கடன் தொல்லை நீங்க பக்தர்களுக்கு அருளும் நரசிம்மர் அவதரித்த கோயில்!

திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்று சொல்வார்கள், உலகில் மனிதன் சிந்திக்க தொடங்கிய நாள்முதல் இருக்கும் நம்பிக்கை இந்த உலகிலிருக்கும் அனைத்து படைப்புகளும் இறைவனால் படைக்கப்பட்டது என்பதே. ஆனால் இதை மறுப்போரும் அக்காலம் முதல் இக்காலம் வரை இருந்தே வருகின்றனர். நமது பாரத வரலாற்றில் தங்களின் அளவுகடந்த பக்தியால் இறைவனை தரிசித்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் பிரகலாதன் ஆகும்.

பிரகலாதனுக்கு காட்சியளிப்பதர்காக விஷ்ணுபெருமான் நரசிம்மராக அவதரித்த “அகோபிலம் ஸ்ரீ பிரகலாத வரதன் லட்சுமி நரசிம்மர் கோயில்” சிறப்புகளையும் இந்த கோயிலில் வழிபட்டால் ஏற்படும் நன்மைகளையும் பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

ஆந்திர மாநிலம் கர்னூலில் அமைந்துள்ளது அகோபிலம். அகோபிலம் நரசிம்மர் ஆலயம் புகழ்பெற்ற திவ்ய தேச ஸ்தலங்களில் ஒன்றாகும். கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த நரசிம்மர் ஆலயம் 3000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. ‘அஹோ’ என்றால் சிம்மம் என்றும் ‘பிலம்’ என்றால் குகை என்றும் பொருளாகும், இந்த பகுதியின் பெயரின் நரசிம்மரின் குகை என்ற பொருளிலேயே அழைக்கப்படுகிறது. 108 திவ்ய தேசங்களின் ஒன்றான அகோபில லட்சிமி நரசிம்மர் கோயில் திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றது ஆகும்.

அகோபில கோயில் அமைந்துள்ள கருடாத்திரி மலையில் மலையடிவாரம் முதல் உச்சி வரை 9 நரசிம்மர் ஆலயங்கள் அமைதுள்ளது. இந்த மலையே நரசிம்மருக்காக அர்பணிக்கப்பட்டது என்றால் மிகையாகாது.

தனது அதீத தவத்தால் தன் மரணம் மனிதர்களாலோ, அல்லது விலங்குகளாலோ நிகழக்கூடாது என்ற வரம்பெற்ற இரண்யகசிபு மனிதர்களையும், தேவர்களையும் துன்புறுத்தி வந்தான். மேலும் தேவர்கள் உட்பட அனைவரும் தன்னையே கடவுளாக வணங்க வேண்டும் என்று அனைவரையும் வணங்கச் சொன்னான். ஆனால் இரண்யகசிபுவின் மகனான பிரகலாதன் மட்டும் நாராயணன் நாமத்தை தவிர வேறு எவரையும் வணங்க மாட்டேன் என்று தனது தந்தையின் உத்தரவை ஏற்காமல் விஷ்ணுவை வணங்கி வந்தான். பிரகலாதனை பல விதத்தில் துன்புறத்த ஏற்பாடு செய்தும், விஷ்ணுவின் கருணையால் காப்பாற்றப்பட்டான். கோபமடைந்த இரண்யன், ”உன் நாராயணன் எங்கிருக்கிறான்” எனக் கேட்க, ”அவர் தூணிலும் இருப்பார்” என்றான் பிரகலாதன். இரண்யகசிபு ஆவேதத்துடன் தூணை இடிக்க, தூணை பிளந்து விஷ்ணு பகவான் சிங்க தலையுடனும் மனித உடலுடனும் நரசிம்மராக வெளிப்படுகிறார் . இரண்யகசிபுவை தன் மடியில் வைத்து தன்னுடைய கூரிய நகங்களால் இரண்யகசிபுவின் வயிற்றை கிழித்து கொல்கிறார். விஷ்ணு பகவான் நரசிம்மராக அவதரித்தது இந்த திருத்தலத்திலேயே ஆகும்.

விஷ்ணுபகவானின் நரசிம்மர் அவதாரத்தை காணவிரும்பிய கருடன் இந்த மலையில் கடும் தவம் இயற்றி இறைவனை நரசிம்ம கோலத்தில் கண்ட மலை என்பதால் இந்த மலை கருடாத்திரி என்று பெயர்பெற்றது. இந்த கருடாத்திரி மலையில் அமைந்துள்ள 9 நரசிம்மர் கோயில்களும் நவகிரகங்கள் அம்சம் கொண்ட கோயில்களாக இருக்கின்றன அவை 1. பார்கவ நரசிம்மர் – சூரியன் 2. காரஞ்ச நரசிம்மர் – சந்திரன் 3. ஜுவாலா நரசிம்மர் – செவ்வாய் 4. பாவன நரசிம்மர் – புதன் 5. அஹோபில நரசிம்மர் – குரு 6. மாலோல நரசிம்மர் – சுக்கிரன் 7. யோகானந்த நரசிம்மர் – சந்திரன் 8. வராக (குரோத) நரசிம்மர் – ராகு 9. சக்ரவட நரசிம்மர் – கேது ஆகிய இந்த ஒன்பது கோயில்களிலும் வழிபடுபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் நீங்குவதோடு, கிரக பெயர்ச்சிகளால் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும்.

எதிரிகளின் தொல்லை, பில்லி, சூனியம், துஷ்ட சக்தி தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் அனைத்து தொல்லைகளும் சூரியனை கண்ட பனி போல உருகி காணாமல் போய்விடும் என்பது உறுதியாகும். இங்கிருக்கும் நரசிம்மர் லட்சுமி சமேதகாக காணப்படுவதால் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் இலட்சுமி நரசிம்மரை தரிசித்து தங்களில் கடன் தீர வழிகாட்டுமாறு மனமுருகி பிராத்தித்தால் எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும் அதனை அடைக்கும் வழியை நரசிம்மமூர்த்தி தனது பக்தர்களுக்கு அருளுவார்.

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு செல்வதற்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்சல் எக்ஸ்பிரஸ், எக்மோரில் இருந்து கச்சிகுடா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரண்டு ரயில் சேவைகள் உள்ளன. மலையடிவாரத்தில் இருக்கும் கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும். மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கிறது. மலைமீதிருக்கும் கோயிலுக்கு செல்ல மாலை 6 மணிக்கு மேல் யாருக்கும் மலையேற்ற அனுமதி இல்லை. எனவே கோயிலுக்கு செல்ல திட்டமிடுபவர்கள் இந்த நேரங்களை கவனத்தில் கொண்டு திட்டமிடுவது நல்லதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*