அருண்விஜய்யின் “தடம்”திரைவிமர்சனம்!

இன்ஜினியர், ரவுடி என இரு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் அருண் விஜய். இன்ஜினியரான அருண் விஜய்யும், தன்யா ஹோப்பும் காதலிக்கிறார்கள். தனது சேமிப்பு அனைத்தையும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதில் முதலீடு செய்கிறார் இவர்.

யோகி பாபுவுடன் சேர்ந்து சிறுசிறு திருட்டு வேலைகளை பார்த்து வருகிறார் ரவுடி அருண்விஜய். சீட்டு விளையாட்டில் பணத்தை பறிகொடுக்க, யோகி பாபுவை ஒரு கும்பல் பிடித்து செல்கிறது. யோகி பாபுவை மீட்பதற்காக பணம் சேர்க்கும் முயற்சியில் இறங்குகிறார். அப்போது ஸ்மிருதி வெங்கட் – அருண் விஜய் இடையே பழக்கம் ஏற்படுகிறது.

இந்த நிலையில், அருண் விஜய்யால் ஒருவர் கொல்லப்படுகிறார். இதையடுத்து இரண்டு அருண் விஜய்யையும் போலீசார் கைது செய்கிறார்கள். இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக வித்யா பிரதீப் வருகிறார். முன்பகை காரணமாக போலீஸ் அதிகாரி பெஃப்சி விஜயன் இன்ஜினியர் அருண் விஜய்யை பழிவாங்க நினைக்கிறார்.

கடைசியில் எந்த அருண் விஜய் இந்த கொலையை செய்தார்? ஒரே மாதிரியாக இருக்கும் இருவருக்கும் என்ன தொடர்பு? இந்த வழக்கு என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.இன்ஜினியர், ரவுடி என இரு கதாபாத்திரத்திலும் ஒரே மாதிரியான தோற்றத்தில் வந்தாலும், நடிப்பில் வித்தியாசத்தை காட்டி பளிச்சிடுகிறார் அருண் விஜய்.

குறிப்பாக இன்ஜினியராக வரும் கதாபாத்திரத்தில் இன்னும் அழகானவராக தோன்றும் அருண் விஜய் அனைவரையும் கவர்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தில் அழகாக வந்து செல்கிறார் தன்யா ஹோப். ஸ்மிருதி வெங்கட் தனது கண் பார்வையாலேயே கவர்கிறார். அருண் விஜய்யுடனான காதல் காட்சியிலும், அவர் மீதான நம்பிக்கையிலும் ரசிக்கும்படியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

வித்யா பிரதீப் நேர்மையான போலீஸாக சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முழுக்க வரும் அவரது கதாபாத்திரம் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. யோகி பாபு சில காட்சிகளில் வந்தாலும் தனது காமெடியால் ரசிக்க வைக்கிறார். பெஃப்சி விஜயன் வில்லத்தனத்தில் தனது அனுபவ நடிப்பையும், சேனியா அகர்வால் நீண்ட இடைவேளைக்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

மீரா கிருஷ்ணன் முதல்முறையாக இதுபோன்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் பார்க்க முடிகிறது. சாம்ஸ், ஆடுகளம் நரேன் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.

த்ரில்லர் கதைக்கு பெயர் போனவர் மகிழ் திருமேனி என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில், இந்த படத்தையும் ரசிக்கும்படியாக கிரைம் த்ரில்லாக உருவாக்கி இருக்கிறார். முதல் பாதி காதல், காமெடி என நகர, இரண்டாவது பாதியில் காட்சிகள் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்படியாக நகர்வது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

படத்தின் முடிவில் காட்டப்படும் இரண்டை பிறவிகள் பற்றிய தகவல் வியப்பை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் இயக்குநர் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். என்.பி.ஸ்ரீகாந்த்தின் படத்தொகுப்பு கச்சிதம்.அருண்ராஜ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். எஸ்.கோபிநாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. மொத்தத்தில் `தடம்’ தரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*