தானாய் தோன்றிய சுயம்பு லிங்கம் – குகை முழுதும் நிலவும் மர்மங்கள்!

இந்தியாவின் பல கோயில்களில் சுயம்புவாக தோன்றிய லிங்க வடிவங்களை பார்த்திருப்போம். ஆனால் ஒரு குகையில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நந்தி ஆகிய தெய்வங்களின் சுயம்பு வடிவம் தோன்றி பக்தர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது இந்த அதிசய குகையை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து 140 கிமீ தொலைவிலுள்ள ரியாசி மாவட்டத்தில் பெளனி என்ற கிராமத்தில் உள்ளது சிவ் கோரி என்ற குகை.

இந்த குகையில் சுயம்புவாக தோன்றியிருக்கும் லிங்கத்தின் மேல் எப்பொழுதும் நீர் சொட்டியபடியே உள்ள அதிசயம் நிகழ்கிறது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்று இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குகையில் சிவபெருமானின் சுயம்பு வடிவம் மட்டுமல்லாது பார்வதி தேவி, விநாயகர், முருகன், நந்தி, சுதர்சன சக்கரம், காமதேனு ஆகிய தெய்வங்களின் சுயம்பு வடிவங்கள் காணப்படுகிறது. இந்த குகையின் மேற்புறம் பாம்பு தோல் போன்ற வடிவில் இருக்கிறது.

கோரி என்றால் குகை என்று பொருள். சிவனின் குகை என்ற அர்த்தத்தில் அழைக்கப்படும் இந்த குகையை உருவாக்கியதே சிவன் தான் என்கிறது ஸ்தல வரலாறு.

பஸ்மாசுரன் என்ற அசுரன் சிவனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான். பஸ்மாசுரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் பஸ்மாசுரனின் முன் தோன்றினார். தான் எவர் தலையில் கை வைத்தாலும் அவர் எதிர்ந்து சாம்பலாகிவிட வேண்டும் என்று வரத்தை பஸ்மாசுரன் கோரினான். சிவபெருமானும் அவன் கேட்ட வரத்தை வழங்கினார். சிவபெருமான் வரம் வழங்கியது உண்மைதானா என்று பஸ்மாசுரனுக்கு சந்தேகம் தோன்றியது. தனது சந்தேகத்தை சோதித்து பார்பதற்காக சிவபெருமானின் தலையிலேயே கை வைக்க முயன்றான் பஸ்மாசுரன்.

பஸ்மாசுரனிடமிருந்து தப்பிக்க ஒரு குகையை உருவாக்கி அதில் மறைந்துகொண்டாராம் சிவபெருமான். சிவேபெருமானை காப்பாற்ற எண்ணிய திருமால் மோகினி அவதாரம் எடுத்து அசுரனின் முன் நின்றார். அவள் அழகில் மயங்கி அசுரன் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதம் வேண்டினான். அதற்கு ஒப்புக்கொண்ட மோகினியும் தன்னைத் தவிர வேறு பெண்ணைக் கண்டுகொண்டும் பார்க்கமாட்டேன் என தலையில் அடித்து சத்தியம் செய்துதர வேண்டினாள். அவ்வாறே சத்தியம் செய்ய முற்பட்ட பஸ்மாசுரன் தன் தலை மீது கை வைத்து சத்தியம் செய்ய அவனே பஸ்மமானான்.

சிவபெருமான் உருவாக்கிய குகை இது தான் என்றும் இன்றுவரை சிவபெருமான் இந்த குகையில் தவம்புரிவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்த குகை அமர்நாத் பனி லிங்க குகை கோயில் வரை செல்வதாகவும் இதில் சென்ற பல சாதுக்கள் இன்றுவரை திரும்பி வரவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த குகையில் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில் கிருஷ்ண பெருமானின் உலக வாழ்வு முடிவை அடுத்து பாண்டவர்கள் சொர்கத்திற்கு செல்ல இந்த வழியில் தான் சென்றனர் என்றும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி இங்கு மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த குகையை தரிசித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*