ஜாமத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் ஜாமத்தில் ரிஷபாரூட மூர்த்தி (சந்திரசேகரர்)யையும் வழிபட வேண்டும். நான்கு கால பூஜைக்கு முன்பாக நடராஜரையும், பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமானையும் வழிபட வேண்டும். கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவ புராணம், திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞான நூல்களைப் படிப்பது, மிகுந்த புண்ணியம் தரும்.

மறுநாள் அதிகாலையில் நீராடி, இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து பூஜிக்க வேண்டும். ஏழை எளியவர்களுக்கு தானம் செய்து சிவராத்திரி விரதத்தை முடிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*